RSS

வாசித்தலின் ஏகாந்தம்!

17 ஜூலை

“கழுகுமலை” சுப்ரமணிய பாண்டி,
பெங்களூர்.மதி மயக்கும் இசையை கேட்டு மகிழ்தல், நல்ல திரைப்படம் பார்த்து ரசித்தல், இயற்கையின் அழகை நேரடியாகப் பார்த்து நயத்தல் – இவை போலத்தான் ஒரு தேர்ந்த எழுத்தாளனின் எழுத்தைப் படித்து, அதன் உட்பொருளில் வியாபித்து இருத்தலும். ஒரு படைப்பாளனின் கதையோ, கட்டுரையோ, கவிதையோ,… அதிலுள்ள நல்ல எழுத்து எதுவானாலும் அது விவரிக்க முடியாத மாற்றங்களை ஒருவரின் மனதிற்குள் நிகழ்த்தும் ஆற்றல் கொண்டது. அப்படி ஒரு படைப்பை வாசித்து முடித்தபின் அதிலுள்ள வார்த்தைகளுக்குள் கட்டுண்டு மீண்டு வர முடியாத தன்மையைத் தந்தவை – தமிழில் பாரதிக்குப் பின் மிகவும் சொற்பமே!

பாரதியின் பேனா மை உறைந்து போன பின்பு, கவிதை இலக்கியம் தனது எழுத்து வடிவில் சற்று விலகியிருந்தது. காலத்திற்கேற்ப அந்த வடிவம் தன்னை சற்று சாய்த்தோ, நீட்டியோ, குறுக்கியோ மாற்றிக் கொண்டே வந்தது. சுதந்திர இந்தியாவில் கவிதை கவிஞர்களின் செல்லக் குழந்தையாகப் பேணி வளர்ந்து. எல்லாக் காலத்திலும் எழுத்து ஏதோ ஒரு வகையில் பாமர மக்கள் வரை சென்று கொண்டே இருக்கிறது. இதில் சினிமாவுக்கும் கணிசமான பங்கு உண்டு. வள்ளுவர் மன்றம், கம்பன் கழகம், பாரதி மன்றம் – போன்ற மன்றங்கள் இடைப்பட்ட காலத்தில் வாசிப்பை இன்னொரு கட்டமைப்பில் வளர்த்துக் கொண்டிருந்தன. பொது நூலகத்து வாசிப்பை தெருவீதிக்குப் கொண்டு வந்தவை இச்சிறு அமைப்புகள்தான்.

அதே காலகட்டத்தில் கல்கி, சுஜாதா என நீளும் ஒரு குறிப்பிட்ட பெயர்ப் பட்டியல் பல வாசகர்களின் பெரும்பான்மையான பொழுதுகளைப் பறித்துக் கொண்டது. அகவாழ்க்கையின் அனைத்தையும் இவ்வாசித்தலின் மூலம் உணரச் செய்தது – இவர்களின் எழுத்துக்கள்தான். இந்த வாசிப்புதான் ஆன்மிகம் வேறு, அறிவியல் வேறு என்பதையும் அறியவைத்தது. இன்றைய நவீன இலக்கிய வடிவங்களில் வலம் வரும் ஜெயமோகன், பவா செல்லதுரை, எஸ்.ராமகிருஷ்ணன் போன்றோரின் படைப்புகளும் முக்கியமானவை. இவை எந்த ஒரு வாசகனாலும் தவிர்க்க முடியாதவை. இவர்கள் எழுதி அச்சிட்ட புத்தகங்களை கடையில் சென்று வாங்கிப் படிக்க முடியாதவர்கள், மிக எளிதாக இணையத்தில் வாசித்து அனுபவிக்க முடியும். அவர்களின் ஒவ்வொரு பதிவும் நம் தேடலுக்குப் புதிது. மடிக்கணினிச்  சூட்டை மறக்கச் செய்யும் குளிரும், நடுநிசிக் குளிரை விரட்டும் உள்சூடும் அவ்வெழுத்துக்களுக்கு உண்டு. இவர்களின் எழுத்தோடு ஒன்றியிருப்போருக்கு ‘வாசிப்பு’ ஓர் உணவாகவோ, மருந்தாகவோ அல்லது சில சமயம் போதையாகக்கூட மாறும் மகத்துவம் கொண்டது.

இணையம் சார்ந்த எழுத்துக்கள் பெருகி வரும் இந்நேரத்தில், படைப்புகள் ஒரு வாசகனை நேரடியாகச் சென்றடைகிறதா என்பதையும் ஆய்ந்தறிய வேண்டும். இணையம் ஒரு வனம் போலடர்ந்து, எந்த ஒரு வாசகனும் தவிர்க்க முடியாத படைப்புகளின் ஆக்கிரமிப்பால் சூழப்பட்டிருக்கிறது. அண்டவெளி போன்ற இணையத்தில், சுய விளம்பரம் ஏதுமற்ற தேர்ந்த எழுத்துக்கள் அடங்கிய ஓர் எழுத்தாளனின் வலைப்பக்கம், எத்தனை முறை வாசிக்கப்படுகிறது என்பது கவனத்தில் எடுக்கப்பட வேண்டியதே.

இன்றைய சூழலில் வாசிப்பின் காலம், ஒரு விடுமுறை காலம் போலாகிவிட்ட போதிலும், வாசித்துப் பழகியவனுக்கு அது ஒரு தொடர்வண்டி இயக்கமாய்த் தொடர்கிறது. வீடு, நாடு கடந்து எங்கும் பயணிக்கிறது. பல முகங்களை அறிமுகப்படுத்தி அனுபவத்தைப் பகிர்கிறது.  ஒரு வாசகனின் தனிவாசிப்பு, கரிசல் மண் தரையில் வெயிலுக்கு விரிந்திருக்கும் விரிசல்கள் போல மனம் சிதைந்து போகாமல் நிலைத்திருக்க வைக்கிறது. ஆற்றுமணல் மேல் ஊற்றிய நீராய், எழுத்தை உள்வாங்கிக் கொள்வதன் ஏகாந்தம் – வாசகன் மட்டுமே அறிவான்.

வாசகனாய் இருப்போம், வாசிப்பை நேசிப்போம், வாசிப்பை சுவாசிப்போம்!

Advertisements
 
1 பின்னூட்டம்

Posted by மேல் 17/07/2012 in நோக்கு

 

One response to “வாசித்தலின் ஏகாந்தம்!

  1. சித்திரவீதிக்காரன்

    10/04/2013 at 10:14 பிப

    வாசகனாய் இருப்போம், வாசிப்பை நேசிப்போம், வாசிப்பை சுவாசிப்போம்!

     

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: