RSS

பிளஸ் X மைனஸ் = மைனஸ்

30 ஆக

சிறுகதை: அசின் சார், கழுகுமலை.திருநெல்வேலி ஒருங்கிணைந்த பேருந்து நிலையம்.

அரசு விரைவுப் பேருந்து நிற்கும் பிளாட்பாரம்.

சென்னை செல்வதற்காகக் காத்திருந்தேன். வரும் பஸ்களெல்லாம் சென்னை, சென்னை என்றுதான் வந்து நிற்கின்றன. இருந்தாலும் நான் ஏற வேண்டிய சென்னை பஸ்சை காணோம்.

பாளை தூய சவேரியார் கல்லூரி தமிழ்த்துறையில் “வியாழ வட்டம்” என்றொரு இலக்கிய நிகழ்வு. அதில் எனக்கு ஒரு மணிநேர உரை கொடுத்திருந்தார்கள். தலைப்பு, “மக்களிலே பதடியோன்?” என்பது. பாரதிதாசன் எழுதிய பாண்டியன் பரிசில் உள்ள வரி அது. சுயநலம் பார்ப்போரை அக்கதையில் வரும் வேலன் என்பவன் பதடி அதாவது ஒன்றுக்கும் உதவாத பதர் என்கிறான். அதற்கொத்த இலக்கியச் சான்றுகளும், இயல்பு வாழ்க்கைச் சான்றுகளும் சொல்லி முடித்தேன். மாணவர்கள் நன்கு ரசித்தார்கள். பேராசிரியர்கள் வாழ்த்தினார்கள். விடைபெற்றுத் திரும்பும் போது, நான் சென்னை செல்வதற்கான அரசு விரைவுப் பேருந்தின் ரிசர்வேசன் டிக்கெட்டையும் கொடுத்தார்கள். அனைவருக்கும் நன்றி கூறிவிட்டுப் பேருந்து நிலையம் வந்து சேர்ந்தேன்.

அரை மணி நேரமாகிவிட்டது. பஸ் இன்னும் வராததால் சலிப்புடன் நின்று கொண்டிருந்தேன். தடம் எண் 180V. அப்போதுதான் உள்ளே வந்து கவுண்டரில் நின்றது. 180V சென்னை என்பதைப் பார்த்தவுடன் முகமலர்ச்சியுடன் பேருந்தை நோக்கி விரைந்தேன். முன் பக்கமிருந்த கதவைத் திறந்து கண்டக்டர் வெளியே வந்தார். என்னைப் பார்த்தவுடன்,

“ரிசர்வேசன் டிக்கெட்டா?” என்றார்.

“ஆமாம்” என்றதும் டிக்கெட்டைக் கேட்டார்.

கையிலிருந்த பிரீப் கேஸை கால்களுக்கிடையே கீழே வைத்து விட்டு, சட்டையின் மேல் பாக்கெட்டிலுள்ள டிக்கெட்டை எடுத்து நீட்டினேன். அதைப் பார்த்தவர்,

“ப்ச்சூ, இது 6 மணி பஸ்சுக்கான டிக்கெட். எங்க டைம் 6.30” என்றதும் ஆடிப்போனேன்.

பஸ்ஸைத் தவற விட்டு விட்டோமோ என்ற பயம் புதிதாய் தொற்றிக்கொள்ள,

“அப்போ நான் ஏற வேண்டிய பஸ்…?” என்று ஏமாற்றத்துடன் அவரை கேட்டேன்.

“பதறாதீங்க ஸார்! டிப்போவுல ரெகுலர் சர்வீஸ் நடந்துக்கிட்டு இருந்தது. அநேகமா இப்போ வர்ற நேரந்தான். வந்ததும் கண்ணாடியில பாருங்க டைம் எழுதியிருக்கும்.” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே,

“அதோ, உங்க பஸ் வந்திடுச்சே!” என்றார் மகிழ்ச்சியுடன்.

“தாங்க்ஸ் ஸார்” என்று சொல்லி விட்டு வேகமாக அந்த பஸ்ஸை நோக்கிச் சென்றேன்.

அருகில் சென்றதும் 180V சென்னை என்பதையும், முன் கண்ணாடியில் சுண்ணாம்பால் 18.00 என்று எழுதியிருந்ததையும் பார்த்து நிம்மதியடைந்தேன். பலரும் அந்த பஸ்சின் வாசல் அருகே முண்டியடித்துக் கூடினர். வாசலில் நின்ற கண்டக்டர், “பொறுங்க பொறுங்க, சென்னை எங்கேயும் போகாது, நம்ம வண்டியும் உங்கள விட்டுட்டுப் போகாது.” என்று சொல்லிக்கொண்டே, பயணச்சீட்டு பெற்றவர்கள் ஒவ்வொருவரையும் பரிசோதித்து உள்ளே ஏற்றத் தொடங்கினார். நானும் ஏறினேன்.

