RSS

தமிழுக்காக சமஸ்கிருதம் வேண்டும்!

26 ஆக

மா.சட்டநாதன், கழுகுமலை.ஊடகங்களின் வரவிற்குப் பின்னர் திடீரென்று தமிழகத்திலுள்ள பெயர் தெரியாத கோவில்களெல்லாம் புனர்வாழ்வு பெற்றன. கழுகுமலைக் கழுகாசலமூர்த்தி கோவில் ஏற்கனவே பிரசித்தி பெற்றது, கேட்கவா வேண்டும். 15 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட பிரதோஷ வழிபாடு வெறும் நான்கு பேருடன் நடந்தது. ஆனால், இன்று கோவில் தெற்கு வாசல் வரை கூட்டம் நிற்கிறது.

உழவாரப்பணி, தேவாரப் பாடசாலை, அறுபத்து மூன்று நாயன்மார் குருபூசை, திருமுறை ஓதுதல், திருவாசகம் முற்றோதுதல், கிரிவலம், தேய்பிறை அஷ்டமி பைரவர் வழிபாடு என்பவை எல்லாமே கடந்த 20 வருடங்களாகத்தான் மிகுந்த உத்வேகத்துடன் நடைபெறுகின்றன. இந்நிகழ்ச்சிகளில் பலர் பங்கெடுப்பார்கள், பிறகு வேறு வேலைகளைப் பார்க்கப் போய்விடுவார்கள். ஒரு சிலர் இதையே வேலையாக வைத்திருப்பார்கள், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணங்கள். எனக்கோ தமிழ் பக்தி இலக்கியங்களில் முறையான பயிற்சியும், பிற மதங்கள், மொழிகள் மீது மரியாதையும், அவற்றில் உள்ள நல்ல விஷயங்களை விவாதிக்கும் சான்றோர்களின் நெருக்கமும் கிடைத்தது.

சமஸ்கிருதம் என்னவென்று தெரியாத அந்நாட்களில், அதைப்பற்றி அறிந்து கொள்வதிலும் எனக்கு ஆர்வம் ஏற்பட்டது. ஒருமுறை மகாமிருத்யுன்ஜய மந்திரத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்த போது, அதன் பொருள் என்ன என்று கேட்டேன். சொன்னவர் பொருள் தெரியாது, இந்த மந்திரத்தை ஓதினால் மரண பயம் இல்லாமல் இருக்கலாம் என்றார். பொருளைத் தேடி அறிந்தபோது மந்திரத்தைக் கண்டவரின் கவிமனதையும், அன்றாட வாழ்வில் காண்கின்ற ஒவ்வொன்றையும் ஆன்மீகத்தோடு ஒப்புநோக்கிய நம் முன்னோர்களின் எளிமையான வாழ்வையும் எண்ணி வியந்தேன்.

“ஓம் த்ரயம்பகம் யஜாமஹே சுகந்திம் புஷ்டி வர்த்தனம்,

உருவாருக மிவ பந்தனாம்,

மிருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்!”

– மூன்று கண்களை உடையவரும், நறுமணத்தையும் போஷாக்கையும் தருபவருமாகியவரை வணங்குகிறேன். வெள்ளரிப்பழம் எப்படி பழுத்தவுடன் தானாகவே செடியை விட்டு நீங்கி விடுகிறதோ அதே போல, இந்த உலக வாழ்வின் பந்தங்களில் இருந்து நீங்குவதற்கு என்று இதற்கு சாயனர் பொருள் கூறுகிறார். (உருவாருகம் – வெள்ளரி பழம், அதே சமயம் உருவாருகம் என்ற வார்த்தைக்கு மிகப் பெரிய நோய் என்று பொருள் கூறுவோரும் உண்டு.) யோசிக்க யோசிக்க விரிந்து கொண்டே இருக்கும் பொருள் கொண்ட மந்திரம் இது.

நமது பள்ளி மாணவர்களுக்கு “நீராரும் கடலுடுத்த” பாடலுக்கு அப்புறம் மனப்பாடமாகத் தெரியும் மற்ற பாடல்  சலங்கை ஒலி படத்தில் வரும் “நாத வினோதங்கள்” என ஆரம்பிக்கும் பாடல். கலை இலக்கியப் போட்டிகளில் குறைந்தது மூன்று பேராவது ஆடுவார்கள். அந்தப் பாடல் காளிதாசரின் ரகுவம்ச இறை வணக்க சுலோகம் ஒன்றுடன்  ஆரம்பிக்கும்.

வாக் அர்த்தா விவ சம்ப்ருக்தோவ்

வாக் அர்த்த பிரதி பத்தையே

ஜகதப் பிதரவ் வந்தே

பார்வதிபரமேஸ்வரௌ!

– “சொல்லும் பொருளும் போல இணைந்திருக்கும், உலகத்தின் பெற்றோர்களான, பார்வதியையும் பரமேஸ்வரனையும், எனக்கு சொல்லிலும் பொருளிலும் நல்ல ஆளுமை கிடைக்க, வணங்குகிறேன்” – என்று எளிமையாகப் பொருள் கொள்ளலாம். (பார்வதி பரமேஸ்வரௌ – என்ற வார்த்தையைப் பிரித்துப் பாடுவது பற்றிய செய்தியை இங்கே சென்று பார்த்துக் கொள்ளலாம்).

லட்சக் கணக்கான சுலோகங்களில் இருந்து இந்த இரண்டை மட்டும் பார்த்தாலே நம் முன்னோர்களின் மேலான சிந்தனை உயர்வினை அறிய முடியும். எப்படி?

தொல் காலத்தில் மனிதன் இயற்கையைப் பார்த்து பயப்பட ஆரம்பித்து, இயற்கை சக்திகளை, இடி இடிப்பது, மழை பெய்வது, காற்றில் பயிர்கள் ஆடுவது போன்று, “போலச் செய்து காட்டுவதன்” மூலம் மகிழ்விக்கலாம் என தமது வழிபாட்டில் கை, கால்களை உயர்த்தி ஆடினர். (ரொம்ப கஷ்டப்பட வேண்டியதில்லை, ஷகிரா சென்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்காகப் பாடிய இந்தப் பாடலின்கடைசி நிமிடங்களைப் பாருங்கள்).

நம் முன்னோர்கள் இதற்கும் மேலே சென்று தமது சிந்தனையில் இயற்கையை இணைத்தனர். அதற்கான சான்றுகள் மேலே உள்ள சுலோகங்கள், ரிக் வேதமோ, ரகு வம்சம் போன்ற காவியமோ – சிந்தனையின் உச்சத்தை நோக்கிய பயணங்கள். மொழிபெயர்ப்பே நம்மை வியக்க வைக்கும் போது, இன்றைய இந்தியச் சூழலில் சமஸ்கிருதம் கற்பது சிறிது முயற்சியிலேயே முடியும் என்ற நிலையில், நூல்களின் மூலத்தை நாம் படித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.

தீவிர தமிழ்ப் பற்றாளரான சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் அவர்கள், 1984 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26 ஆம் நாள் நடைபெற்ற சம்ஸ்கிருத நாள் கருத்தரங்கில் பேசிய உரை, பின்னர் “தமிழும் சமஸ்கிருதமும்” என்ற பெயரில் வெளியானது. அதில் அவர், “நான் ஆங்கிலத்தில் போதிய புலமை பெறாததற்காக  வருந்த வில்லை. சமஸ்கிருதத்தில் புலமை பெறாததற்காக வருந்துகிறேன். ஆங்கிலப் புலமையால் வாழ்க்கை வசதிகளைப் பெறலாம் – அவ்வளவு தான்! ஆனால் சமஸ்கிருதப் புலமையால் ஆன்மீக ஞானம் பெறலாம். சமஸ்கிருதம் பயின்றிருந்தால் தமிழ் மொழிக்கு இப்போது செய்வதை விடவும் அதிக அளவு தொண்டு செய்ய முடிந்திருக்கும் என்று நம்புகிறேன்” என்கிறார். உண்மைதானே.

சமஸ்கிருதம் பற்றிய நல்ல விவாதங்கள்(ஜெயமோகன், தமிழ் இந்து), தமிழ் மூலம் சமஸ்கிருதம் படித்தல் போன்ற தளங்கள் இத்துடன் உங்கள் பார்வைக்கு இணைக்கப்பட்டுள்ளன. வேண்டும் பொழுது பார்த்துக் கொள்ளுங்கள்.

கட்டாயப்படுத்தி ஒன்றைத் திணிக்க நினைப்பது வெறி என்றால், அறியாமலேயே ஒன்றை ஒதுக்குவதை என்னவென்று சொல்வது? சமஸ்கிருதம் அன்றாட வாழ்க்கையை என்ன மேம்படுத்தி விடும் என்று கேட்கலாம். அன்றாட வாழ்க்கையை நடத்த சிரமப்படுபவர், கலையை எல்லாம் கண்டு கொள்ளப் போவதில்லைதான். குறைந்த பட்சம் இந்தத் துறையில் இருப்பவர்களாவது, தங்களது மேம்பாட்டிற்காக சமஸ்கிருதத்தில் மொழியறிவை வளர்த்துக் கொள்வது நல்லது. இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் சொன்னதைப் போல, இன்று ஏராளமான ஆன்மீகச் செயல்கள் உத்வேகத்துடன் முன்னெடுக்கப் படுகின்றன. சமஸ்கிருதம் படிப்பது இவற்றில் மேலுயர்ந்து வளர்வதற்கும்,ம.பொ.சி அவர்கள் சொல்வதைப் போல தமிழ் மொழிக்கு இப்போது செய்வதை விடவும் அதிக அளவு தொண்டு செய்ய வாய்ப்பாக அமையும். அப்போது புதிய பரந்த சிந்தனைகள் ஊற்றெடுக்கும்.

 “ஒன்று சேர்ந்து பயணம் செய்யுங்கள்,
சேர்ந்தமர்ந்து விவாதம் செய்யுங்கள்,
உங்கள் மனங்களெல்லாம் ஒன்றாகட்டும்!
முன்பு தேவர்கள்
ஒன்றாக அவி பங்கிட்டதுபோல
ஒன்றுகூடி சிந்தியுங்கள்,
உங்கள் சங்கம் ஒற்றுமையுடையதாகட்டும்!
ஒன்றாக பூஜை செய்யுங்கள்,
உங்கள் இலக்கு ஒன்றேயாகட்டும்!
உங்கள் இதயங்களில் ஒற்றுமை விளைக!
உங்கள் மனங்கள் இணைவதாக!
ஒற்றுமையுடன் நலமாக வாழுங்கள்!
                                    – ரிக் வேதம் (10.191.2 – 4 )

Advertisements
 

2 responses to “தமிழுக்காக சமஸ்கிருதம் வேண்டும்!

 1. ஜெகதீஸ்வரன்

  27/08/2012 at 5:14 முப

  ரிக் வேதத்திலிருந்து பாடல், சமஸ்கிருதம் பற்றிய புது பார்வை,. கட்டுரை மிகவும் வித்தியாசமான கோணத்தில் இருக்கிறது நண்பரே. தொடருங்கள். நன்றி.

   
 2. vidhaanam

  27/08/2012 at 9:49 முப

  //நூல்களின் மூலத்தை நாம் படித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.//

  இதுதான் சரியான வழி என நினைக்கிறேன். எப்போதுமே மொழிபெயர்ப்பை முழுமனதோடு ரசிக்க முடிந்ததில்லை. ஏதோ ‘second hand’ டூ வீலர் வாங்கி ஓட்டுவது போன்ற மனநிலையையே அது தருகிறது. முழு அன்னியோனியம் அங்கு இருப்பதில்லை. எல்லா மொழிகளையும் படிப்பது நடைமுறை சாத்தியமற்றதுதான். சமஸ்கிருதம் போன்ற முக்கியமான மொழிகளையாவது கொஞ்சம் படிக்கவே வேண்டும்.

  “எந்தச் சான்றையும் கூடிய மட்டிலும் மூல நூலிலிருந்து அறிந்திட வேண்டும். ஆய்வில் பிறர் சொல்லை நம்புவது தகாது. சம்ஸ்கிருதச் சான்றுகளை நாமே படித்துப் பொருள் அறிதல் நல்லது. அதனால் தமிழ் ஆராய்ச்சியாளர்கள் நிச்சயம் சம்ஸ்கிருதம் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும்”
  – எஸ்.வையாபுரிப் பிள்ளை

   

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: