RSS

என்று தணியும் இந்த நாமக்கல்(வி) பார்முலா?

12 ஜூலை

முன்பெல்லாம் பத்து, பன்னிரெண்டாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வு முடிவுகள் வரும் போது, “டீக்கடைக்காரர் மகன் முதலிடம், சைக்கிளில் துணி வியாபாரம் செய்பவரின் மகள் முதலிடம்” – போன்ற செய்திகள் நாளேடுகளில் வரும். நாடே வியப்பில் ஆழ்ந்திருக்கும்! பெற்றோர்களும் ஆசிரியர்களும் அவர்களைச் சுட்டிக்காட்டி ஆர்வமற்று இருக்கும் பிறபிள்ளைகளிடம், “அடிப்படை வசதிகளற்ற வீட்டிலுள்ள பிள்ளைகளே இப்படிப் படித்திருக்கும்போது உங்களால் ஏன் முடியாது?” என்று முன்னிறுத்துவார்கள். வசதிகளைச் சோம்பலுக்குப் பயன்படுத்தும் மற்ற மாணவர்களோ தங்கள் நடவடிக்கைகளை மாற்றியமைத்து கல்வியில் மீட்டெழ வாய்ப்பாக இருக்கும். இப்போதெல்லாம், அந்த மாதிரி செய்திகள் காணாமல் போய்விட்டன. முன்னிறுத்திச் சொல்லவும் முடியவில்லை. அதனால், தற்போதைய தேர்வு முடிவுகளும் நமக்கு எந்த ஓர் ஆச்சரியத்தையும் தருவதில்லை. காரணம், நாமக்கல் பார்முலா பள்ளிகள் அதிகரித்ததால், உண்மையான மாணவத் திறனாளர்களைக் காண முடிவதில்லை.

அப்படிக் கூற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், எந்த ஓர் ஆசிரியருமின்றி, சிறப்பு வகுப்புமின்றி, தேர்வு முறையுமின்றி, எவ்விதக் கண்டிப்புமின்றி, தன்னார்வத்தோடு படித்த சிறைக்கைதி 1096 மதிப்பெண்கள் பெற்றதையும், வணிகவியல் பாடத்தில் 200/200 வாங்கியதையும் கூறி, உங்களால் ஏன் முடியாது? என்று சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் -ஆசிரியர்களுக்கு! இதில் ஒரு சிக்கல் என்னவெனில் சிறையில் இருந்தால்தான் நல்ல மதிப்பெண் பெற முடியுமோ? என்று மாணவர்கள் தவறுதலாகப் புரிந்துவிடக்கூடாது-என்பதுதான்! மொத்தத்தில், பெரும்பான்மையான கல்வி நிறுவனங்களின் போக்கைப் பார்த்தால், பாடசாலைகள் சிறைச்சாலைகளாகவும், சிறைச்சாலைகள் பாடசாலைகளாகவும் மாறிவருவது போலத் தோன்றுகிறது. இது சரியானதுதானா? என்று யோசிக்க வேண்டிய நேரமிது.அண்மையில் ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் பேசிய “உயிர்மை” பத்திரிகை ஆசிரியர் மனுஷ்யபுத்திரன், “மாணவர்கள் மனப்பாடம் செய்வதும், பார்த்து எழுதுவதும் ஒன்றுதான்” என்றார். அந்தக் கருத்து என்னுடைய பார்வையிலும் சரியெனப்பட்டது. ஏனெனில், அது எதைக் காட்டுகிறது என்றால், மாணவர்கள் கல்வி பயிலவில்லை; மாறாக, பயிற்சி பெறுகிறார்கள் என்பதே!

பொதுவாகக் கல்வி என்பது கற்றலைக் குறிக்கும். “இளமையில் கல், கற்க கசடற, கற்றனைத் தூறும் அறிவு” போன்ற தொடர்கள் கல்வி கற்றலைக் குறிக்கின்றன. ஆனால், பயிற்சி என்பது செய்முறை. கற்றலுக்கும், செய்முறைக்கும் மிகுதியான வேறுபாடு உண்டு. நான் கல்லூரியில் படிக்கும்போது விடுதியில் என்னோடு தங்கியிருந்த சேசுராஜ் என்ற மாணவன் பி.எஸ்.சி. வேதியியல் பாடம் எடுத்துப் படித்தான். அவனுக்கு சில சமன்பாடுகளில் வினைவிளைபொருள் எவ்வாறு வருகிறது என்பது புரியவில்லை என்றால், புத்தகத்தில் உள்ள சமன்பாட்டுப் படிகளை அப்படியே மனனம் செய்து என்னிடம் ஒப்பித்துக் காட்டுவான். “என்ன செய்ய ரூம்மெட்! இந்தக் கேள்வி எனக்குப் புரியல. அதான் இப்படி மக்கப் பண்ணிட்டேன்! உருவுக்கு மிஞ்சுன குரு யாரு?” என்பான். இது அவனது மனன சக்தியைக் காட்டியதே தவிர, அந்த சமன்பாட்டுக்கான புரிதலை – அவனிடம் ஏற்படுத்தவில்லை. இது எப்படி ‘கல்வி கற்றல்’ ஆகும்?