ஏறும் போதே டிரைவர் சீட்டிற்கு முன்னதாக ஊதுவத்தி ஸ்டேண்டில் புகையைக் கக்கிக் கொண்டிருந்த பத்தியின் நறுமணம் என்னை வரவேற்றது. அதை உள்ளிழுத்துக் கொண்டே உள்ளே நுழைந்தேன். டிக்கெட்டில் சீட் நம்பர் 20 என்று போட்டிருந்தது. பார்வையால் நோட்டமிட்டேன்.

அந்ந்ந்ந்த சீட் வலப் புறத்தில் சன்னலோஒரமாய் இருந்தது. அருகில் சென்று பிரீப் கேஸை என் சீட்டிற்கு எதிர் புறத்தில் உள்ள லக்கேஜ் கேரியரில் வைத்தேன். அப்போதுதானே உட்கார்ந்த இடத்திலிருந்தபடியே அவ்வப்போது அதைக் கவனித்துக் கொள்ள முடியும். வைத்து விட்டு என் சீட் பக்கம் திரும்பினேன். சீட்டின் மேல் பகுதியில் போர்த்தியிருந்த உறை, எண்ணெய்ச் சிக்கு அழுக்குப் படிந்து கருப்பாக இருந்தது. பக்கத்து சீட்டைப் பார்த்தேன். அது ஓரளவு நன்றாக இருந்தது. இதுவரை யாரும் அந்த சீட்டிற்கு வரவில்லை. டக்குனு ஒரு யோசனை. அந்த உறையைக் கழற்றி என் சீட்டிற்கும், என் சீட் உறையைக் கழற்றி அந்த சீட்டிற்கும் மாட்டி விட்டு, நான் என் சீட்டில் உட்கார்ந்தேன்.

உப்ப்ப்பா! – பெருமூச்சிதான். அரைமணி நேரமாய் நின்று சோர்ந்து போன கால்கள் அல்லவா? எத்தனை முறைதான் வலப்புறமும் இடப்புறமும் போகும் மனித உருவங்களையும், வந்து வந்து கிளம்பிச் சென்ற பஸ்களையும் பார்த்துக் கொண்டு இருப்பது?

ம்ம்ம் அலுப்பை மறந்து சீட்டிலுள்ள கை வைக்கும் ஸ்டேண்டைக் கவனித்தேன். இடது பக்க ஸ்டேண்டில் ரெக்சினும் ஸ்பாஞ்சும் கிழிந்து போய் தகடு மட்டும் வெளியே நீட்டிக் கொண்டிருந்தது. சீட்டைப் பின் பக்கம் சாய்க்கும் கியர் புண்ணியத்திற்கு வேலை செய்தது. ஆனால், மூட்டைப் பூச்சியை நினைத்தால்தான் மனதைப் பயம் கவ்வியது. அப்படி இப்படி லேசாகப் பார்த்தேன், ஒன்றும் தெரிய வில்லை. கொஞ்சம் நிம்மதி.

மாலை நேரம் என்பதால் பஸ்ஸினுள் அவிச்சலாகத்தான் இருந்தது. இருந்தாலும் பஸ் போகப் போக காற்று வர சரியாக இருக்கும் என்று நினைத்தேன். அப்போது, எனக்கு முன்னால் இருந்த சீட்காரர் சன்னலில் இருந்த கண்ணாடிக் கதவைப் பின் பக்கம் தள்ள முற்பட்டார். அது எங்கள் இருவரின் சீட்டுகளுக்கும் பொதுவான சன்னலாய் இருந்தது. அவர் தள்ளிவிட்டால் எனக்கு சுத்தமாய் காற்று வராது. அவர் முதலில் மெதுவாகத்தான் தள்ளினார். கண்ணாடி நகரல. ஏதோ லேசாக டஸ்ட் பிடித்திருக்கும் என்று நினைத்தவர் அதன் பின் சிறிது அழுத்தித் தள்ளினார். அப்போதும் சன்னலில் கண்ணாடி நகரவே நகரல. மனிதனுக்கு சற்று எரிச்சல் வர எழுந்து நின்று தள்ளினார். பாவம் உடலெல்லாம் வியர்வை ஆறு. ஆனால், சன்னலில் கண்ணாடி கொஞ்சமும் நகர்ந்த பாடில்லை.

எனக்கு அவர் ஒவ்வொரு முறை தள்ளும் போதும் மனசு ‘பக் பக்’ என்றது. கதவு பின்னால் நகர்ந்துட்டா எனக்குக் காற்று வராதே.

“ஆண்டவா! கண்ணாடிக்கதவு பின்னாடி நகரக் கூடாது.” மனசுக்குள் மௌன மன்றாட்டு.

“சார்! கொஞ்சம் இந்தக் கிளாசப் பிடிச்சு இழுங்க. நகரமாட்டேங்குது”.

“அப்படியா…?” நான் எழுந்தேன்.

அடப்பாவி நம்மளையே தள்ளச் சொல்றானே என்று மனதில்! இருந்தாலும்,

“எங்கே, தள்ளுங்க சார்!” என்று சொல்லிக் கொண்டே, கண்ணாடியை இழுக்கிற மாதிரி நானும் இழுத்துக் கொண்டு, பலமாக இழுப்பது போல நடித்தேன். ஒருவேளை கண்ணாடிக் கதவு ரெண்டு பேர் பலத்துல நகர்ந்துட்டா? மனதில் ஒரு கள்ள பயம். ஆனால், என் அதிர்ஷ்ட நேரம் கதவு சுத்தமா நகரல.

“ம்..ஹூம். நகரவே மாட்டேங்குதே சார்.” ரொம்பவும் அலுத்துக் கொண்டே சொன்னேன்.

“ரொம்ப வியர்க்குது, காற்றே வரமாட்டேங்குதுல்ல அதான்” என்றார்.

“ஆமா ஆமா ரொம்பப் புழுக்கமாத்தான் இருக்குது. ஆனா, ரன்னிங்குல சரியாயிடும். அதுவரை சிரமம்தான்.”

சிரமப்படுகிறவன் மாதிரி சொன்னேன். முகத்தை வேஷ்டி முனையால் துடைத்துக் கொண்டு “ப்பூபூ…” என்றவாறே உட்கார ஆரம்பித்தார் அவர்.

பஸ் கிளம்பியது.

ஜில் காற்று முகத்தில் வீச சிலிர்த்துப் போனேன். ஆகா என்ன அருமையான காற்று. கண்ணாடிக் கதவு மட்டும் ஒரு வேளை நகர்ந்திருந்தால் இந்த சுகமான காற்று கிடைக்குமா என்ன?

சாலை ஓரத்துக் கடைகளையும், காட்சிகளையும் பார்த்து ரசித்துக் கொண்டு இருந்தேன். பஸ் தாழையூத்தைத் தாண்டி நான்கு வழிச் சாலையில் ஒரு சீராகச் சென்று கொண்டிருந்தது. இதமான காற்று என்னை சுகமான தூக்கத்திற்கு அழைத்துச் சென்றது.

கண்ணயரும் நேரம்… திடீரென விழுந்தது!

விழித்தேன்.

மறுபடியும் விழுந்தது.

நன்றாக விழித்தேன்.

மறுபடியும்… மறுபடியும்… தொடர்ந்து என் மேல் விழுந்தது.

கையை சிறிது வெளியே நீட்டினேன்.

மழை பெய்தது!

மெதுவாக ஆரம்பித்து பலமாகத் தொடர, வேகமாக நனைய ஆரம்பித்தேன் நான்.

எல்லோருமே கண்ணாடிக் கதவை மூடிவிட்டார்கள்.

எனது கை வேக வேகமாக கண்ணாடிக் கதவை இழுக்க முற்பட,

ம்..ஹூம் அதுதான் வராக் கதவாயிற்றே!

சிறிது எழுந்து முன் சீட்டில் இருப்பவரை மெதுவாகப் பார்த்தேன்.

அவர் சுகமாகத் தூங்கிக் கொண்டிருந்தார்.

* * *

Advertisements
 

3 responses to “பிளஸ் X மைனஸ் = மைனஸ்

 1. சட்டநாதன்

  30/08/2012 at 4:20 பிப

  சார், இது போன்ற சின்ன விஷயங்களுக்காக “பதடி” என்றால் எப்படி? ஒரு அளவிற்கு மேல் இது போன்ற செயல்களை நமக்கு நாமே நியாயப்படுத்திக் கொள்கிறோம் (அல்லது கொள்வேன்). குற்ற உணர்ச்சி ஏதுமின்றி இயல்பாக நடக்கும்.

  “பிரீப் கேஸை என் சீட்டிற்கு எதிர் புறத்தில் உள்ள லக்கேஜ் கேரியரில் வைத்தேன். அப்போதுதானே உட்கார்ந்த இடத்திலிருந்தபடியே அவ்வப்போது அதைக் கவனித்துக் கொள்ள முடியும்”

  – ஐய்!!! நானும் இப்படித் தான் செய்வேன், இதே காரணத்திற்காக!

   
 2. vidhaanam

  04/09/2012 at 12:22 பிப

  ‘மக்களிலே பதடியோன்’ என்ற சொற்பிரயோகத்தை பாரதிதாசன், வள்ளுவரிடமிருந்து எடுத்தாண்டிருப்பாரோ?

  ‘பயனில்சொல் பாராட்டு வானை மகனெனல்
  மக்கட் பதடி யெனல்’ – குறள் 196.

   
 3. ranjani135

  03/05/2013 at 10:23 பிப

  எல்லோருமே சில சமயங்களில் ‘பதடி’ யாகத்தான் இருக்கிறோம் என்று தோன்றுகிறது. கதையின் முடிவு லேசாகப் புன்முறுவல் பூக்க வைத்தது. பதடியாக இருந்ததற்குத் தண்டணையோ?

   

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: