RSS

மும்மாரி

26 ஜூலை

ரஞ்சித் பரஞ்ஜோதி, பெங்களூர். வானோக்கி வாழும் உலகை இந்த வருடம் பருவமழை ஏமாற்றிவிட்டது. கர்னாடக பா.ஜ அரசும் 17 கோடியை மழை பெய்ய வேண்டி சிறப்பு பூஜைகளுக்கு ஒதுக்கியது. கடவுளும் காசு வாங்கிக் கொண்டு ஏமாற்றிவிட்டார். அவ்வப்போது வெறும் தூறலோடு ‘தண்ணி’ காட்டிவிட்டுச் செல்கிறது. மழை கொட்டிய பாடில்லை. சினிமாவில் மட்டும் ஹீரோக்களுக்கு கோபம் வரும் போதும், ஹீரோயின்களுக்கு காதல் வரும் போதும் மழை யோசிக்காமல் மறுகணமே இறங்கி விடுகிறது. ஒருவேளை நிஜ வாழ்க்கையில் காதலும் கோபமும் குறைந்து விட்டதோ என்னமோ? இந்த மழையை எல்லா இடத்திலும் தேடிப்பார்த்து அலுத்துவிட்டது. கடைசியாகக் கோடிகளை செலவழிக்காமலேயே, மூன்று இடங்களில் இந்த மழையை சந்தித்தேன்.

1. அசோகமித்திரனின் ‘மழை’: மென்மையான மழையிது!

‘நீரின்றமையாது உலகு’ என்பதை ஒரு சிறுவனின் மழையுடனான அனுபவத்தோடு மழையின் குளிர்ச்சியோடு சொல்லும் சிறுகதை. மழையை வருணிக்காமலேயே, மழை பெய்த பிறகான சூழ்நிலையைக் காட்டி மழையின் அற்புதத்தை உணரச் செய்யும் கதை. தனது பெற்றோர்களின் உடைகள் ஏன் சிறிதாவதில்லை. தன் உடை மட்டும் ஏன் சிறியதாகிறது. ‘நான் மட்டும் ஏன் வளர்கிறேன்?’ என்ற கேள்விக்கு அந்தச் சிறுவன் ‘மழையை’ பதிலாகப் பெறுகிறான். அசோகமித்திரனின் பல கதைகள் முடிவு வரியை நோக்கிப் பயணம் செய்யும் கதைகள். இந்தக் கதையும்தான். மொத்தக் கதையுமே அந்த முடிவு வரிக்காகவே எழுதப்பட்டதாய் தோன்றும். இந்தக் கதையைப் போலவே என்னை மிகப்பாதித்த முடிவு வரி உள்ள மற்றொரு கதை ‘எலி’. அதுவும் அசோகமித்திரனின் கதைதான்.

2. பாரதி பொழிந்த ‘மழை’: சுழற்றியடிக்கும் மழையிது!

பாரதியின் கவிதைகளில் தனிப்பாடல்கள் என்ற தொகுப்பில் வருகிறது இந்த ‘மழை’ பற்றிய கவிதை. பாரதியின் கதைத்தொகுப்பிலும் மழை என்ற கதையில் இதே கவிதை கையாளப்பட்டிருக்கும். ஒருவேளை இந்தக் கதையிலிருந்து இந்தக் கவிதையை எடுத்து ‘பாரதி கவிதைகளில்’ தொகுத்தார்களா எனத் தெரியவில்லை. இக்கவிதையில் மழையை இசை வடிவாய்க் காட்டியிருப்பார் பாரதி. ‘தீம்தரிகிட’, ‘தக்கத் ததிங்கிட’, ‘தாம் தரிகிட’, தக்கத் தக’, ‘சட்டச் சட சட்டச் சட டட்டா’ போன்ற சந்தங்கள் ஒரு பெருமழை நிகழ்ந்த பிரமிப்பை நமக்குள் உண்டு பண்ணிவிடும். அந்தக் கவிதை இதோ:

         திக்குக்கள் எட்டும் சிதறி-தக்கத்

         தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட

         பக்க மலைகள் உடைந்து-வெள்ளம்

         பாயுது பாயுது பாயுது-தாம்தரிகிட

         தக்கத் ததிங்கிட தித்தோம்-அண்டம்

         சாயுது சாயுது சாயுது-பேய்கொண்டு

         தக்கை யடிக்குது காற்று-தக்கத்

         தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட

         வெட்டி யடிக்குது மின்னல்,-கடல்

         வீரத் திரைகொண்டு விண்ணை யிடிக்குது;

         கொட்டி யிடிக்குது மேகம்;-கூ

         கூவென்று விண்ணைக் குடையுது காற்று;

         சட்டச்சட சட்டச்சட டட்டா-என்று

         தாளங்கள் கொட்டிக் கனைக்குது வானம்;

         எட்டுத் திசையும் இடிய-மழை

         எங்ஙனம் வந்ததடா,தம்பி வீரா!

        அண்டம் குலுங்குது,தம்பி!-தலை

        ஆயிரந் தூக்கிய சேடனும் பேய்போல்

        மிண்டிக் குதித்திடு கின்றான்;-திசை

        வெற்புக் குதிக்குது;வானத்துத் தேவர்

        செண்டு புடைத்திடு கின்றார்;-என்ன

        தெய்விகக் காட்சியை கண்முன்பு கண்டோம்!

        கண்டோம் கண்டோம் கண்டோம்-இந்தக்

        காலத்தின் கூத்தினைக் கண்முன்பு கண்டோம்!

ஜலதோஷம் வராமல் மழையில் நனைய விரும்புவோருக்கு இந்தக் கவிதையை சிபாரிசு செய்யலாம். மழையை ‘காலத்தின் கூத்து’ என்று சொல்லும் அந்த சொற்பிரயோகம், இந்தக் கவிதையை அதன் எல்லைகளைத் தாண்டி நீட்டித்துக் கொண்டுசெல்கிறது. இந்தச் சொல் திரும்பத் திரும்ப மனதுக்குள் எழுப்பும் கிளர்ச்சியை பாரதியே வந்துதான் சொல்லால் விளக்க முடியும். நமக்கு அதை அனுபவிக்க மட்டுமே முடியும். சமீபத்தில் இன்னொரு சொற்பிரயோகம் இதே போல மிகவும் கவர்ந்தது. சங்கரதாஸ் சுவாமிகளின் ‘பவளக்கொடி’ நாடகத்தில் வருகிறது அந்த வருணனை. பெண்களின் கூந்தலை  ஒப்பிட வழக்கமாக ‘கார்மேகம்’ என்ற சொல்லைத்தான் பயன்படுத்துவார்கள். ஆனால் சுவாமிகள் பயன்படுத்திய சொல் ‘நீருண்ட மேகம்’.

3. இந்திரா பார்த்தசாரதியின் ‘மழை’: இது அடை மழை!

இந்திரா பார்த்தசாரதியின் முதல் நாடகம் இந்த ‘மழை’. மனக்கசப்பின் அடையாளமாய் மழையை காட்டியிருப்பார் இ.பா. விட்டு விலகவும் முடியாமல், கூட இருக்கவும் முடியாமல் மன உளைச்சலைத் தரும் உறவுகளின் குறியீடாய் ‘மழை’ விளங்கும். மழையும் ஒரு கதாப்பாத்திரம் போல நாடகம் முழுதும் உலவும். இ.பாவின் படைப்புகளில் அவரே தவிர்க்க முடியாதது அதிகமான உரையாடல்கள். கொஞ்சம் செயற்கையாகத் தெரிந்தாலும் மிகவும் ரசிக்க வைப்பவை இந்த உரையாடல்கள். ‘ரிஷ்யஸ்ரிங்கர்’ என்ற புராணப் பாத்திரத்தின் பெயரை ‘நிர்மலா’ என்ற கதாபாத்திரம் இந்த நாடகத்தில் குறிப்பிடுவதாய் வரும். அந்தப் பகுதி எனக்கு புரியவில்லை. பிறகொரு நாள் புத்த ஜாதகக் கதை புத்தகமொன்றை ‘பெங்களூர் ஷேஷாத்தரி ஐயர்’ நூலகத்தில் பார்த்தேன். அதில் இந்த ‘ரிஷ்யஸ்ரிங்கர்’ கதை இருந்தது.

அந்தக் கதை இதுதான்: ‘இமையத்தில் வசிக்கும் ஒரு முனி சிறுநீர் கழிக்க, அதில் கலந்த விந்து புல்லின் மீது படிய, அந்தப் புல்லை உண்ணும் மான் கருத்தரித்து ஒரு குழந்தையை பெறுகிறது. ஒற்றை மான் கொம்புடன் பிறக்கும் அக்குழந்தையை மற்றொரு முனி எடுத்து காட்டில் ரிஷ்யஸ்ரிங்கனாக வளர்க்கிறார். பெண் என்ற இனமே இருப்பது தெரியாமல் அவனை வளர்க்கிறார். அவனின் மகா சக்தியால் பொறாமையும் கோபமும் கொள்ளும் இந்திரன் காசி ராஜ்ஜியம் முழுதும் மழை வரவிடாமல் செய்து, அதற்கு காரணம் ரிஷ்யஸ்ரிங்கனின் சக்திதான் என்று காசியின் அரசனிடம் சொல்கிறான். ரிஷ்யஸ்ரிங்கனின் மகா சக்தியை முறியடித்தால்தான் காசி ராஜ்ஜியம் மழையை பெற முடியும் என்றும் சொல்கிறான். அரசனும் தன் மகள் நளினிகாவை காட்டிற்கு அனுப்பி ரிஷ்யஸ்ரிங்கனை மயக்கி அவனோடு கலவியுறவு கொள்ள கட்டளையிடுகிறான். நளினிகாவும் அவ்வாறே செய்து ரிஷ்யஸ்ரிங்கனின் பிரம்மச்சரியத்தை கலைத்து அவன் சக்திகளை மழுங்கடிக்கிறாள். இந்திரனும் காசிக்கு மழையை தருவிக்கிறான். பின்னர் இதைத் தெரிந்துகொள்ளும் ரிஷ்யஸ்ரிங்கனின் வளர்ப்புத் தந்தை அவனின் சக்திகளை மீட்டுக் கொடுப்பதாக கதை முடியும்.’

இராமாயணத்தின் ‘பால காண்டத்திலும்’, மகாபாரதத்திலும் சிறிய மாற்றத்துடன் ரிஷ்யஸ்ரிங்கரின் கதை உள்ளது. ரிஷ்யஸ்ரிங்கரும் அவரது வளர்ப்புத் தந்தையும் வசித்ததாக நம்பப்படும் பகுதியில் உள்ள ஊர் ‘ஸ்ரிங்கேரி’ என்ற பெயரில் இன்றும் கர்நாடகத்தில் உள்ளது. ரிஷ்யஸ்ரிங்கர் இன்றும் மழை வர வேண்டியும், மழையை நிறுத்த வேண்டியும் வழிபடப்படுகிறார். ரிஷ்யஸ்ரிங்கர் தயவில் விட்டுப் போன பருவ மழை பொழியட்டும்!

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * ** * * * * அசின் சார் எழுதிய  மழை பற்றிய க(வி)தை

Advertisements
 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: