RSS

கல்வியாளர் பாரதி:

08 ஜூலை

ரஞ்சித் பரஞ்ஜோதி, பெங்களூர்.

நீயா நானாவில் கல்வி குறித்து எவ்வளவு புதுச் சிந்தனைகள்.”என்று நிறைய பேர் சொன்னார்கள். மற்ற விஷயங்களைப் போலவே ‘சிந்தனையையும்’ தொலைக்காட்சி ஊடகம் மூலம் மட்டுமே நுகர்கின்ற நிலைமை பரிதாபமானது. மற்ற knowledge resources-யும் கொஞ்சம் பயன்படுத்தலாமே.

எனக்குள்ள கோபம் இதுதான். அந்த நிகழ்ச்சியில் பேசப்பட்ட விஷயங்களை விட பல மடங்கான கல்விச் சிந்தனைகளை விவாதித்தவன் நம்மவன் ‘பாரதி’. சுமார் 100 வருடங்களுக்கு முன்பே.

கவிஞன் என்ற மிகச்சின்ன வட்டத்திற்குள் மறைக்கப்பட்டவன் பாரதி. தன் சொற்ப கால வாழ்க்கையில் பல அவதாரங்களில் திரிந்தவன்.
journalist பாரதியை ஏன் பள்ளிகளில் கூட அனுமதிப்பதில்லை என இன்னும் புரியவில்லை. தன் பத்திரிக்கை வாழ்வில் தொடர்ந்து உண்மைக் கல்விக்கான குரலை எழுப்பியபடியே இருந்துள்ளான். ஒரு மாபெரும் சிந்தனையாளனை அவன் மறைந்து நூறாண்டுகள் நெருங்கும் சமயத்திலும் மக்களுக்கு கொண்டு சேர்க்காதது வெட்கப்படவேண்டிய விஷயம்.
இன்று நம்மிடையே இருப்பது பாரதி என்ற ஒரு ‘image’ தான், அவன் சிந்தனைகள் அல்ல. இதை விட அவனை அவமானப்படுத்தமுடியாது.

இந்திய மாணவர் சங்கத்தோடு இணைந்து Books for children 2007-ல் வெளியிட்ட புத்தகம் ‘கல்விச்சிந்தனைகள்: பாரதி’ – தொகுப்பு ந.இரவீந்திரன்.
ஒவ்வொரு ஆசிரியரும், மாணவனும், கல்வி சார்ந்த துறையினர் அத்துனை பேரும் கட்டாயம் படித்தே ஆக வேண்டிய புத்தகம்.

தேர்வு முறையில் பாரதிக்கு எவ்வளவு கோபம் பாருங்கள். இந்தியா இதழில்(1910) இவ்வாறு எழுதுகிறார்:

“இந்நாட்களில் ஆங்கிலக் கல்வி கற்கும் சிறுவர்களுக்குப் பிரவேச பரீக்ஷையில்(matriculation) தேறுவதென்றால் யமன் வாயிலிருந்து தப்பிப்பிழைத்தது போலிருக்கிறது.சென்ற டிஸம்பர் மாஸத்தில் சென்னை ராஜதானியில் நடைபெற்ற இந்தப் பரீக்ஷையில் தேறினவர்களின் ஜாபிதா இப்போது தயாராய்விட்டது. இது சீக்கிரத்திலேயே வெளிவரும். இதன்படி பரீக்ஷையில் தேறியவர்கள் நூற்றுக்குப் பத்து பேர்களே. மற்ற தொண்ணூறு சிறுவர்களின் கழுத்திலும் சிவப்புமைப் பேனா என்னும் கத்தியை வைத்து ஒரே வீச்சாக வீசப்பட்டது… 1907ம் வருஷத்தில் நடந்த இந்தப் படுகொலையில் நூற்றுக்குப் பதினேழு பேர்கள் தப்பித்துக் கொண்டனர். இவ்வருஷமோ நூற்றுக்குப் பத்து பேர்கள்தான் தப்பித்துக் கொண்டனர்.”

‘படுகொலை’ என்ற சொல்லை உபயோகப்படுத்துகிறார் கவனியுங்கள்.

இது யாருடைய தப்பு என்று எவ்வளவு detailed analysis செய்கிறார் பாருங்கள்:

“இந்தத் தப்பு யாருடையது? பரீக்ஷைக்குப் போகும் பிள்ளைகளினுடையதா? அல்லது அவர்களுக்குப் படிப்புச் சொல்லிக் வைக்கும் உபாத்தியாயர்கள் தப்பா? அல்லது இவர்களை இப்படிக் கொலை புரியக் கேள்வி கேட்பவர்களின் தப்பா? அல்லது வித்தை இலாகாவுக்குத் தலைமையாய் இருந்து பாடப் புஸ்தகங்களை விதிக்கும் வித்தை அத்யட்சகரின் தப்பா? அல்லது ஆங்கிலத் துரைத்தனத்தார் இலாகா ஸங்கதியா? அல்லது இச் சிறுவர்களின் பெற்றோர்களின் தப்பா? இந்தச் சிறுவர்களின் விடைகளைத் திருத்துபவர்களின் தப்பா? அல்லது சொல்லிக் கொடுப்பதொன்று, கேட்பதொன்றா? அல்லது இந்தியனாய்ப் பிறந்த பாபமா? பணத்தையும் கொட்டிக் கொடுத்து இராப்பகல் கண்விழித்து உடம்பையும் கெடுத்துக் கொண்டு படிப்பதின் பயனா? உண்மை தெய்வத்திற்குத்தான் வெளிச்சம்!”

1908 இந்தியா இதழில் இவ்வாறு எழுதுகிறார்:

“இந்த ஸர்வ நாசகரமான பரீக்ஷைகளிலே பிரிட்டீஷ் இந்தியாவிலுள்ள அடிமை ஜனங்களுக்கிருக்கும் மோகம் என்றுதான் தீரப்போகிறதோ தெரியவில்லை. பிள்ளைகள் தமது வாழ்நாளைப் பயனுடன் செலவிடுவதற்குரிய உபாயங்கள் ஆயிரக்கணக்காக இருக்கின்றன. அவற்றையெல்லாம் விட்டு விட்டுப் பதினாயிரத்தில் ஒன்பதாயிரத்துக்கு விநாசமும், மற்ற ஆயிரத்துக்குத் தொழும்பு நிலையும் ஏற்படுத்திக் கொடுக்கும், யூனிவர்ஸிட்டி பரீக்ஷை என்ற பிசாசின் வாயிலே பேதை ஜனங்கள் தமது குழந்தைகளைக் கொண்டு போய் வருஷந்தோறும் தள்ளிக் கொண்டேயிருக்கும் ஆச்சரியம் நமக்குக் கொஞ்சமேனும் அர்த்தமாகவில்லை.”

இன்றைய சுதந்திர இந்தியாவிலுள்ள அடிமை ஜனங்களுக்கும் இந்த மோகம் தொடரத்தானே செய்கிறது.

1907-ல் கல்வி முறையின் குறை பற்றி இந்தியா இதழில் இப்படி கொதிக்கிறார்:

“நமது பாடசாலைகளிலே கல்வி பயிலும் மாணாக்கர்களைப் பற்றி பேசுவதற்கே அவமானமாக இருக்கின்றது. வாலிபர்களைக் கிழவர்களாக்கும் கல்வி முறைமை நமது தற்காலத்து தர்ம ராஜாங்கமொன்றிலேதான் நடைபெறுகின்றது. இந்த வாலிபர்கள் எவ்விதமான ஆண்மையுமில்லாமல், குமாஸ்தா வேலைக்குத் தகுதியும், அளவிறந்த ராஜபக்தியும், வெள்ளைக்காரர்களிடம் பயமும், சுதேச சம்பந்தமான எல்லா விஷயங்களிலும் வெறுப்பும், தாய்ப் பாஷைகளிலே மஹாசூனியமான பயிற்சியும் என இத்தனை குணங்களே உடையவர்களாயிருக்க வேண்டுமென்ற நல்லெண்ணத்துடன் நமது தற்காலத்து இங்கிலீஷ் கல்வி முறைமை நடைபெற்று வருகின்றது. முதுகெலும்பு வளைந்து கண்ணொளி மழுங்கிப் போய் கால் தள்ளாடி, கையிலே வலியற்றுத் தமிழ் தெரியாதென்று சொல்வதும், கண்ணிலே வெள்ளெழுத்து விழுந்து விட்டதென்று சொல்வதுமே நாகரிகமெனப் பாராட்டும் இந்தப் பிள்ளைகளினாலா பாரத நாடு பிழைக்கப் போகின்றது?”

1910-ல் சூரியோதயம் இதழில் இவ்வாறு எழுதுகிறார்:

“ஓர் பெருஞ்சாதியாரை ஆளுகின்ற அரசாங்கத்தார், அச்சாதியாரின் முதலவசியமாகிய கீழ்த்தரக் கல்வியை(primary education) அளிப்பதற்குத் திரவியஞ் செலவிடாமல் பின்னெதற்குத்தான் செலவிடப் போகிறார்கள்? கவர்மெண்டாரின் வீண் செலவைக் குறைப்பதற்குப் பதினாயிரம் வழிகளிருக்கின்றன.
வைசிராய் வருஷா வருஷங் கோடை காலத்தில், தன் பரிவாரங்களுடன் ஸிம்லா வாசஞ் செய்வதற்கு எட்டு லட்ச ரூபாய்க்கு மேல் செலவாகின்றது…
ஜனங்களின் அபிவிருத்தியை நோக்கமாகக் கொண்ட அரசாங்கத்தாருக்கு மட்டுமே கீழ்த்தரக் கல்வியை இனாமாகவும் கட்டாயமாகவும் எளிதில் ஆக்க முடியும்.”

இன்றைக்கும் கிட்டத்தட்ட நிலைமை இதுதான் பார்த்தீர்களா?

தன் சமூகத்தின் மீதும் தன் கோபத்தை எப்படிக் காண்பிக்கிறார் பாருங்கள்:

“தாயுமானவரைப் போன்ற ஞானியொருவர் இங்கிலாந்திலே இருந்திருப்பாரானால், அவரைப்பற்றி அறியாத பாடசாலை மாணாக்கன் எந்த இடத்திலும் இருக்க மாட்டான். இவரது இனிய இசை நிரம்பிய அமிருதக் கவிகளைக் கற்றேனும் அவரது சரித்திர முதலியவற்றைக் கேட்டேனும் அறியாத ஆயிரக்கணக்கான மூடர்கள் தம்மைக் கல்விமான்களென்றும், பட்டதாரிகளென்றும் கூறிக்கொண்டு இந்நாட்டிலே திரிகின்றார்கள். “

பாரதிக்கென்று தனித்துவம் இருக்கிறது. என்னதான் தீவிரமாக பிரச்சினைகளை பேசினாலும் அங்கங்கே நம்பிக்கை தரும்படி பேச அவன் மறப்பதில்லை.

1909 இந்தியா இதழில் இப்படி நம்பிக்கையூட்டுகிறான்:
“நாளடைவில் உண்மைக் கல்வியும் ஓங்கும்; நம்மிடம் உள்ள சிறுமைகளும் நீங்கும்.”

பாரதியின் நியாயமான ஆசைகள் பலவற்றில், குறைந்தபட்சம் இந்த ஆசையாவது நிறைவேறட்டும். ஏனென்றால் இதுதான் மற்ற எல்லாவற்றிற்கும் அடிப்படை.

விரிவாக இன்னும் பாரதியை, அவன் கல்விச் சிந்தனைகளை அறிய அந்தப் புத்தகத்தை படியுங்கள்.

Advertisements
 

2 responses to “கல்வியாளர் பாரதி:

 1. Asin sir

  10/07/2012 at 2:00 முப

  தமிழில் கல்விச் சிந்தனைகள் தொல்காப்பியர் காலம் தொட்டே இருக்கிறது. நீதி இலக்கியங்களும் அதிகமாகவே பேசுகின்றன. அதேநேரத்தில், ஒரு நாட்டில் குறிப்பிட்ட ஆட்சியாளர்களின் தொடர் அரியணை ஏற்றம், அவர்களது படைப்புக்களையும், சிந்தனைகளையுமே முன்னிறுத்த முயல்வதால், அந்த நாட்டிலுள்ள பிற சிந்தனைகளை மக்கள் முயன்று கற்க வேண்டிய அவலம் ஏற்படுகிறது. அல்லது, படிக்காமலேயே மறக்கப்படுகிறது. இதனாலேயே, அவ்வாட்சியாளர்கள் தரும் பாடப்புத்தகங்களைப் பலரும் விமர்சிக்கும் நிலை உருவாகுகிறது. இப்படித்தான் பாரதியின் கல்விச் சிந்தனையையும் நாம் மறந்தோம்.
  இது ஒருபுறமிருக்க, வர்த்தக நோக்கில் மீடியாக்களும் எதையுமே தாங்கள்தான் முதலில் விவாதம் செய்ததாகப் பீற்றிக்கொள்ளும் விளம்பரத்தனமும் ஓங்கி வருகிறது. “நீயா நானா” போன்ற நிகழ்ச்சிகளை நவீன பட்டிமன்றமாக எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர, அது உண்மையை ஆராயும் களமாகாது. பரபரப்புச் செய்தியை விரும்பும் நேயர்களுக்கு இந்நிகழ்ச்சி ஒருவித பரபரப்புப் போதையைத் தரலாம். இன்னொருவகையில் பார்த்தால், சினிமாக்காரர்களைக் கூட்டிவைத்து பேசி பொழுதைப் போக்கும் அபத்தங்களுக்கு இது தேவலை என்றே தோணும்.
  இனி இது நிற்க, ரஞ்சித் ஆதங்கத்திலிருந்து நாம் அறிவது, பாரதி போன்றோரின் கல்விக் கொள்கைகள் இன்றைய வர்த்தகக் கல்வி நிறுவனங்களுக்கு எதிராக அமைகிறது என்பதே! அதே வேளையில், அரசியல்வாதிகளுக்கு சப்போட்டாக இருக்கும் முதலாளி வர்க்கமும், அரசியல்வாதிகளில் அதிகம் பேரும் இன்று இக்கல்வி நிறுவனங்களை நடத்துகிறார்கள். எனவே, அவர்களுக்குப் பாரதியை இருட்டடிப்பு செய்வதைத் தவிர வேறு வழி இல்லை. அதனால்தான் பாரதியை, “ஓடி விளையாடு பாப்பா” என்ற அளவுக்கு மக்கள் தெரிந்தால் போதும் என்று ஆட்சியாளர்கள் முடிவு செய்துவிட்டார்கள்.
  இருப்பினும் இவர்களிலிருந்து விலகி, நாம் பாரதியை பேசிக்கொண்டிருப்பதே மகிழ்ச்சியான விஷயம் என்று நினைக்கிறேன். தொடர்ந்து நாம் திரும்பத்திரும்ப பாரதியை படித்துக்கொண்டும், பேசிக்கொண்டும் இருப்போம். இன்னும் நெறைய இரவீந்திரனும், ரஞ்சித்தும் உருவாகும் வரை!

   
  • சட்டநாதன்

   12/07/2012 at 5:05 பிப

   100% agree with you sir.

   ” நீயா நானா ” பார்த்து ஒருவன் திருந்தி விடுவான் என்று நம்பவில்லை . ரஞ்சித்தும் அப்படி அர்த்தத்தில் சொல்லவில்லை எனப் புரிகிறது . இந்த இலுப்பைப்பூ சர்க்கரையாவது பெரும்பாலோருக்கு கிடைக்கிறதே .

   பாரதியை தூக்கிப் பிடிப்பது கொள்ளிக்கட்டையால் தலையை சொரிந்து கொள்வதற்கு சமம். அந்தத் தவறை மறந்தும் நமது அரசோ , கல்வித் தந்தைகளோ செய்யமாட்டார்கள் .

    

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: