RSS

Monthly Archives: ஓகஸ்ட் 2012

பிளஸ் X மைனஸ் = மைனஸ்

சிறுகதை: அசின் சார், கழுகுமலை.திருநெல்வேலி ஒருங்கிணைந்த பேருந்து நிலையம்.

அரசு விரைவுப் பேருந்து நிற்கும் பிளாட்பாரம்.

சென்னை செல்வதற்காகக் காத்திருந்தேன். வரும் பஸ்களெல்லாம் சென்னை, சென்னை என்றுதான் வந்து நிற்கின்றன. இருந்தாலும் நான் ஏற வேண்டிய சென்னை பஸ்சை காணோம்.

பாளை தூய சவேரியார் கல்லூரி தமிழ்த்துறையில் “வியாழ வட்டம்” என்றொரு இலக்கிய நிகழ்வு. அதில் எனக்கு ஒரு மணிநேர உரை கொடுத்திருந்தார்கள். தலைப்பு, “மக்களிலே பதடியோன்?” என்பது. பாரதிதாசன் எழுதிய பாண்டியன் பரிசில் உள்ள வரி அது. சுயநலம் பார்ப்போரை அக்கதையில் வரும் வேலன் என்பவன் பதடி அதாவது ஒன்றுக்கும் உதவாத பதர் என்கிறான். அதற்கொத்த இலக்கியச் சான்றுகளும், இயல்பு வாழ்க்கைச் சான்றுகளும் சொல்லி முடித்தேன். மாணவர்கள் நன்கு ரசித்தார்கள். பேராசிரியர்கள் வாழ்த்தினார்கள். விடைபெற்றுத் திரும்பும் போது, நான் சென்னை செல்வதற்கான அரசு விரைவுப் பேருந்தின் ரிசர்வேசன் டிக்கெட்டையும் கொடுத்தார்கள். அனைவருக்கும் நன்றி கூறிவிட்டுப் பேருந்து நிலையம் வந்து சேர்ந்தேன்.

அரை மணி நேரமாகிவிட்டது. பஸ் இன்னும் வராததால் சலிப்புடன் நின்று கொண்டிருந்தேன். தடம் எண் 180V. அப்போதுதான் உள்ளே வந்து கவுண்டரில் நின்றது. 180V சென்னை என்பதைப் பார்த்தவுடன் முகமலர்ச்சியுடன் பேருந்தை நோக்கி விரைந்தேன். முன் பக்கமிருந்த கதவைத் திறந்து கண்டக்டர் வெளியே வந்தார். என்னைப் பார்த்தவுடன்,

“ரிசர்வேசன் டிக்கெட்டா?” என்றார்.

“ஆமாம்” என்றதும் டிக்கெட்டைக் கேட்டார்.

கையிலிருந்த பிரீப் கேஸை கால்களுக்கிடையே கீழே வைத்து விட்டு, சட்டையின் மேல் பாக்கெட்டிலுள்ள டிக்கெட்டை எடுத்து நீட்டினேன். அதைப் பார்த்தவர்,

“ப்ச்சூ, இது 6 மணி பஸ்சுக்கான டிக்கெட். எங்க டைம் 6.30” என்றதும் ஆடிப்போனேன்.

பஸ்ஸைத் தவற விட்டு விட்டோமோ என்ற பயம் புதிதாய் தொற்றிக்கொள்ள,

“அப்போ நான் ஏற வேண்டிய பஸ்…?” என்று ஏமாற்றத்துடன் அவரை கேட்டேன்.

“பதறாதீங்க ஸார்! டிப்போவுல ரெகுலர் சர்வீஸ் நடந்துக்கிட்டு இருந்தது. அநேகமா இப்போ வர்ற நேரந்தான். வந்ததும் கண்ணாடியில பாருங்க டைம் எழுதியிருக்கும்.” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே,

“அதோ, உங்க பஸ் வந்திடுச்சே!” என்றார் மகிழ்ச்சியுடன்.

“தாங்க்ஸ் ஸார்” என்று சொல்லி விட்டு வேகமாக அந்த பஸ்ஸை நோக்கிச் சென்றேன்.

அருகில் சென்றதும் 180V சென்னை என்பதையும், முன் கண்ணாடியில் சுண்ணாம்பால் 18.00 என்று எழுதியிருந்ததையும் பார்த்து நிம்மதியடைந்தேன். பலரும் அந்த பஸ்சின் வாசல் அருகே முண்டியடித்துக் கூடினர். வாசலில் நின்ற கண்டக்டர், “பொறுங்க பொறுங்க, சென்னை எங்கேயும் போகாது, நம்ம வண்டியும் உங்கள விட்டுட்டுப் போகாது.” என்று சொல்லிக்கொண்டே, பயணச்சீட்டு பெற்றவர்கள் ஒவ்வொருவரையும் பரிசோதித்து உள்ளே ஏற்றத் தொடங்கினார். நானும் ஏறினேன்.

ஏறும் போதே டிரைவர் சீட்டிற்கு முன்னதாக ஊதுவத்தி ஸ்டேண்டில் புகையைக் கக்கிக் கொண்டிருந்த பத்தியின் நறுமணம் என்னை வரவேற்றது. அதை உள்ளிழுத்துக் கொண்டே உள்ளே நுழைந்தேன். டிக்கெட்டில் சீட் நம்பர் 20 என்று போட்டிருந்தது. பார்வையால் நோட்டமிட்டேன்.

அந்ந்ந்ந்த சீட் வலப் புறத்தில் சன்னலோஒரமாய் இருந்தது. அருகில் சென்று பிரீப் கேஸை என் சீட்டிற்கு எதிர் புறத்தில் உள்ள லக்கேஜ் கேரியரில் வைத்தேன். அப்போதுதானே உட்கார்ந்த இடத்திலிருந்தபடியே அவ்வப்போது அதைக் கவனித்துக் கொள்ள முடியும். வைத்து விட்டு என் சீட் பக்கம் திரும்பினேன். சீட்டின் மேல் பகுதியில் போர்த்தியிருந்த உறை, எண்ணெய்ச் சிக்கு அழுக்குப் படிந்து கருப்பாக இருந்தது. பக்கத்து சீட்டைப் பார்த்தேன். அது ஓரளவு நன்றாக இருந்தது. இதுவரை யாரும் அந்த சீட்டிற்கு வரவில்லை. டக்குனு ஒரு யோசனை. அந்த உறையைக் கழற்றி என் சீட்டிற்கும், என் சீட் உறையைக் கழற்றி அந்த சீட்டிற்கும் மாட்டி விட்டு, நான் என் சீட்டில் உட்கார்ந்தேன்.

உப்ப்ப்பா! – பெருமூச்சிதான். அரைமணி நேரமாய் நின்று சோர்ந்து போன கால்கள் அல்லவா? எத்தனை முறைதான் வலப்புறமும் இடப்புறமும் போகும் மனித உருவங்களையும், வந்து வந்து கிளம்பிச் சென்ற பஸ்களையும் பார்த்துக் கொண்டு இருப்பது?

ம்ம்ம் அலுப்பை மறந்து சீட்டிலுள்ள கை வைக்கும் ஸ்டேண்டைக் கவனித்தேன். இடது பக்க ஸ்டேண்டில் ரெக்சினும் ஸ்பாஞ்சும் கிழிந்து போய் தகடு மட்டும் வெளியே நீட்டிக் கொண்டிருந்தது. சீட்டைப் பின் பக்கம் சாய்க்கும் கியர் புண்ணியத்திற்கு வேலை செய்தது. ஆனால், மூட்டைப் பூச்சியை நினைத்தால்தான் மனதைப் பயம் கவ்வியது. அப்படி இப்படி லேசாகப் பார்த்தேன், ஒன்றும் தெரிய வில்லை. கொஞ்சம் நிம்மதி.

மாலை நேரம் என்பதால் பஸ்ஸினுள் அவிச்சலாகத்தான் இருந்தது. இருந்தாலும் பஸ் போகப் போக காற்று வர சரியாக இருக்கும் என்று நினைத்தேன். அப்போது, எனக்கு முன்னால் இருந்த சீட்காரர் சன்னலில் இருந்த கண்ணாடிக் கதவைப் பின் பக்கம் தள்ள முற்பட்டார். அது எங்கள் இருவரின் சீட்டுகளுக்கும் பொதுவான சன்னலாய் இருந்தது. அவர் தள்ளிவிட்டால் எனக்கு சுத்தமாய் காற்று வராது. அவர் முதலில் மெதுவாகத்தான் தள்ளினார். கண்ணாடி நகரல. ஏதோ லேசாக டஸ்ட் பிடித்திருக்கும் என்று நினைத்தவர் அதன் பின் சிறிது அழுத்தித் தள்ளினார். அப்போதும் சன்னலில் கண்ணாடி நகரவே நகரல. மனிதனுக்கு சற்று எரிச்சல் வர எழுந்து நின்று தள்ளினார். பாவம் உடலெல்லாம் வியர்வை ஆறு. ஆனால், சன்னலில் கண்ணாடி கொஞ்சமும் நகர்ந்த பாடில்லை.

எனக்கு அவர் ஒவ்வொரு முறை தள்ளும் போதும் மனசு ‘பக் பக்’ என்றது. கதவு பின்னால் நகர்ந்துட்டா எனக்குக் காற்று வராதே.

“ஆண்டவா! கண்ணாடிக்கதவு பின்னாடி நகரக் கூடாது.” மனசுக்குள் மௌன மன்றாட்டு.

“சார்! கொஞ்சம் இந்தக் கிளாசப் பிடிச்சு இழுங்க. நகரமாட்டேங்குது”.

“அப்படியா…?” நான் எழுந்தேன்.

அடப்பாவி நம்மளையே தள்ளச் சொல்றானே என்று மனதில்! இருந்தாலும்,

“எங்கே, தள்ளுங்க சார்!” என்று சொல்லிக் கொண்டே, கண்ணாடியை இழுக்கிற மாதிரி நானும் இழுத்துக் கொண்டு, பலமாக இழுப்பது போல நடித்தேன். ஒருவேளை கண்ணாடிக் கதவு ரெண்டு பேர் பலத்துல நகர்ந்துட்டா? மனதில் ஒரு கள்ள பயம். ஆனால், என் அதிர்ஷ்ட நேரம் கதவு சுத்தமா நகரல.

“ம்..ஹூம். நகரவே மாட்டேங்குதே சார்.” ரொம்பவும் அலுத்துக் கொண்டே சொன்னேன்.

“ரொம்ப வியர்க்குது, காற்றே வரமாட்டேங்குதுல்ல அதான்” என்றார்.

“ஆமா ஆமா ரொம்பப் புழுக்கமாத்தான் இருக்குது. ஆனா, ரன்னிங்குல சரியாயிடும். அதுவரை சிரமம்தான்.”

சிரமப்படுகிறவன் மாதிரி சொன்னேன். முகத்தை வேஷ்டி முனையால் துடைத்துக் கொண்டு “ப்பூபூ…” என்றவாறே உட்கார ஆரம்பித்தார் அவர்.

பஸ் கிளம்பியது.

ஜில் காற்று முகத்தில் வீச சிலிர்த்துப் போனேன். ஆகா என்ன அருமையான காற்று. கண்ணாடிக் கதவு மட்டும் ஒரு வேளை நகர்ந்திருந்தால் இந்த சுகமான காற்று கிடைக்குமா என்ன?

சாலை ஓரத்துக் கடைகளையும், காட்சிகளையும் பார்த்து ரசித்துக் கொண்டு இருந்தேன். பஸ் தாழையூத்தைத் தாண்டி நான்கு வழிச் சாலையில் ஒரு சீராகச் சென்று கொண்டிருந்தது. இதமான காற்று என்னை சுகமான தூக்கத்திற்கு அழைத்துச் சென்றது.

கண்ணயரும் நேரம்… திடீரென விழுந்தது!

விழித்தேன்.

மறுபடியும் விழுந்தது.

நன்றாக விழித்தேன்.

மறுபடியும்… மறுபடியும்… தொடர்ந்து என் மேல் விழுந்தது.

கையை சிறிது வெளியே நீட்டினேன்.

மழை பெய்தது!

மெதுவாக ஆரம்பித்து பலமாகத் தொடர, வேகமாக நனைய ஆரம்பித்தேன் நான்.

எல்லோருமே கண்ணாடிக் கதவை மூடிவிட்டார்கள்.

எனது கை வேக வேகமாக கண்ணாடிக் கதவை இழுக்க முற்பட,

ம்..ஹூம் அதுதான் வராக் கதவாயிற்றே!

சிறிது எழுந்து முன் சீட்டில் இருப்பவரை மெதுவாகப் பார்த்தேன்.

அவர் சுகமாகத் தூங்கிக் கொண்டிருந்தார்.

* * *

 

தமிழுக்காக சமஸ்கிருதம் வேண்டும்!

மா.சட்டநாதன், கழுகுமலை.ஊடகங்களின் வரவிற்குப் பின்னர் திடீரென்று தமிழகத்திலுள்ள பெயர் தெரியாத கோவில்களெல்லாம் புனர்வாழ்வு பெற்றன. கழுகுமலைக் கழுகாசலமூர்த்தி கோவில் ஏற்கனவே பிரசித்தி பெற்றது, கேட்கவா வேண்டும். 15 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட பிரதோஷ வழிபாடு வெறும் நான்கு பேருடன் நடந்தது. ஆனால், இன்று கோவில் தெற்கு வாசல் வரை கூட்டம் நிற்கிறது.

உழவாரப்பணி, தேவாரப் பாடசாலை, அறுபத்து மூன்று நாயன்மார் குருபூசை, திருமுறை ஓதுதல், திருவாசகம் முற்றோதுதல், கிரிவலம், தேய்பிறை அஷ்டமி பைரவர் வழிபாடு என்பவை எல்லாமே கடந்த 20 வருடங்களாகத்தான் மிகுந்த உத்வேகத்துடன் நடைபெறுகின்றன. இந்நிகழ்ச்சிகளில் பலர் பங்கெடுப்பார்கள், பிறகு வேறு வேலைகளைப் பார்க்கப் போய்விடுவார்கள். ஒரு சிலர் இதையே வேலையாக வைத்திருப்பார்கள், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணங்கள். எனக்கோ தமிழ் பக்தி இலக்கியங்களில் முறையான பயிற்சியும், பிற மதங்கள், மொழிகள் மீது மரியாதையும், அவற்றில் உள்ள நல்ல விஷயங்களை விவாதிக்கும் சான்றோர்களின் நெருக்கமும் கிடைத்தது.

சமஸ்கிருதம் என்னவென்று தெரியாத அந்நாட்களில், அதைப்பற்றி அறிந்து கொள்வதிலும் எனக்கு ஆர்வம் ஏற்பட்டது. ஒருமுறை மகாமிருத்யுன்ஜய மந்திரத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்த போது, அதன் பொருள் என்ன என்று கேட்டேன். சொன்னவர் பொருள் தெரியாது, இந்த மந்திரத்தை ஓதினால் மரண பயம் இல்லாமல் இருக்கலாம் என்றார். பொருளைத் தேடி அறிந்தபோது மந்திரத்தைக் கண்டவரின் கவிமனதையும், அன்றாட வாழ்வில் காண்கின்ற ஒவ்வொன்றையும் ஆன்மீகத்தோடு ஒப்புநோக்கிய நம் முன்னோர்களின் எளிமையான வாழ்வையும் எண்ணி வியந்தேன்.

“ஓம் த்ரயம்பகம் யஜாமஹே சுகந்திம் புஷ்டி வர்த்தனம்,

உருவாருக மிவ பந்தனாம்,

மிருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்!”

– மூன்று கண்களை உடையவரும், நறுமணத்தையும் போஷாக்கையும் தருபவருமாகியவரை வணங்குகிறேன். வெள்ளரிப்பழம் எப்படி பழுத்தவுடன் தானாகவே செடியை விட்டு நீங்கி விடுகிறதோ அதே போல, இந்த உலக வாழ்வின் பந்தங்களில் இருந்து நீங்குவதற்கு என்று இதற்கு சாயனர் பொருள் கூறுகிறார். (உருவாருகம் – வெள்ளரி பழம், அதே சமயம் உருவாருகம் என்ற வார்த்தைக்கு மிகப் பெரிய நோய் என்று பொருள் கூறுவோரும் உண்டு.) யோசிக்க யோசிக்க விரிந்து கொண்டே இருக்கும் பொருள் கொண்ட மந்திரம் இது.

நமது பள்ளி மாணவர்களுக்கு “நீராரும் கடலுடுத்த” பாடலுக்கு அப்புறம் மனப்பாடமாகத் தெரியும் மற்ற பாடல்  சலங்கை ஒலி படத்தில் வரும் “நாத வினோதங்கள்” என ஆரம்பிக்கும் பாடல். கலை இலக்கியப் போட்டிகளில் குறைந்தது மூன்று பேராவது ஆடுவார்கள். அந்தப் பாடல் காளிதாசரின் ரகுவம்ச இறை வணக்க சுலோகம் ஒன்றுடன்  ஆரம்பிக்கும்.

வாக் அர்த்தா விவ சம்ப்ருக்தோவ்

வாக் அர்த்த பிரதி பத்தையே

ஜகதப் பிதரவ் வந்தே

பார்வதிபரமேஸ்வரௌ!

– “சொல்லும் பொருளும் போல இணைந்திருக்கும், உலகத்தின் பெற்றோர்களான, பார்வதியையும் பரமேஸ்வரனையும், எனக்கு சொல்லிலும் பொருளிலும் நல்ல ஆளுமை கிடைக்க, வணங்குகிறேன்” – என்று எளிமையாகப் பொருள் கொள்ளலாம். (பார்வதி பரமேஸ்வரௌ – என்ற வார்த்தையைப் பிரித்துப் பாடுவது பற்றிய செய்தியை இங்கே சென்று பார்த்துக் கொள்ளலாம்).

லட்சக் கணக்கான சுலோகங்களில் இருந்து இந்த இரண்டை மட்டும் பார்த்தாலே நம் முன்னோர்களின் மேலான சிந்தனை உயர்வினை அறிய முடியும். எப்படி?

தொல் காலத்தில் மனிதன் இயற்கையைப் பார்த்து பயப்பட ஆரம்பித்து, இயற்கை சக்திகளை, இடி இடிப்பது, மழை பெய்வது, காற்றில் பயிர்கள் ஆடுவது போன்று, “போலச் செய்து காட்டுவதன்” மூலம் மகிழ்விக்கலாம் என தமது வழிபாட்டில் கை, கால்களை உயர்த்தி ஆடினர். (ரொம்ப கஷ்டப்பட வேண்டியதில்லை, ஷகிரா சென்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்காகப் பாடிய இந்தப் பாடலின்கடைசி நிமிடங்களைப் பாருங்கள்).

நம் முன்னோர்கள் இதற்கும் மேலே சென்று தமது சிந்தனையில் இயற்கையை இணைத்தனர். அதற்கான சான்றுகள் மேலே உள்ள சுலோகங்கள், ரிக் வேதமோ, ரகு வம்சம் போன்ற காவியமோ – சிந்தனையின் உச்சத்தை நோக்கிய பயணங்கள். மொழிபெயர்ப்பே நம்மை வியக்க வைக்கும் போது, இன்றைய இந்தியச் சூழலில் சமஸ்கிருதம் கற்பது சிறிது முயற்சியிலேயே முடியும் என்ற நிலையில், நூல்களின் மூலத்தை நாம் படித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.

தீவிர தமிழ்ப் பற்றாளரான சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் அவர்கள், 1984 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26 ஆம் நாள் நடைபெற்ற சம்ஸ்கிருத நாள் கருத்தரங்கில் பேசிய உரை, பின்னர் “தமிழும் சமஸ்கிருதமும்” என்ற பெயரில் வெளியானது. அதில் அவர், “நான் ஆங்கிலத்தில் போதிய புலமை பெறாததற்காக  வருந்த வில்லை. சமஸ்கிருதத்தில் புலமை பெறாததற்காக வருந்துகிறேன். ஆங்கிலப் புலமையால் வாழ்க்கை வசதிகளைப் பெறலாம் – அவ்வளவு தான்! ஆனால் சமஸ்கிருதப் புலமையால் ஆன்மீக ஞானம் பெறலாம். சமஸ்கிருதம் பயின்றிருந்தால் தமிழ் மொழிக்கு இப்போது செய்வதை விடவும் அதிக அளவு தொண்டு செய்ய முடிந்திருக்கும் என்று நம்புகிறேன்” என்கிறார். உண்மைதானே.

சமஸ்கிருதம் பற்றிய நல்ல விவாதங்கள்(ஜெயமோகன், தமிழ் இந்து), தமிழ் மூலம் சமஸ்கிருதம் படித்தல் போன்ற தளங்கள் இத்துடன் உங்கள் பார்வைக்கு இணைக்கப்பட்டுள்ளன. வேண்டும் பொழுது பார்த்துக் கொள்ளுங்கள்.

கட்டாயப்படுத்தி ஒன்றைத் திணிக்க நினைப்பது வெறி என்றால், அறியாமலேயே ஒன்றை ஒதுக்குவதை என்னவென்று சொல்வது? சமஸ்கிருதம் அன்றாட வாழ்க்கையை என்ன மேம்படுத்தி விடும் என்று கேட்கலாம். அன்றாட வாழ்க்கையை நடத்த சிரமப்படுபவர், கலையை எல்லாம் கண்டு கொள்ளப் போவதில்லைதான். குறைந்த பட்சம் இந்தத் துறையில் இருப்பவர்களாவது, தங்களது மேம்பாட்டிற்காக சமஸ்கிருதத்தில் மொழியறிவை வளர்த்துக் கொள்வது நல்லது. இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் சொன்னதைப் போல, இன்று ஏராளமான ஆன்மீகச் செயல்கள் உத்வேகத்துடன் முன்னெடுக்கப் படுகின்றன. சமஸ்கிருதம் படிப்பது இவற்றில் மேலுயர்ந்து வளர்வதற்கும்,ம.பொ.சி அவர்கள் சொல்வதைப் போல தமிழ் மொழிக்கு இப்போது செய்வதை விடவும் அதிக அளவு தொண்டு செய்ய வாய்ப்பாக அமையும். அப்போது புதிய பரந்த சிந்தனைகள் ஊற்றெடுக்கும்.

 “ஒன்று சேர்ந்து பயணம் செய்யுங்கள்,
சேர்ந்தமர்ந்து விவாதம் செய்யுங்கள்,
உங்கள் மனங்களெல்லாம் ஒன்றாகட்டும்!
முன்பு தேவர்கள்
ஒன்றாக அவி பங்கிட்டதுபோல
ஒன்றுகூடி சிந்தியுங்கள்,
உங்கள் சங்கம் ஒற்றுமையுடையதாகட்டும்!
ஒன்றாக பூஜை செய்யுங்கள்,
உங்கள் இலக்கு ஒன்றேயாகட்டும்!
உங்கள் இதயங்களில் ஒற்றுமை விளைக!
உங்கள் மனங்கள் இணைவதாக!
ஒற்றுமையுடன் நலமாக வாழுங்கள்!
                                    – ரிக் வேதம் (10.191.2 – 4 )

 

கதை சொல்லும்!

mile stoneமைல்கல்

மைல்களைக் காட்டுகிறது

மைல்கல்

மைல்கல்லைக் காட்டுகிறது.

         மைல்கல்

         தூரத்தைக் காட்டுகிறது.

         மைல்கல்

         தூரத்தைக் கடத்துகிறது.

மைல்கல்

ஊரைக் காட்டுகிறது.

மைல்கல்

ஊரைக் கடத்துகிறது.

         மைல்கல்

         மகிழ்ச்சிப்படுத்துகிறது

         மைல்கல்

         துன்பப்படுத்துகிறது.

மைல்கல்

அறிய வைக்கிறது

மைல்கல்

புரிய வைக்கிறது.

        மைல்கல்

        பிறப்பைச் சொல்கிறது

        மைல்கல்

        இறப்பைச் சொல்கிறது

மைல்கல்

இயங்காமல் இருக்கிறது

மைல்கல்

இயங்க வைக்கிறது.

         மைல்கல்

         உண்மை பேசுகிறது

         மைல்கல்

         ஊமையாய் இருக்கிறது

மைல்கல்

காலந்தோறும் இருக்கிறது

மைல்கல்

கல்லாய் இருக்கிறது.

         மைல்கல்

         மனிதனைப் பார்க்கிறது

         மைல்கல்

         மனதிற்குள் சிரிக்கிறது!

                                                                     – அசின் சார், கழுகுமலை.

 

கழுகுமலை ஓவியங்கள்

ரஞ்சித் பரஞ்ஜோதி, பெங்களூர்.

கழுகுமலை முருகன் கோவிலின் வசந்த மண்டபத்தில் சில ஓவியங்கள் உள்ளன. அவை காலத்தால் மிகப் பிந்திய ஓவியங்களா அல்லது கோவில் கட்டப்பட்ட காலத்தைச் சேர்ந்ததா? எனத் தெரியவில்லை. எக்காலத்தைச் சேர்ந்ததாக இருந்தாலும் , மரபின் தொடர்ச்சி கொஞ்சம் கூட அற்று விடாமல் வரையப்பட்ட ஓவியங்கள் அவை.

மிகச் சொற்பமாகத்தான் இன்று அந்த ஓவியங்கள் எஞ்சியுள்ளன. காலத்தாலும், மனித அலட்சியத்தாலும் 90 சதவிகித ஓவியங்கள் அழிந்து விட்டன.

மண்டபத்தின் மேல் ஓரங்களில் உள்ள panelகளில் மட்டுமே கொஞ்ச ஓவியங்கள் இன்று எஞ்சியுள்ளன, அதுவும் முழுமையாக இல்லை. எனது பத்து வயதில் நான் வியந்து, அண்ணார்ந்து பார்த்த உட்கூரை ஓவியங்கள் அத்தனையும் இன்று அழிந்து விட்டன.

ஒரு புத்தகத்தின் மூலம் இன்னொரு புத்தகத்தை அறிந்து கொள்ளும் அனுபவம் எல்லோருக்குமே கண்டிப்பாக இருக்கும். அப்படித்தான் ‘Traditional paintings of Karnataka’ என்ற புத்தகத்தின் மூலம் ‘ஶ்ரீ தத்வ நிதி’ என்ற நூலைப் பற்றி அறிந்தேன்.

19-ஆம் நூற்றாண்டில் ‘ஶ்ரீ மும்மாடி கிருஷ்ணராஜ ஒடையார்’ என்ற மைசூர் மன்னர் இயற்றிய நூல்தான் ‘ஶ்ரீ தத்வ நிதி’.

இந்து மரபில் உள்ள கடவுளர்களின் தோற்றத்தைப் பற்றிய விளக்கங்களை மும்மாடி கிருஷ்ணராஜ ஒடையார் எழுத, அதற்கான ஓவியங்களை வரைந்திருப்பார்கள் மன்னரின் ஓவியர்கள்.
என்ன வண்ணத்தில் வரையப்பட வேண்டும், எத்தனை கைகள், அவற்றில் என்னென்ன ஆயுதங்கள், அருகில் யார் யார் நிற்பதாக காட்ட வேண்டும் என ஒவ்வொரு கடவுளர்களைப் பற்றிய இந்த விளக்கங்கள் மிக முக்கியமானவை. இந்த விளக்கங்கள் புராணங்களில்,ஆகமங்களில் கூறிய படி இருக்கும். அந்தந்த புராணங்களின் பெயர்களும் குறிப்பிடப் பட்டிருக்கும். கடவுளர்கள் பற்றி மட்டுமல்ல, இந்து மரபில் உள்ள இன்னும் பல விஷயங்களை ஓவியங்களுடன் கூறும் நூல்.
கோவில் ஓவியங்களைப் பற்றி அறிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு மிகப் பெரும் பொக்கிஷம் இந்த நூல்.

சக்திநிதி, விஷ்ணுநிதி, சிவநிதி, பிரம்மநிதி, க்ரஹநிதி, வைஷ்ணவநிதி, சைவநிதி, ஆகமநிதி, கெளதுகநிதி என்ற ஒன்பது பகுதிகளாக எழுதப்பட்ட நூல் இது.

1997 வரை இந்த நூல் பிரசுரிக்கப்படவில்லை. சக்திநிதி 1997-லும், விஷ்ணுநிதி 2002-லும், சிவநிதி 2004-லும் வெளியிடப்பட்டது. மிச்சமுள்ள ஆறு பாகங்களும் எப்போது வெளிவருமெனத் தெரியவில்லை. இதற்கான பணியை செய்து கொண்டிருப்பவர்கள் மைசூரைச் சேர்ந்த ‘Orientel Research Institute’-ஐ சேர்ந்தவர்கள்.

இப்போது கழுகுமலை ஓவியங்களுக்கு வருவோம்.

இந்து மரபில் வளர்ந்தவர்களுக்கு, ஓரளவு கழுகுமலையில் உள்ள சில ஓவியங்களை பார்த்தவுடனேயே அது எதைப் பற்றிய ஓவியங்கள் எனச் சொல்லிவிட முடியும். ஆனால் எனக்கு அந்த அனுபவம் கிடையாது. எனவே ‘ஶ்ரீ தத்வ நிதி’ போன்ற நூல்கள்தான் எனக்குத் துணை. அதுவும் அழிந்து போய் தெளிவின்றி காணப்படும் ஓவியங்களைப் பற்றி அறிய இந்து மரபில் வளர்ந்தவர்களால் கூட முடியாது. அவர்களும் இது போன்ற நூல்களையே நாட வேண்டியிருக்கும்.

ரொம்ப நாள் முயற்சி செய்து ‘ஶ்ரீ தத்வ நிதி’யின் மூன்று பாகங்களையும் வாங்கினேன். மைசூரில் மேற்சொன்ன Institute-ல் மட்டுமே கிடைக்கிறது. கழுகுமலையின் மிச்சமுள்ள ஓவியங்களைப் பற்றி அறிய முதலில் ‘சிவநிதி’யைத்தான் படித்தேன்/பார்த்தேன்.

விநாயகரின் 32 மூர்த்தங்களில் 16 மூர்த்தங்கள் கழுகுமலை ஓவியத் தொகுப்பில் உண்டு. அவற்றில் 12 மூர்த்தங்கள் மட்டுமே என் புகைப்படத் தொகுப்பில் இருந்தன. என் கவனக் குறைவால் நான் மிச்சமிருந்த நான்கையும் புகைப்படம் எடுக்காமல் வந்துவிட்டேனா எனத் தெரியவில்லை. அடுத்த முறை செல்லும் போது கவனிக்க வேண்டும்.

முக்கியமான விஷயம் என்னவென்றால், ஶ்ரீ தத்வ நிதியும், கழுகுமலை ஓவியங்களும் பெருமளவு ஒத்துப் போகின்றன. புராண, ஆகம விதிகள் முறைப்படி இந்த ஓவியங்களை வரைய கடைபிடிக்கப்பட்டுள்ளது என்பதை இதன் மூலம் அறிந்துகொள்ளலாம்.

வழக்கமாக ஓவியங்களைப் பற்றிய குறிப்பை அந்த ஓவியங்களுக்கு மேற்பகுதியில் கருப்பு வண்ண பின் புலத்தில் வெள்ளை எழுத்துகளால் எழுதும் முறை உண்டு. தஞ்சாவூர் கோவில் ஓவியங்களிலும் இதை நான் பார்த்திருக்கிறேன். கழுகுமலையிலும் அது போல இருந்திருக்கிறது. ஓவியத்தின் கடைசி ‘layer’ ஆக அந்த எழுத்துக்கள் இருந்ததால் அவைதான் முதலில் அழிந்திருக்கின்றன. இந்த 16 வகை விநாயகரின் உருவங்களுக்கு மேலும் அது போன்ற எழுத்துக்கள் அழிந்து போயிருக்கின்றன.

வழக்கமாக விநாயகரின் 32 மூர்த்தங்களையும் ஒரு குறிப்பிட்ட வரிசையில் சொல்வதுண்டு.
இந்த வரிசைக்கிரமத்தை வைத்து கழுகுமலை விநாயக வடிவங்களை எளிதில் பெயர் குறித்துவிடலாம் என்றுதான் நினைத்தேன். அதிலும் ஒரு சிக்கல். சில வடிவங்கள் மட்டுமே இந்த வரிசைக் கிரமத்தில் சரியாக உள்ளது.
எனவே முழுவதும் வரிசையை கணக்கில் கொள்ளவில்லை. வேறு அடையாளங்கள் தென்படாத நிலையில் மட்டுமே இந்த வரிசை முறையை பின்பற்ற வேண்டியிருந்தது. அவற்றை(12 மூர்த்தங்கள்) படங்களுடன் கீழெ கொடுத்துள்ளேன்.

‘சிவநிதி’யின் விநாயகர் பகுதி மட்டும் விக்கிபீடியாவில் உண்டு. ஆனால் அது சில பிழைகளுடனும், முழுமையற்றதாகவும் உள்ளது. மைசூரில் உள்ள மேற்சொன்ன இடத்திலுள்ள புத்தகத்தை நாடுவதே உத்தமம்.
முத்கல புராணத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த கணபதி வடிவங்கள் விளக்கப்படுவதாக ‘கிருஷ்ணராஜ உடையார்’ சொல்கிறார்.
ஶ்ரீ தத்வ நிதியை முன்வைத்து நான் கண்ட அனுமானங்களே கீழுள்ளவை. தவறுகள் இருப்பின் இத்துறையில் தேர்ந்தவர்கள்  மன்னிக்கவும்.

உறுதியான அனுமானங்கள்:

1. வீர கணபதி

பார்த்தவுடன் தெளிவாகத் தெரியும் வடிவமிது. 18 கரங்களுடன் உள்ள ஒரே கணேச வடிவம் இது மட்டுமே. சிவப்பு வண்ணத்தில் ‘வீர கணபதி’ குறிக்கப்படுவதாக ‘சிவநிதி’ சொல்கிறது.
இந்த ஓவியத்தில் வலது கரங்களைப் பார்த்தால் தெரியும். சிவப்பு வண்ணம் முழுதும் உரிந்து போயிருந்தாலும் அப்பகுதியில் மட்டும் கொஞ்சம் சிவப்பு எஞ்சியிருப்பதை காண முடியும்.

2. உச்சிஷ்ட கணபதி

கண்டுபிடிக்க கொஞ்சம் சிக்கலான ஓவியம்தான். பெண்ணோடு காட்சி தரும் ஓவியம் என்பது தெரிகிறது. ஆறு கரங்களா அல்லது எட்டு கரங்களா என்பது தெளிவாக இல்லாத நிலையில் இது ‘உச்சிஷ்ட கணபதி’யாகவோ அல்லது ‘ஊர்த்துவ கணபதி’யாகவோ இருக்க வாய்ப்புள்ளது.
ஆனால் இது ‘உச்சிஷ்ட கணபதியே’ என நமக்கு உணர்த்துவது, துதிக்கையின் நிலைதான். ‘According to another treatise, The lord enjoys tasting the juice of a lady’s vagina’ எனச் சொல்கிறது ‘சிவநிதி’ நூல் பதிப்பு(பக்கம் 327). இந்த விளக்கத்திற்கேற்றார்போல, இந்த ஓவியத்தை கூர்ந்து கவனித்தால் துதிக்கையின் நிலையை காணமுடியும். இதே நிலையில்தான் ‘சிவநிதி’யிலும் ஓவியம் வரையப்பட்டுள்ளது. இதைக் கொண்டு இவ்வோவியம் ‘உச்சிஷ்ட கணபதி’ என உறுதியாகச் சொல்ல முடியும்.

3. லட்சுமி கணபதி

இரண்டு பெண் கடவுளர்களுடன் காட்சி தருவதான ஒரே வடிவம் ‘லட்சுமி கணபதி’. இதையும் பார்த்த மாத்திரத்திலேயே சொல்லிவிட முடியும்.

4. ஹேரம்ப கணபதி

இதுவும் எளிதானது. சிம்ம வாகனத்தில் வரும் ஒரே வடிவம் ‘ஹேரம்ப கணபதி’.
ஐந்து தலையுள்ள இந்த வடிவமும், சிங்கத்தின் மரபான வடிவமும், சிவநிதியில் உள்ளதைப் போலவே கொஞ்சம் கூட மாறாமல் மிகத் துல்லியமாக இருக்கிறது.

உறுதியற்ற அனுமானங்கள்:

5.வரிசையின் முதலில் இருப்பதை கணக்கில் கொண்டால் ‘பால கணபதியாக’ இருக்கலாம்.

6. நான்கு கைகளுடன், பெண்ணோடு காட்சி தரும் வகையில் மூன்று வடிவங்கள் உண்டு. அவை முறையே ‘சக்தி கணபதி’, ‘வர கணபதி’, ‘சங்கடஹர கணபதி’ ஆகும்.
இந்த ஓவியம் வர கணபதியாக இருக்க வாய்ப்பில்லை. உச்சிஷ்ட கணபதி போன்ற சித்தரிப்பு வர கணபதிக்கும் உண்டு. வர கணபதியில் ஒரு கை பெண்ணின்(புஸ்தி) தொடைகளுக்கிடையே இருப்பதாக ‘சிவநிதி’ சித்தரிக்கிறது. இந்த ஓவியத்தில் அப்படியான சித்தரிப்பு இல்லை. எனவே இது ‘சக்தி கணபதி’யாகவோ, ‘சங்கடஹர கணபதி’யாகவோ இருக்கலாம். வரிசையில் ‘வீர கணபதிக்கு’ அடுத்து இந்த ஓவியம் உள்ளதால் பெரும்பாலும் இது ‘சக்தி கணபதி’யாக இருக்கவே அதிக வாய்ப்புள்ளது.

7.பிரம்மாவின் உருவத்தோடு காட்டப்பட்டுள்ள இந்த வடிவம் வித்தியாசமானது. சிவநிதியில் இது போன்ற பிரம்மாவின் சித்தரிப்பு இல்லை.வரிசயை கணக்கில் கொண்டால் இது ‘துவிஜ கணபதி’யாக இருக்கலாம். தெரியவில்லை. வெள்ளை நிறம் எனவும், நான்கு முகமாகவும் ‘துவிஜ கணபதி’ சிவநிதியில் சொல்லப்படுகிறது.

8. கொஞ்சம் கஷ்டமானது. ‘உச்சிஷ்ட கணபதி’க்கு முன் இந்த ஓவியம் அமைந்திருப்பதால் இது ‘சித்த கணபதி‘யாக இருக்கலாம். சிவநிதியில், சித்த கணபதியின் வண்ணமாக ‘தங்க மஞ்சள்’ நிறம் சொல்லப்படுகிறது. இந்த ஓவியத்தை பார்க்கும் போதும் மற்ற ஓவியங்களை விட மஞ்சள் வண்ணம் அதிக அளவில் இருப்பதை பார்க்க முடிகிறது. எனவே சித்த கணபதியாக இருக்க அதிக வாய்ப்புள்ளது.

9. எலியை வாகனமாகக் கொண்ட ‘விஜய கணபதி’யாகவோ, ‘சிருஷ்டி கணபதி’யாகவோ இருக்கலாம். ரெண்டிற்கும் ஒரே மாதிரியான விளக்கங்கள்தான் சிவநிதியில் உள்ளது.

10.சரியாகத் தெரியவில்லை. வரிசையை கணக்கில் கொண்டால் ‘நிருத்திய கணபதி’யாக இருக்கலாம். ஆனால் நிருத்திய கணபதி மரத்தினடியில் நின்ற நிலையில்தான் காட்டப்படும்.

11, 12. மேலுள்ள ரெண்டும் ஆறு கரங்களுடையது. 32 வடிவத்தில் ஆறு கரங்களுடைய தனித்த நிலையில் இருக்கும் கணபதி ‘திரியஷ்ட கணபதி’ மட்டுமே. எனவே இவற்றில் ஏதோ ஒன்று ‘திரியஷ்ட கணபதி’யாக இருக்க வேண்டும். மற்றது என்ன வகை எனத் தெரியவில்லை.

மிச்சமுள்ள 20 வடிவங்களும் கழுகுமலை வசந்த மண்டபத்தில் அழியாமல் இருக்குமேயானால் இன்னும் தெளிவாக 32 வடிவங்களையும் தெரிந்து கொள்ள முடியும்.

இன்னும் சில ஓவியங்கள் வடிவத்தில் அப்படியே ‘சிவநிதி’யுடன் ஒத்துப்போகும் சில ஓவியங்களை கீழே கொடுத்துள்ளேன். அவற்றின் பெயரையும் சிவநிதியில் உள்ள படி கொடுத்துள்ளேன்.

‘சைவ காரணாகமத்தில்’ குறிப்பிடப்பட்டுள்ள ‘உமா தாண்டவ மூர்த்தி’ வடிவம்.

‘நிர்சிம்ம பிரசாதா’வில் குறிப்பிடப்பட்டுள்ள ‘கெளரி’ வடிவம்.

இந்த வடிவம் ‘விநாயகரை’ சுமந்த படி காண்பிக்கப்பட வேண்டும் என சிவநிதி சொல்கிறது. ஆனால் சிவநிதி ஓவியத்தில் அந்த சித்தரிப்பு இல்லை. இந்த கழுகுமலை ஓவியத்தில் விநாயகர் மடியில் அமர்ந்த நிலையில் காட்டப்பட்டுள்ளது. அந்தப் பகுதி தெளிவில்லாமல் உள்ளது. கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் விநாயக உருவத்தை பார்க்க முடியும். அமுதை கையிலேந்திய குடத்தையும் இதில் காணலாம்.

‘சைவ காரணாகமத்தில்’ குறிப்பிடப்பட்டுள்ள ‘தட்சிணாமூர்த்தி’ வடிவம்.
கைலாய மலையின் மேல் பிரமுகர்கள் சூழ ‘வியாக்யா பீடத்தில்’ அமர்ந்த வடிவம் என்கிறது சிவநிதி .


ஈசனின் கல்யாண வைபவத்தில் நிகழும் பல்வேறு நிகழ்வுகள்

இன்னும் சில ஓவியங்களையும் ‘ஶ்ரீ தத்வ நிதி’ மூலம் அறிந்து கொள்ள முடியும். இத்துறை சார்ந்தவர்கள் இதைச் செய்தால் பலனுண்டு.

 

ஆகஸ்ட் 15

அடிமை என்ற சொல்

அகராதிக்கு மட்டும்தான்.

           தடி கொண்டு அடித்தாலும்

           தரணிக்கே எம் மூச்சு.

தேசத்தைக் காப்பாற்ற

பந்த பாசத்தை மறப்போம்.

           ஆயுதம் வேண்டாம்

           நெஞ்சை ஆயுதமாக்குவோம்.

கத்தி கொண்டு கீறினாலும்

கப்பல் கட்டி செலுத்துவோம்.

           விண்ணில் பறப்பது மண்ணிலா?

           கூடு சாய்ந்தாலும்

           கொடியைக் காப்பேன்.

கவிபாடும் முந்தானை

களம் சென்று வெல்லும்.

          என்று

          எத்தனையோ பேர் – தன்

          மூச்சும் பேச்சும்

          உயிரும் உடலும் தந்து

          பெற்ற சுதந்திரம்!

இன்று

மலையும் அலையும்

மலரும் மணமும்

மனதை மயக்க – நாம்

கவிதை சொல்லி களித்திருக்கிறோம்!

         இம்மகிழ்ச்சி தந்தோரை

         மனதில் நிறுத்துவோம்

         இப்பொன்னாளில்!

                                                                                                -அசின் சார், கழுகுமலை. 

 

தேஊல்(Deool) – மராத்தியத் திரைப்படம்!

மா. சட்டநாதன், கழுகுமலைஎழுத்தாளர் ஜெயமோகன், விஷ்ணுபுரம் நாவலில் தொன்மங்கள் எப்படிக் கடவுள்களாக உருமாற்றம் அடைகின்றன என்பதை அற்புதமாக எழுதியிருப்பார். அதைப் படித்தபின் நான் கும்பிடும் கடவுள்களின் கதைகள், ஒருவேளை இப்படி இருந்திருக்குமோ, இல்லை அப்படி இருந்திருக்குமோ? என்றெல்லாம்யோசித்தது உண்டு. இந்து மதத்தில் அப்படி யோசிக்கத் தடை இல்லை. விஷ்ணுபுரம் நாவலிலாவது ஏதோ நூற்றாண்டுகளுக்குப் பின்னர் வரும் தலைமுறையினர்தான் பழைய வரலாற்று மனிதர்களைத் தெய்வத் தன்மை ஏற்றி  கடவுள்களாக உருவகித்தார்கள். ஆனால், இப்போது நம் கண் முன்னாலேயே உருவாகிப் பிரபலமாகும் கடவுள்களுக்கும் கோவில்களுக்கும் பஞ்சமே இல்லை!

கடவுள்கள் ஏன் தேவைப்படுகிறார்கள்? என்பது விரிவான புலத்தில் வைத்து விவாதிக்கப்பட வேண்டிய ஒன்று. இருப்பினும், இந்தக் கேள்விக்கான தேடலில் ஒரு கீற்றை  “தேஊல்”( देऊळ, Deool) என்ற மராத்தியத் திரைப்படம் காட்டுகிறது.

“தேஊல்” என்ற வார்த்தைக்குக் “கோவில்” என்று பொருள். மகாராஷ்ட்ராவில் நீங்கள் பயணம் செய்தால் ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு “தத்தாத்ரேயர்” கோவிலையோ, மடத்தையோ , ஆசிரமத்தையோ  பார்க்கலாம். தமிழ் நாட்டில் இந்த “தத்த” வழிபாடு அதிகமாக  இல்லை.

இப்படத்தின் கதை மிகச் சாதாரணமானது. மங்க்ருள்(Mangrul) என்ற கிராமத்தைச் சேர்ந்த, கேஷா(Keshya) ஓர் எளிமையானவன். மாடு மேய்க்குமிடத்திலுள்ள ஒரு மரத்தடியில், குட்டித் தூக்கம் போடும் போது, அவனுக்குக் கனவில் கடவுளின் (தத்தாத்ரேயரின்) காட்சி கிடைக்கிறது. அவனுக்குக் காட்சி கிடைத்த அந்த மரத்தைப் பரவசமாக வழிபாடுகிறான். இது செய்தியாகி கோவிலாகிறது. இந்தக் கோவில் – ஊரையும் மக்களையும் எப்படி மாற்றி விடுகிறது என்பதுதான் இப்படத்தின் கதை. அரசியல்வாதிகளுக்கும் வியாபாரிகளுக்கும் கடவுள் முக்கியமில்லை. கோவிலும், அது தரும் வருமானமும்தான்  முக்கியம் என்பதைக் குறியீடாக உணர்த்துவதுடன் படம் முடிகிறது.எப்போதுமே ஒன்றுமே இல்லாததிலிருந்து கனவு வருவதில்லை. கனவை அனுபவித்தவர்களுக்கு இது புரியும். இதை இப்படத்தில் நேரடியாகச் சொல்லாமல் நம்மை யோசிக்க வைக்கிற ஒரு காட்சியும் உண்டு. கேஷா தன்னுடைய பசு கர்தியைத் தேடி வரும் போது, அன்னா குல்கர்னியின் வீட்டில் “தத்தாவின்” படத்தை ஓரிரு வினாடிகள் பார்க்கிறான். பின் கனவு வருவது நல்ல உளவியல் ரீதியான காட்சியாக இருக்கிறது.

முதலில் கிண்டல் அடிக்கும் இளைஞர்கள், ஊர்ப் பெண்கள், ரிப்பேர் செய்ய வருபவன் மரத்தில் கிறுக்கியதை தத்தாவாகவும் அவரது வாகனமாகவும் அவர்களே உருவகித்துக் கொள்வது, கடவுளைப் பற்றி மனிதன் தானாகவே நிறையக் கற்பனைகளை வளர்த்துக் கொள்வதைக் காட்டுகிறது.

தங்களுக்குத் தேவையெனில் அரசியல்வாதிகளும், மீடியாக்களும் எதையும் எப்படியும் செய்வார்கள் என்பதை நன்றாகக் காட்டியிருக்கிறார்கள். ஊர்க்கூட்டத்தில்  முதலில் கடுமையாக எதிர்க்கும் பாவு( Bhau Galande), செல்போனில்  தனது மேலிடம் சொன்னவுடன் அப்படியே கொஞ்சங்கூட தயக்கமோ கூச்சமோ இன்றி தனது பேச்சை கோவில் கட்டுவதற்குச் சாதகமாக மாற்றும் இடம் சிரிக்க வைத்தாலும், இன்றைய அரசியல்வாதிகள் இப்படித்தான் என்பதை வேதனையோடு நினைக்க வைக்கிறது.

அன்னா குல்கர்னி அவ்வூரை விட்டு வெளியேற முடிவு செய்கிறார். அப்போது பாவு பேசும் வசனங்கள், கேட்பதற்கு ஊரை முன்னேற்றுவது போலத் தெரிந்தாலும், கோவில் பெயரால் அவர் செய்கிற சட்ட விரோதச் செயல்களை நியாயப்படுத்துவதை யாராலும் கண்டுபிடித்து விடமுடியாது. ஆனால், அன்னா கண்டுபிடித்து விடுகிறார். அதற்கு பதில் சொல்லும் பாவு, “ஒரு வேளை சட்டம் எங்களை நோக்கிப் பாய்ந்தால், எங்களுக்கும் சட்டத்திற்கும் இடையே லட்சக்கணக்கான மக்கள் இருப்பார்கள். அவர்களைக் கடந்துதான் வரவேண்டும்” என்று கூறும் போது, இந்திய அரசியல் ஏன் இப்படி இருக்கிறது? என்ற கேள்வி நமக்குள் எழுகிறது.மதுபானக் கடையில் இளைஞர்கள் கூட்டம் தண்ணி அடித்துக் கொண்டே, கோவில் கட்டும் யோசனையை மீடியா நிருபரிடம் பேசுவது ஒரு நல்ல குறியீடு. ஏனெனில், நம் புனிதங்கள் யாரால்,எங்கு, எதற்காக உருவாக்கப்படுகின்றன? என்பது நாம் என்றும் அறியாத, ஆராயாதவைகளே!

அரசியலில் பெண்களை முன் நிறுத்தினாலும், ஆண்கள் கையில்தான் அதிகாரம் என்பது எப்போதும் போல காட்டப்படுகிறது. ஆனாலும் பெண்கள் ஒன்றும் விவரம் இல்லாதவர்கள் இல்லை என்பதும் இதில் காட்டப்படுகின்றது.

பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால், கடையில் நல்ல வியாபாரம். கேஷாவின் வீட்டில் இப்போது புது டிவி வந்து விட்டது. அவன் தாயார் கோவிலுக்கே போவதில்லை. கேஷா இதைப் பற்றிக் கேட்கும் போது, “கடவுள் எல்லாவற்றிலும் இருக்கிறார். நாமலே எப்பவும் போய் சாமி கும்பிட்டுக் கிட்டிருந்தா, வெளியூர்க்காரங்க எப்படி தரிசனம் செய்வார்கள்?” என்கிறாள். கேஷாவோடு நாமும் பேச முடியாமல் ஆகிறோம். மனிதர்கள்தான் எப்பேர்ப்பட்டவர்கள்?

அகழ்வாய்வு செய்யும் இடத்தில் குண்டடிபட்டு கிடக்கும் திருடனை, கேஷா பார்க்கிறான். அவனிடம், “நீ கோவிலைக் கொள்ளையடிக்கத்தானே வந்தாய்?” என்று கேட்க, அதற்குத் திருடன், “சேச்சே, இந்த தத்தா மிகவும் சக்தி வாய்ந்தவர், நான் திருடப் போகுமுன் அவரை வணங்கி விட்டுத்தான் செல்வேன்” என்று கூறும்போது கேஷாவிற்கு மட்டுமல்ல, நமக்கும் ஏதோ புரிகிறது.

இசையமைப்பாளர் மங்கேஷ் தாக்தே தன்னுடைய பங்கை நன்றாகச் செய்திருக்கிறார். அவரது இசையில் “தேவா துலா சோது குட்ட” அதாவது, கடவுளே நீ எங்கு உறைகிறாய்? என்ற பாடலைக் கேட்டுப் பாருங்கள். நல்ல பொருள் பொதிந்த, இனிமையான மராட்டிய மணம் கமழும் பாடல் இது.2011 நவம்பரில் வெளியான இந்தப் படம், மிகச் சிறந்த திரைப்படத்திற்கான (Best Feature Film) தேசிய விருதைப் பெற்றது. மிகச்சிறந்த நடிகர் மற்றும் வசனத்திற்கான தேசிய விருதும், கேஷாவாகநடித்திருக்கும் “கிரீஷ் குல்கர்னிக்குக்” கிடைத்தது.

இயக்குனர் உமேஷ் விநாயக் குல்கர்னி படத்தை மிக நுணுக்கமாக நெய்திருக்கிறார். திரைக்கதையின் போக்கு படத்தைப் பிரமாதமாகக் கொண்டு போகிறது. நானா படேகர், கிரீஷ் குல்கர்னி, சோனாலி குல்கர்னி, திலீப் பிரபவால்கர் என முக்கியமான அத்தனை நடிகர்களும் கதையைப் பிரதானப்படுத்தி ஓர் அருமையான திரைப்படத்தைத் தந்திருக்கிறார்கள். நஸ்ருதீன்ஷா, இப்படம் மூலமாக மராட்டியத் திரைப்படத் துறையில் நுழைகிறார். இப்படத்தைப் பார்க்கும் அனைவருக்கும், ஒரு நல்ல மராட்டிய கிராமத்திற்குச் சென்று வந்த உணர்வு நிச்சயம் ஏற்படும்.எனக்கு என்ன குழப்பம் என்றால், கட்டுச் சோற்றிற்குள் எலியை வைத்துக் கட்டுவது போல, இந்தப் படத்திற்கு எப்படி தேசிய விருது கொடுத்தார்கள் என்பதுதான்! ஏனெனில், இப்படம் நம்அரசியல்வாதிகளையும், மீடியாக்களையும் அப்பட்டமாகத் தோலுரித்துக் காட்டுகிறது. (மீடியாவை “Peepli  Live” கழுவில் ஏற்றியது உண்மைதான் என்றாலும், இந்தப் படத்தையும் அந்த வரிசையில் வைக்கலாம்.)

பொதுவாக, அரசு ஏதேனும் ஒரு பெரிய பிரச்னை என்றால் உடனே ஒரு விசாரணைக் கமிசன் அமைக்கும். அந்தக் கமிசன் பத்து இருபது வருடங்களுக்குப் பின்னர் முடிவைச் சொல்லும். அப்போது, பலருக்கு அந்தப் பிரச்சனையே மறந்து போகும். அதேபோல, தேசிய விருது வாங்கிய திரைப்படங்களை வெகுஜனம் விரும்பிப் பார்க்காமல் மறந்து போவதும் வாடிக்கைதானே!