நீச்சல் அடிப்பது, டூவீலர் ஓட்டுவது, கணிப்பொறி இயக்குவது போன்றவற்றைப் பயிற்சி என்கிறோம். இதில் ஒன்றன்பின் ஒன்றாக எதுஎதைச் செய்ய வேண்டும் என்பதைத் திரும்பத் திரும்ப செய்து ஆழ்மனதில் நிலையாக இருத்திக் கொள்கிறோம். இதனால்தான், டூவீலர் ஓட்டுபவர் பிரேக் போடுவதும், கியர் மாற்றுவதும் தன்னால் நடக்கின்றன. படிப்பறிவு இல்லாதவர்கூட கணிப்பொறியில் டிசைனிங் வேலை செய்வதும், திருமண வீட்டில் ஸ்டில், வீடியோ காமிராக்களை இயக்குவதும் முடிகிறது. இவை எல்லாம் பயிற்சி அடிப்படையிலேயே!ரஷ்ய நாட்டு உடலியலறிஞர்(Physiologist) இவான் பாவ்லோவ்(Ivan Pavlov) என்பவர் ஒரு நாயை வைத்துச் சோதனை நடத்தினார். தினமும் மணியொலி எழுப்பிய பின் அந்த நாய்க்கு உணவு வைத்தார். இது என்னவாயிற்று எனில், முதலில் உணவைப் பார்த்ததும் உமிழ்நீர் சுரந்த அந்த நாய்க்கு, இறுதியில் மணியொலியைக் கேட்டாலே உமிழ் நீர் சுரக்கத் தொடங்கியது. அதாவது ஒரு செயற்கையான புறத்தூண்டலுக்கு, இயற்கைத் துலங்கலை வெளிப்படுத்த வைத்தது. இது தொடர் பயிற்சியே அன்றி வேறென்ன?ஒளவையார், “சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்” என்பார். சித்திரம் எழுதுவதும், மொழியைப் பேசிப் பழகுவதும் பயிற்சியாலேயே என்பதை இவ்வரி உணர்த்துகிறது. அதே வேளையில் கற்றல் என்பது அவ்வாறல்ல. அது நம் சிந்தனையைத் தூண்டுவது, பலவாறு பெருக்குவது! நாம் கற்ற கல்வியின் வழி புதிது புதிதாகத் தீர்வுகளைக் காணத் துணை செய்வது. கணிப்பொறியை இயக்குவது பயிற்சி என்றால், கணிப்பொறியில் மென்பொருள் எழுதுவது சிந்தனைத் தூண்டலுக்குச் சான்று. கார் ஓட்டிச் செல்பவர், பழுதுபட்ட பாதையைப் பார்த்ததும் மாற்று வழியில் செல்வார். இதில் காரை ஓட்டுவது பயிற்சி, மாற்று வழியைத் தேர்ந்தது சிந்தனை.

மேலும், பயிற்சியை மனிதன் மட்டுமல்ல, விலங்குகளும் பறவைகளும் கூடப் பெற முடியும். சான்றாக, சர்க்கஸ் கொட்டகையில் பார்க்கிறோம். அங்குள்ள விலங்குகளும், பறவைகளும் நன்கு பயிற்சி பெற்று சாகசம் புரிகின்றன. அதே நேரத்தில் அவைகளின் சிந்தனைத் தூண்டலை நம்மால் பெருக்க முடிவதில்லை. ஆனால், சிந்திக்கத் தெரிந்த மனிதர்களோ அறிவியல் அறிஞர்களாகவும், தத்துவ ஞானிகளாகவும், இலக்கியப் படைப்பாளர்களாகவும், புரட்சியவாதிகளாகவும், சமயவாதிகளாகவும், சாதனையாளர்களாகவும், சரித்திரப் புருஷர்களாகவும், கலை வல்லுநர்களாகவும் இருந்திருக்கிறார்கள் என்பதை மறந்துவிடக் கூடாது.

மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் கற்பித்தல் தனியாகவும், பயிற்சி மற்றும் செய்முறை தனியாகவும் கொடுக்கப்பட்டு உள்ளன. ஆனால், வர்த்தக நோக்கில் செயல்படும் நாமக்கல் பார்முலா பள்ளிகள், கற்பித்தலை விட்டுவிட்டு ஒரு ஆண்டு மட்டுமே பயில வேண்டிய பாடத்தை, இரண்டாண்டுகள் பயில அல்ல, பயிற்சியாய் ஆக்குகின்றன. அட்டை டூ அட்டை மனனம் செய்ய வைத்து, எந்தக் கேள்வியைக் கொடுத்தாலும் பதிலளிக்கும் வகையில்; அதாவது, நாய்க்கு உமிழ்நீர் சுரப்பது போலப் பயிற்சி கொடுத்து விடுகிறார்கள். இந்தப் பயிற்சி மதிப்பெண்ணை ஈட்டித் தருமே ஒழிய, சுயசிந்தனையைப் பெருக்காது.ஒரு தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் பொருள் நுகர்வோரைச் சென்றடையும் வரைதான் விளம்பரம் தேவை. அதுபோல, கல்லூரியில் நுழைய மட்டுமே தேவையான மதிப்பெண்களை, மாணவர்கள் பெற வைக்கின்றனர் – நாமக்கல் பார்முலாப் பள்ளிகள். ஆனால், இந்த மதிப்பெண்களைப் பெற ஒரு மாணவன் தன்னுடைய சுய சிந்தனையை, தனித்திறனை, பொழுதுபோக்கை, அழகியல் உணர்ச்சியை, படைப்பாற்றல் திறனை, நண்பர் குழாமை, பெற்றோரின் ஆசாபாசத்தை என்று அத்தனையும் இழந்து, அவன் ஒரு மதிப்பெண் பெறும் பொறியாக மட்டுமே இருந்து என்ன பிரயோசனம்? இரண்டாண்டுகள் பொறியாய் இருந்தவன் மன இறுக்கமும், மூர்க்கத்தனமும் கொண்டவனாக மாறிவிட்டதாய் பலர் கூறுகிறார்கள். இப்படி நிகழ்வதில் வியப்பேதும் இல்லையே?

மனிதத்தை இழந்து மதிப்பெண்ணைப் பெற – பெற்றோரும், ஆசிரியரும், கல்வி நிறுவனங்களும் இப்படியே பிள்ளைகளை முடுக்கினால், நாளையத் தலைமுறை என்னாவது? இது படிப்படியாய் பண்பாட்டுச் சீரழிவைக் கூட உருவாக்கக் கூடும் என்பதையும் அறியாமலா இருப்பர்? இவ்வேளையிலாவது நாம் ஒன்றைப் புரிந்து கொள்ளவேண்டும். பாரதி போன்ற பலர் தங்களின் மாணவப்பருவத்தில் பள்ளியை வெறுத்திருக்கிறார்கள். ஆனால், அவர்களே பின்னாட்களில் மிகப்பெரிய சாதனையாளர்களாகவும், சிந்தனையாளர்களாகவும் உருவாகி இருக்கிறார்கள். நம் கல்வியில் மாற்றம் காண விரும்புபவர்கள், வேறொன்றும் புதிதாகச் செய்யவேண்டாம். மேற்படியானவர்களின் வெறுப்பிற்கான காரணங்களை அறிந்து அவற்றை நீக்கினால் போதும். அதுதான் குழந்தைகள் விரும்பும் கல்வி.இதற்கான முயற்சியை எடுக்காதவரை, ஒன்று மட்டும் திண்ணம்! ஒரு பயங்கரம் நம் கண் முன் நடக்கிறது. எந்த ஒரு பயங்கரவாதியும் இனி இங்கு ஊடுருவத் தேவை இல்லை. ஏனெனில், நாமே உருவாக்கிக் கொண்டு இருக்கிறோம்! இதை சிந்திப்பார் யாரோ? சீர்படுத்துவார் யாரோ?

– அசின் சார், கழுகுமலை

Advertisements
 

3 responses to “என்று தணியும் இந்த நாமக்கல்(வி) பார்முலா?

 1. சாக்பீஸ்

  14/07/2012 at 5:09 பிப

  உண்மைதான். குழந்தைகளை பள்ளியில் சந்தோஷமாக வைத்திருந்தாலே போதுமானது. கற்றல், கற்பித்தல் எந்தவித சிரமும் இன்றி தானே நடந்தேறும்.

   
 2. sivaparkavi

  17/07/2012 at 5:32 முப

  Nalla irukku onga katturai… enna panurathu padikirathu ramayanam idikkirathu perumal koil achea..

  sivaparkavi

   
 3. thiyagarajan

  23/01/2013 at 3:40 பிப

  unmaithaan kalvi viyaparam akivittathu.

   

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: