RSS

ஷபனா ஆஸ்மி: உடைந்த பிம்பங்கள்!

20 ஜூலை

ரஞ்சித் பரஞ்ஜோதி, பெங்களூர்.பெங்களூர் ‘செளடய்யா’ நினைவுக் கலைக்கூடத்தில் 19-07-12 அன்று ‘Broken Images’ என்ற நாடகம் நிகழ்ந்தது. இது ஓரங்க – ஒரு கதாபாத்திர நாடகம்.

நாடக ஆசிரியர்: கிரிஷ் கர்னாட்
(குணா கமலுக்கு அழுகை வருவதற்கு ஊசி போடுவாரே அந்த டாக்டர்தான். ஞாபகமில்லையா? காதலனில் நக்மாவின் கவர்னர் அப்பா. இப்போ ஞாபகம் வந்திருக்கும்னு நினைக்கிறேன். இப்படி அறிமுகப்படுத்துவது அவருக்கு தெரிந்தால் ரொம்ப வருத்தப்படுவார். கன்னடத்தில் மிகச் சிறந்த நாடக ஆசிரியர் இவர். இந்திய அளவிலும் மிக முக்கியமான நாடக ஆசிரியர்)இயக்குனர்: அலிக் பதம்சி

(அட்டன்பரோவின் ‘காந்தி’ திரைப்படத்தில் ‘முஹமது அலி ஜின்னா’வாக வருவாரே அவர்தான்.
விளம்பர உலகின் குரு. அந்தக் கால DD தொலைக்காட்சியில் வந்த முக்கியமான விளம்பரங்கள் பலவற்றின் மூளை இவர்தான். மறக்க முடியுமா ‘ஹமாரா பஜாஜை’?)நடிப்பு: ஷபனா ஆஸ்மி

(ஓரளவு எல்லோருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன். தெரியலைனு சொல்றவங்களுக்கு சில திரைப்படத்தின் பெயர்கள்: Ankur, Godmother. Fire)நாடகச் சுருக்கம்: மஞ்சுளா ஷர்மா என்பவள் இந்தி எழுத்தாளர். அவள் ஆங்கிலத்தில் ஒரு நாவல் எழுதி உலகப் புகழ் பெற்றுள்ளாள். அவளை டி.வி ஸ்டுடியோவிற்கு அழைத்து வந்து சின்னதாய் ஒரு பேட்டி எடுக்கிறார்கள். இது பக்கத்தில் உள்ள டி.வி ஒன்றிலும் தெரிகிறது. அவள் பேசி முடித்ததும், அந்த டி.வி பெட்டியில் உள்ள அவளது உருவமும் அவளிடம் நேரடியாகப் பேசத் தொடங்குகிறது. முதலில் குழம்பும் மஞ்சுளா, கொஞ்சங் கொஞ்சமாய் அந்த டி.வியில் உள்ள அவளது உருவத்துடனேயே பேச ஆரம்பிக்கிறாள்.

இந்த உரையாடலில், அவளுக்கு மாலினி என்ற தங்கை இருந்த விஷயத்தை சொல்கிறாள். அவள் இடுப்புக்குக் கீழே செயல்பட முடியாமல் இருந்தவள். அவளை முக்கியப் பாத்திரமாக வைத்தே அந்தப் புகழ் பெற்ற நாவலை எழுதியதாகச் சொல்கிறாள் மஞ்சுளா. தன் தங்கை இறந்த விஷயத்தையும் துக்கத்தோடு அந்த பிம்பத்திடம் சொல்கிறாள். டி.வி. பிம்பம் தொடர்ந்து மஞ்சுளாவின் கணவனைப்பற்றி, அவனுக்கு மாலினியுடன் உள்ள உறவைப் பற்றியெல்லாம் பேசுகிறது. டி.வி யில் உள்ள மஞ்சுளாவும், உண்மை மஞ்சுளாவும் பேசப் பேச பல உண்மைகள் நமக்குத் தெரிய வருகிறது. மேலும், மஞ்சுளாவின் இறந்து போன தங்கை மாலினிதான், அந்தப் புகழ் பெற்ற நாவலை எழுதினாள் என்பதும்; அதைத் ‘தான்’ எழுதியதாகச் சொல்லி மஞ்சுளா உலகப்புகழ் பெற்றதும் தெரியவருகிறது. இறுதியில், உண்மை மஞ்சுளாவின் உருவம் துண்டு துண்டாக உடைவதாக காட்டப்படுவதுடன், அரங்கம் இருண்டு நாடகம் முடிகிறது!உறவுகளுக்கு இடையேயான மனோரீதியான சிக்கல்களைச் சொல்வதே நாடகத்தின் முக்கிய நோக்கமாக இருந்தாலும், ஆங்காங்கே நாடகத்தில் விரவியிருந்த மென்மையான நகைச்சுவையும், எழுத்துத் துறையில் நிலவும் அரசியலை லேசாகத் தொட்டுச் செல்வதும் நாடகத்தை மேலும் ரசிக்க வைத்தது. டி.வி யில் தோன்றும் ஷபனா ஆஸ்மியின் உருவம் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட ஒன்று. அந்த பிம்பத்தோடு டைமிங் மிஸ் ஆகாமல் நடிப்பதென்பது தேர்ந்த நடிகர்களுக்கே சாத்தியம். ஷபனா ஆஸ்மி தேர்ந்த நடிகைதான்.

‘ஒடகலு பிம்பா’ என்று கன்னடத்தில் கிரிஷ் கர்னாட் எழுதிய இந்த நாடகத்தை பின்னர் அவரே ஆங்கிலத்திலும் எழுதினார். 2004-ல் இந்த நாடகத்தில் வரும் அந்த ஒற்றை கதாபாத்திரத்தை செய்தது அருந்ததி நாக் – ‘இது ‘ப்ரூ’டா’ என்று ப்ரூ காஃபி விளம்பரத்தில் சொல்வாரே அவர்தான். அப்போது இந்த நாடகத்தை இயக்கியவரும் ‘கிரிஷ் கர்னாட்’தான்.

இப்போது ‘ஷபனா ஆஸ்மி’ நடிக்க அமெரிக்க நகரங்களில், மும்பையில், பெங்களூரில் என இந்த நாடகம் பெரிய அளவில் நடத்தப்பட்டுள்ளது. நம்மூர் மார்க்கெட் போன நடிகைகள் சிலர் ‘தானாட சதையாட’ போன்ற நிகழ்ச்சிகளுக்கு போய் பாடாய் படுத்தும் போது, சினிமாவில் இன்றும் பிஸியாக இருக்கும் ஷபனா ஆஸ்மி – இத்தகைய நாடகங்களைச் செய்வது பெரிய விஷயம்தான்.
நம்மூர் சினிமாக்காரர்களில் நாசரைத் தவிர வேறு யாரும் நாடகங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்களா? எனத் தெரியவில்லை. நாசர் மட்டுமே அவ்வப்போது நவீன நாடகங்களில் நடிக்கிறார்.

சே.இராமானுஜத்தின் ‘மெளனக்குறம்’, ‘செம்பவளக் காளி’, இந்திரா பார்த்தசாரதியின் ‘நந்தன் கதை’, ‘போர்வை போர்த்திய உடல்கள்’ சுந்தரராமசாமியின் ‘உடல்’ போன்ற நாடகங்களைத் திறமையான/பிரபலமான சினிமா நடிகர், நடிகைகளை வைத்து நிகழ்த்தப்பட்டால் எப்படி இருக்கும்? நன்றாகத்தான் இருக்கும். ஆனால் ‘திறமையான/பிரபலமான’ என்பது கொஞ்சம் கஷ்டம்தான்!பொதுவாக இது போன்ற நாடக ஷோக்களில் வழக்கமாக நடப்பவை:

1. கூட்டத்தில் பெரும்பாலானோர் ஜிப்பா அணிந்திருப்பார்கள். தடித்த ஃப்ரேமில் கண்ணாடி அணிந்திருப்பார்கள்.
2. ஷோவை நடத்துபவர்கள் டி-ஷர்ட்டுகளையும், போகாத சில புத்தகங்களையும் தள்ளி விடுவதற்காக வாசலில் காத்திருப்பார்கள்
3. எல்லோருடைய டிக்கெட்டிலும் நம்பர் போட்டிருந்தாலும், உள்ளே போய் இடம்பிடிக்கப் போவதைப்போல, கதவை திறக்கும் முன்பே அங்கு அலைமோதுவார்கள்.
4. ஷார்ப்பாக, நாடகத்தை சொன்ன நேரத்திற்கு 15 நிமிடம் கழித்தே ஆரம்பிப்பார்கள்.
5. எவ்வளவுதான் சொன்னாலும், நாடகத்தின் முக்கியமான காட்சியில் அரங்கமே அமைதியாக இருக்கும் போது, சிலர் செல் போனை அலற விடுவார்கள்.
6. ‘செல் போனை அலற விட்டது நானல்ல’ என்று உறுதிப்படுத்த, ‘யாரது?’ என்பது போல் பின்னால் திரும்பித் திரும்பிப் பார்ப்பார்கள் சிலர்.

இவை அனைத்தும் இந்த ஷோவிலும் நடந்தன!

Advertisements
 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: