RSS

ஞானம்

31 ஜூலை

சிறுகதை: அசின் சார், கழுகுமலை.“கோபமுன்னா கோபம், எனக்கு அப்படியொரு கோபம்! நினைத்தால் நெஞ்சமெல்லாம் வெம்மை படர்கிறது. எப்படியெல்லாம் என் தாய் என்னை வளர்த்தாள் தெரியுமா? எங்கெல்லாமோ இருந்து தேடித்தேடி எடுத்து வந்த உணவை சிறிது சிறிதாய் என் வாயில் ஊட்டி வளர்த்தாள். யாராவது என்னை நோட்டமிட்டால், அவர்களை அருகில் வர விடாமல் துரத்தி துரத்தி விரட்டுவாள். கூட்டில் வந்து உட்காரும் போதெல்லாம் சிறகுக்குள் வைத்துக்கொண்டு என்னைக் கொஞ்சி மகிழுவாள். ஆசையாய் அவ்வப்போது என் மேல் வளரும் சிறு சிறு இறகுகளை தன் அலகால் நீவி விட்டுப் பூரிப்பாள். அப்போதெல்லாம் என் தாயின் பாசப்பொழிவில் என் கண்களை மூடி உலகையே மறந்திருக்கிறேன்.”

“இலைகளுக்கிடையே வரும் சூரியக்கதிர்களால் நான் வாடி விடுவேனோ என்று, அவள் சிறகுகளை விரித்து என்மேல் நிழல் பரப்புவாள். என் சின்னஞ்சிறு சிறகையடித்து முதன்முதலில் நான் பறக்க முயற்சித்த போது, தத்தித் தத்திப் பறந்த என்னை பக்கத்திலிருந்தே பார்த்து ரசிப்பாள். நான் எங்கே தவறி விழுந்து விடுவேனோ என்று மனம் பதறி என்னை சுற்றிச் சுற்றியே வருவாள். என்னை இரையென நினைக்கும் அரக்கப் பறவைகளைக் கண்டால் அவற்றை அஞ்சி ஓட வைப்பாள். என் அன்னையா இவ்வளவு கோபக்காரி என்று நான் ஆச்சரியப் பட்டதுண்டு. உணவைத் தேடவும், உணவை உண்ணவும், விரோதியை விரட்டவும், விரைவாய்த் தப்பிக்கவும் நான் நன்றாக அவளிடம் கற்றுக் கொண்டேன்.”

“ஆனால், இன்று நான் பிறந்த கூட்டுப் பக்கம் போனாலே என் தாய் என்னை கொத்திக் கொத்தி விரட்டி விடுகிறாள். நான் எங்கு செல்வேன்?” என்று மனம் உடைந்து, மனம் போன போக்கில் பறந்து திரிந்து சென்றது அந்த இளஞ்சிறுபறவை.

காட்டைக் கடந்து நகரின் ஓரத்திற்கு வந்தது. களைத்துப்போன அப்பறவை, ஒரு வீட்டின் அருகிலிருந்த மரத்தின் ஒரு கிளையில் உட்கார்ந்தது. அம்மரக் கிளைகளில் பல பறவைகள் ஆனந்தமாய் இருந்தன. இவைகளால் எப்படி இவ்வளவு சந்தோசமாய் பாடிப் பறந்து மகிழ முடிகிறது என்று தனக்குள் நினைத்தது. காட்டின் அழகும், இயற்கையின் சப்தமும் கேட்டுப் பழகிய அதற்கு, மனிதர்களின் நடமாட்டமும், நகரில் எழும் செயற்கையான ஓசைகளும் புதிதாய்ப் பட்டது. அச்சம் கொண்ட மனதுடன் அமர்ந்து நாலாபுறமும் வெரித்து வெரித்துப் பார்த்தது.

அந்த வீட்டினுள் மனிதர்கள் பேசுவது அதற்குத் தெளிவாகக் கேட்டது. “அப்பா எனக்கு ஸ்கூலே பிடிக்கல, பேசுனா திட்றாங்க, சிரிச்சா அடிக்கிறாங்க, எதுக்கெடுத்தாலும் மிஸ் கூப்பிட்டு அப்படி செய்யக் கூடாது, இப்படி செய்யக் கூடாதுன்னு சொல்றாங்க. பசங்கெல்லாம் எங்க ஸ்கூல ஜெயிலு மாதிரின்னு கிண்டல் பன்றாங்க.” என்று அந்த வீட்டிலுள்ள எல்.கே.ஜி வாண்டு சொல்லிக்கொண்டு இருந்தது. அதற்கு அவரோ, “உங்க மிஸ் நல்லதுக்குத்தான் சொல்வாங்க, பசங்க சொல்றதெல்லாம் கேட்காத! உன் வயசுல அப்பா ஸ்கூலுக்குப் போனப்பகூட அப்பிடித்தான் இருந்தது, பின்னே சரியாயிடும், இன்ன பாப்பா?” என்று சரிக்கட்டிக் கொண்டு இருந்தார்.

அப்போது தெருவில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தவர், முன்னால் நடந்து வந்தவரைப் பார்த்தவுடன் “என்ன மாப்ளே!” என்று கேட்டுக்கொண்டே சைக்கிளை நிறுத்தினார். “வேலையில இருந்து நின்னுட்டதாச் சொன்னாங்களே, நெசமாவா?” என்றார். “ஆமா, மச்சான். அவனென்ன கம்பெனியா நடத்துறான்? ஜெயிலுல நடத்துறான். கைதியா வாழுற பொழப்பு நமக்கெதுக்கு? அதான் நின்னுட்டேன்! வக்கில்லாத பயலுக போய்க்கிட்டு இருக்காங்க.” பொருமினார். சைக்கிள்காரரோ, “அப்புறம் என்ன செய்றதா உத்தேசம்?”என்றார். “வேலைக்குனு எங்க போனாலும் இந்த நாறுன பொழப்புதான். அது நமக்கு சரிப்பட்டு வராது. குத்தகைக்கு விட்ட நம்ம நிலம், குத்தகைக் காலம் முடிஞ்சி சும்மாதான் கிடக்கு. அதுல விவசாயம்  பண்ணலாமுனு நெனைச்சிருக்கேன் மச்சான்.” “நல்ல முடிவுதான் மாப்ளே, இத உங்கய்யா கேட்டா ரொம்ப சந்தோசப் பாடுவாரு.” மரத்திலிருந்து மனிதர்களின் பேச்சைக் கூர்ந்து கேட்டுக் கொண்டிருந்தது அச்சிறுபறவை.

அப்போது, அந்த வீட்டிற்குள் வந்த அவரின் தங்கை அவரோடு பேசிக்கொண்டிருந்தாள். “என்னம்மா சௌக்கியமா?” என்றார். அதற்கு அவள், “சௌக்கியத்துக்கு என்ன கொறச்சல், தங்கக் கூண்டுக்குள்ள கிளிக்கு பாலும் பழமும் வச்சி பூட்டுன வாழ்க்கை வாழுதேன். சுருக்கமா, ஜெயிலுனு சொன்னா கேக்கவா போறீக?” என்றாள். அதுவரை கேட்டுக் கொண்டிருந்த பறவைக்கு இப்போது ஒரு வித பயம் தொற்றிக்கொண்டது. “என்னடா இது எல்லா மனுசங்களும் ஜெயிலு ஜெயிலுனு பேசுறாங்க, பயப்படுறாங்க! அப்படின்னா என்னவா இருக்கும்?” தன்னைத்தானே யோசிக்க ஆரம்பித்தது.

“நாம காட்டுல இருக்கும் போது பெரிய மூக்கும், மொக்கைக் காலுல கத்தி நகமும் வச்சு வருமே, அது மாதிரி ராட்சஸப் பறவையோ? இல்ல, பிரளயமே அழியிராப்பில காத்து அடிச்சு மரத்தையெல்லாம் ஒடிச்சிப் போடுமே அப்படி இருக்குமோ?” என்றதன் அறிவுக் கருவூலத்தில் தேடிக்கொண்டிருக்கும் நேரத்தில், அவ்வீட்டின் அறையில் அவர் மனைவி வந்தாள். “நீயாவது நல்லாக் கேளு. ஒரு நல்ல நாளு பொல்ல நாளுன்னு நாம எங்கேயும் போறமா? கோயில் குளம்னு ஏதாவது ஊரு ஒலகம் உண்டா? இல்ல, சாயங்காலம் கடத்தெருவுல போயி ஒரு ரவுண்டு அடிச்சுட்டு வாரமா? வியாபாரம் யாபாரம்னு இவுக நல்லா சுத்துறாக, நாம இந்த நாலு சொவத்துக்குள்ள கைதியாக் கெடக்கோம். இத ஜெயிலுனு சொல்லாம என்னத்தச் சொல்ல?” என்று அவள் சொன்னதும், பட்டெனப் பட்டது பறவைக்கு!

ஊர் உலகத்தை பார்க்காமல், தன்னைப்போல பறந்து திரியாமல், ஓரிடத்திற்குள் அடைபட்டுக் கிடக்கும் வாழ்க்கையைத்தான் இந்த மனிதர்கள் ஜெயில் என்கிறார்கள். மனிதர்களைப் போல ஜெயில் வாழ்க்கை வாழக் கூடாதுன்னுதான் என்னையும் என் தாய் துரத்தி இருக்கிறாள் என்று  நினைத்தது. அதற்குள் சொல்ல முடியாத சந்தோசம் ஆறாய்ப் பெருக்கெடுத்தது.

அங்குமிங்கும் பாடிப் பறந்தது. உயரமான, குள்ளமான மரங்களின் உச்சிக்குச் சென்று திரிந்தது. அழகழகாய்ப் பூத்திருக்கும் மலர்களைப் பார்த்து ரசித்தது. விதவிதமான பழங்களைத் தின்று மகிழ்ந்தது. பறந்துகொண்டே பூமியின் பசுமையையும், நீரோடையின் அழகையும், மலைகளின் உச்சத்தையும் கண்டு வியந்தது. இவையனைத்தும் கூட்டு ஜெயிலை விட்டு வந்ததாலேயே தனக்குச் சொந்தமென, தன் தாயை நினைத்து மெச்சிக் கொண்டது!

Advertisements
 

3 responses to “ஞானம்

 1. vidhaanam

  02/08/2012 at 5:55 முப

  இக்கதையில் ‘உருவகக் கதையின்’ சாயல் உள்ளது. இன்னும் கொஞ்சம் பூடகமாக இருந்திருந்தால் 100 சதவிகிதம் உருவகக் கதையின்’ அனுபவத்தை தந்திருக்கும் என நினைக்கிறேன். இப்போதெல்லாம் உருவகக் கதை புத்தகங்களை பார்க்க முடிவதில்லை. சிறு வயதில் கழுகுமலை நூலகத்தில் ‘கலீல் இப்ரானின்’ உருவகக் கதைகள், இன்னும் சில தமிழ் உருவகக்கதைகளை படித்தது நினைவுள்ளது. அதிலும் ‘கலீல் இப்ரானின்’ ‘பைத்தியக்காரன்’ என்ற கதை உள்ளனுபவம் தரும் கதை. இலக்கியம், இலக்கிய தரிசனம், பிரதி, உள்பிரதி, அது, இது என்ற ஆர்ப்பாட்டான சூழலில் இந்த அத்தனை விஷயங்களையும் தனக்குள் கொண்டு மிக எளிதாய் காட்சி தரும் உருவகக்கதைகள் அதிகம் வர வேண்டும். மீண்டும் அந்த எளிய வாழ்க்கையை நினைவுபடுத்திய இந்தக் கதைக்கு நன்றி.

   
 2. vidhaanam

  02/08/2012 at 6:22 முப

  வலையில் சிக்கிய ‘கலீல் இப்ரானின்’ ‘நரி’ என்ற கதை:

  சூரியன் உதயமான நேரத்தில்,தன் நிழலைப் பார்த்தபடி நரி இப்படி சொல்லிக் கொண்டது:

  ‘இன்னைக்கு மதிய சாப்பாட்டுக்கு ஒரு ஒட்டகத்த புடிச்சு வேட்டையாடிறலாம்’

  பகல் முழுதும் அதற்காக அலைந்து முயன்றது. ஒன்றும் நடந்த பாடில்லை.

  உச்சிவெயில் நேரமும் வந்தது. தன் நிழலை இப்போது மீண்டும் பார்த்தபடி இப்படி சொல்லிக் கொண்டது:

  ‘எலியே போதும்.’

   
 3. Alex Ambrose

  15/08/2012 at 2:56 பிப

  எஸ்.ராம கிருஷ்ணனின் எழுத்துநடையைப் போல கதை சொல்லும் பாணி இது. கல்வி முறை, வேலை, வாழ்க்கை என எல்லாமும் இயந்திரமயமாகிவிட்டதை, நாம் உணர்ந்து , தெளிந்து கொள்ள சிறுபறவையின் மனநிலையிலிருந்து கதை சொல்லப்பட்ட விதம் மிக அழகு. ருசியைத் தேடும் வாழ்க்கைக்காக, எளிமையான வாழ்கையை தவறவிடக் கூடாது என்பது தான் நான் புரிந்துகொண்ட கற்பிதங்கள். இதைப் போல மென்மேலும் நிறைய படைப்புகளை , நீங்கள் பதிவு செய்ய விரும்புகின்றேன்.

   

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: