RSS

கதைகளைப் பேசும் கல்லறைகள்!

24 ஜூன்

தூத்துக்குடி மாவட்டம் – ஓட்டப்பிடாரம் அருகில் நாற்பதுக்கும் மேற்பட்ட ஆங்கிலேயர்களை அடக்கம் செய்யப்பட்ட இரு கல்லறைகள் உள்ளன. அதைப் பார்க்க வேண்டுமென ரொம்ப நாளாக ஆசை. கடந்த 23.03.2012 அன்று மாலை 3 மணிக்கு நானும் ரஞ்சித்தும் டூவீலரில் கிளம்பினோம். கோவில்பட்டி, பசுவந்தனை, வழியாக ஓட்டப்பிடாரம் சென்றோம்.அதிக போக்குவரத்து இல்லாத சாலை. பல இடங்கள் விவசாயமற்ற தரிசு நிலங்களாகவே காட்சியளித்தன.

ஓட்டப்பிடாரத்திலிருந்து பாஞ்சாலங்குறிச்சி சாலை திரும்பியவுடன் வலப்புறம் ஒரு சுடுகாடு இருந்தது. அருகில் வண்டியை நிறுத்திவிட்டு ,அவ்வழியே வந்த ஒருவரிடம் ஆங்கிலேயர்களைப் புதைத்த கல்லறை எங்கே இருக்கிறது? என்று கேட்டோம். சுடுகாட்டுக்கு அந்தப்புறம் என்றார். செல்வதற்கு சரியான பாதை இல்லை. அதெற்கென இருந்த பாதையை பக்கத்து நிலத்துக்காரர் ஆக்கிரமித்துக் கொண்டதாக ஒருவர் வேதனைப் பட்டார்.அருகில் அறுவடை செய்த நிலையில் இருந்த வயல்வெளி வழியாக உள்ளே சென்றோம். அங்கு ஆங்கில லெப்டினன்டுகள் ஐவரின் கல்லறைகள் ஒரு பழைய காம்பௌண்டுக்குள் இருந்தன. இது கி. பி. 1799 -ஆம் ஆண்டு பாஞ்சாலங்குறிச்சியில் வீரபாண்டியக் கட்டபொம்மன் படையினருக்கும், ஆங்கிலக் கிழக்கிந்தியப் படையினருக்கும் இடையே நடந்த போரில் பலியான லெப்டினன்டுகள் டக்லஸ், டார்மியக்ஸ், கொல்லின், பிளேக் மற்றும் பின்னி ஆகியோரைப் புதைக்கப்பட்ட கல்லறை.தற்போது தமிழ்நாடு தொல்லியல் துறை பாதுகாப்பின் கீழ் இருந்தாலும் பாதுகாப்பும் பராமரிப்பும் இல்லாமல் இருக்கிறது. தொல்லியலார் வைத்துள்ள கல்வெட்டும் உடைந்த நிலையிலேயே கிடக்கிறது. சாலையில் இருந்து எந்த வகையிலும் இவ்விடத்திற்கு வந்து சேர முறையான பாதை இல்லை.இதைப் பார்த்து விட்டு நாற்பது பேர் கல்லறை உள்ள இடத்திற்குச் செல்ல நினைத்தோம். பக்கத்து தோட்டத்தில் நின்று கொண்டிருந்த ஒரு பெரியவரிடம் கேட்டோம். அவரோ அருகில் உள்ள சுடுகாட்டுக் கல்லறைகளைத் தவிர வேறொன்றும் இருப்பதாகத் தெரியவில்லையே என்றார். வியப்பாய் இருந்தது! ஒரு யோசனை தோன்ற, நேராக பாஞ்சையில் உள்ள கட்டபொம்மன் வாரிசுகள் உள்ள காலனிக்குச் சென்றோம். அங்கு இருந்த ஒருவரிடம் கேட்க, சரியாக வழி காட்டினார். கிளம்பினோம்.

ஓட்டப்பிடார சாலையில் வலப்புறம் திரும்பி சென்றோம். அதில் இடப்புறம் செம்மண் சாலை, சவுக்குத் தோப்பு,வண்டிப்பாதை, மாந்தோப்பு – கடந்து சென்றவுடன் மிகப்பெரிய கல்லறைக் காம்பவுன்டு தென்பட்டது. உண்மையிலேயே இது ஒரு அட்வஞ்சர் ட்ரிப் போலவே இருந்தது.சூரிய அஸ்தமனத்திற்கு இன்னும் இருபது நிமிடங்கள் இருக்கிறன. உள்ளே சென்றோம். இரு வரிசைகளில் 44 கல்லறைகள். தமிழகத் தொல்லியலார் சார்பில் அண்மையில் வைக்கப்பட்டு இருந்த கல்வெட்டும் இருந்தது. கி.பி. 1807 ம் ஆண்டு மார்ச் மாதம் 21 மற்றும் மே 24 ஆகிய தேதிகளில் ஊமைதுரைக்கும் ஆங்கிலேயருக்கும் நடைபெற்ற போரில் மாண்டுபோன 44 ஆங்கில வீரர்களின் கல்லறைகள் இவை.இக்கல்லறைகளைப்போய்ப் பார்க்க என்ன இருக்கிறது? தாஜ்மகால் போல அழகுணர்ச்சி இல்லையே என்று நினைக்கலாம். உண்மைதான். ஆனால் ஆதிக்க சக்தியை எதிர்த்து வென்ற அடிமை வர்க்கத்தின் உண்மை வீரம் இருக்கிறது.

பாஞ்சையில் தமிழக அரசு எழுப்பியுள்ள கட்டபொம்மன் கோட்டையை (உண்மையில் கவெர்மென்ட் கோட்டை) தினமும் எண்ணற்றவர்கள் வந்து பார்த்துவிட்டுச் செல்கின்றனர். ஆனால், நம்மவர்களின் வீரத்திற்குச் சான்றுகளாய் இருக்கும் இக்கல்லறைகளை யாரும் பார்ப்பதில்லை. எறத்தாழ 200 ஆண்டுகள் பழமையான இக்கல்லறைகளைத் தமிழகத் தொல்லியல் துறை கூட அண்மையில்தான் தன் கட்டுப்பாட்டுக்குக் கீழ் கொண்டு வந்துள்ளது.அரசியல்வாதிகள் தன் ஓட்டு வங்கி அடிப்படையிலேயே வரலாற்றையும், தொல்பொருட்களையும், நினைவுச் சின்னங்களையும் பார்க்கிறார்கள், பராமரிக்கிறார்கள். அதற்கு அப்பாற்பட்டவைகளை தேவையற்றவை என்றே ஒதுக்கிவிடுகிறார்கள். இந்த உண்மையை நாமும் புரிந்து கொள்வது இல்லை. இதனாலேயே நம் இனத்தின், மொழியின், மண்ணின் எண்ணற்ற நினைவுச் சின்னங்களை, சரியான வரலாற்றை இழந்து விடுகிறோம், இழந்து வருகிறோம்.ஆட்சியாளர்கள் எப்போதும் தம் சுயத்தின் அடிப்படையிலேயே வரலாற்றைப் பதிவு செய்கிறார்கள். இது முடிமக்கள் ஆட்சி முதல் இன்று வரை இப்படித்தான் இருந்து வருகிறது.ஆங்கில ஆட்சியாளர்கள் பாஞ்சைப் போரில் இறந்த ஆங்கில வீரர்களுக்குத் தந்த முக்கியத்துவம், நம் படையில் இறந்த வீரர்களுக்குத் துளியும் தரவில்லை. ஏனெனில், அவர்களைப் பொறுத்தவரையில் அவர்கள் வீரர்கள் தேசப்பற்றாளர்களாகவும், நம் வீரர்களை விரோதிகளாகவும் பார்த்தனர். இதே பார்வையை நம்மவர்கள் பக்கம் பொருத்தினால், இந்த மதிப்பீடு அப்படியே திரும்பும்.

இவ்விரு வேறுபட்ட படைவீரர்களின் மனநிலை, குடும்பச் சுழல், வெற்றி, தோல்வி – இவற்றை சமூக, அரசியல், பொருளாதார அடிப்படையில் நோக்கினால், ஒவ்வொரு கல்லறைக்குள்ளும் எண்ணற்ற கதைகளும், இரத்த சோகங்களும் உறங்கிக்கொண்டு இருப்பது தெரியும். அதே நேரத்தில், கல்லறை கட்டப்படாத, இறந்த நம் வீரர்களின் எண்ணிக்கையும், அவர்களின் தேச, சமூக, குடும்பம் சார்ந்த உணர்வுகளும் மண்ணுக்குள் மறைந்ததும் யாருக்கும் தெரியாது!பாஞ்சை பூமியில் புதைந்து கிடக்கும் அத்தனை வீரர்களும் ஒட்டு மொத்தமாய் நம் மனதைத் தட்டிக் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் காண முடியாமல் இருள் சூழ்ந்த வேளையில் புறப்பட்டோம். மீண்டும் ட்ரிப் மீட்டரை சரிசெய்து கொண்டு வண்டியைக் கிளப்பினோம்.

கழுகுமலையை நாங்கள் வந்து சேரும் போது சரியாக நாற்பது கிலோ மீட்டரைக் கடந்திருந்தாலும், ஏதோ,கட்டபொம்மன் காலத்திலிருந்து கடந்து வந்ததைப் போன்ற உணர்வு ஏற்பட்டது!

– அசின் சார், கழுகுமலை.

Advertisements
 

2 responses to “கதைகளைப் பேசும் கல்லறைகள்!

 1. balakumar

  28/07/2012 at 3:43 பிப

  sir, the story is very interesting. it is true namma tamilnadukaranka pechila mattum veranunka illa.seyalulayumthan. I LOVE TAMILNADU….

   
 2. சட்டநாதன்

  29/07/2012 at 2:27 பிப

  காவல் கோட்டம் சு. வெங்கடேசன் அவர்களின் நேர்காணல் ஒன்றை வாசித்தேன். நமது வரலாறு எப்படி வாய்மொழியாகவே அடுத்ததடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்லப்பட்டது என்பதை உணர்ச்சிப்பூர்வமாகச் சொல்லியிருந்தார். வெள்ளையருடன் போரிட்ட கதைகளை அந்தப்பெரிய மனிதர் எப்படி சொல்கிறாரோ அப்படியே ஆங்கிலேயக்குறிப்புகளும் சொல்கின்றன என்கிறார். கீழப்பாவூர் அரசு நூலகத்தில் அச்சுப்பத்திரிக்கையில் படித்தேன், இல்லாவிட்டால் லிங்க் கொடுத்திருப்பேன்.

  வாய்மொழி வரலாற்றில் உள்ள குறைகள் யாவரும் அறிந்ததே. இந்தக்காலத்தில் இத்தனை வசதிகள் இருந்தும்,எழுத்தில் வரும் செய்திகளே மாறும்போது வாய்மொழி எல்லாம் எந்த மூலைக்கு?

  எதற்கு இதையெல்லாம் சொல்கிறேன் என்று நீங்கள் கேட்டால், இந்தப்பதிவை பார்த்துவிட்டு ஏற்பட்ட மனக்குமுறலால் என்பேன். நம்முடைய ஆட்களின் வீரத்தை வெளிக்காட்டும் விதமாக இந்தக்கல்லறைகளை நீங்கள் பார்க்கவில்லை என்றாலும் கூடப் பரவாயில்லை. அரசு வைத்திருக்கும் அறிவிப்பு பலகை என்ன பாவம் செய்தது ஐயா? அதைப்போய் இப்படி உடைத்து போட என்ன அவசியம் நேர்ந்தது?

  எங்கள் நீதிமாணிக்கம் சார் ஒருமுறை கயத்தாறு அருகே ஒரு விமான ஓடுதளம் ஒன்றை பார்த்துவிட்டு வந்ததை சொன்னார். இரண்டாம் உலகப்போரின் போது பயன்படலாம் என்பதற்காக கட்டப்பட்டதாம். இன்றும் சிதிலமடையாத சிமெண்ட் பாதையை பற்றி வியப்போடு பகிர்ந்து கொண்டார். எத்தனை பேருக்கு முதலில் இந்த செய்தியே தெரியும்? போறதெல்லாம் அப்புறம் போய்க்கிடலாம்.

  வரலாறுன்னா என்ன? ராஜா மார்களின் சண்டையும் அவர்களின் ராணிகளின் எண்ணிக்கையுமா?

  கண் முன்னே இந்தத்தடயங்களை அழிய விடுவதால் வரும் தலைமுறையினருக்கு எவ்வளவு துரோகம் செய்கிறோம்? இந்தியாவை இந்தியர் அல்லாதவர்கள் ஆண்டார்கள், அதுதான் இந்திய வரலாறு என்று இன்னும் எத்தனை நாளைக்குத்தான் படிக்கப்போகிறோம்?

  விஷயம் என்னவென்றால் இதற்கான விழிப்புணர்வு பள்ளியில் இருந்து தொடங்க வேண்டும். ஏனெனில் அவர்களில் பெரும்பாலோர் தான் புராதன ஓவியங்களின் மீது தங்களின் கலைத்திறனை காட்டுகிறார்கள், குறி தவறாமல் சிலைகளின் மூக்கையும் காதையும் கல்லால் அடிக்கிறார்கள். அந்த வயது அப்படிப்பட்ட சாகசங்களை விரும்பும். பிறகு யார் தான் அவர்களுக்கு ஹீரோவாக வாய்ப்பு தருவார்கள். அவர்களை ஆற்றுப்படுத்த வேண்டும்.

  கல்லூரியில் எனக்கு “Engineering Ethics(பொறியியல் நன்னெறி என்று வைத்துக்கொள்ளுங்களேன்) எடுத்த விவேகானந்தன் சார், மிகவும் சிரத்தை எடுத்துக்கொண்டார்.” ஒரு BBA முடித்து விட்டு MBA படித்த மேலாளர் லாபத்தைத்தான் பிரதானமாக நினைப்பார். ஆனால் ஒரு எஞ்சினியர் அப்படி இருக்கக்கூடாது, லாபத்தை விட Safety முக்கியம். Safety என்பது தனிமனிதரின், அவர் கூட வேலை பார்ப்பவர்களின், கடைசியாக இயந்திரங்களின் Safety” என்றார். இதைப்பற்றி இன்னொரு நாள் விரிவாக சொல்கிறேன்.

  இப்போது அவர் சொன்ன இன்னொரு விஷயம் நினைவுக்கு வருகிறது. ”தனி மனிதர்கள் அவர்களின் சொந்த வாழ்க்கைத்தரத்தின் மீது காட்டும் அக்கறை தான் அவர்களை சமூகத்தின் மீதும் அக்கறை கொள்ளச்செய்கிறது” என்றார். ஒரு நல்ல விலை உயர்ந்த கார் வைத்திருப்பவன் தான் Traffic விதிமுறைகளை சரியாகப் பின்பற்றுவான். எதிலாவது போய் இடிச்சா அவனுக்குத் தான் இழப்பு அதிகம். செகண்ட் ஹான்டில வாங்கின டூவீலரை, மண்ணெண்ணெய் ஊத்தி ஓட்றவன் எந்த விதியை மதிப்பான்?

  நம்மிடம் உள்ளவை மதிப்பு வாய்ந்தவை என்பதை முதலில் மக்களுக்குப் புரிய வைக்கவேண்டும். சரித்திர மற்றும் பண்பாட்டு முக்கியத்துவம் பற்றி போதிப்பதோடு, அந்த இடங்கள் சுற்றுலாத்தலங்களாக மாறினால் ஏற்படும் வாழ்க்கைத்தர உயர்வு பற்றிய நம்பிக்கையையும் பெருமிதத்தையும் வளர்த்தல், பழம் பொருட்களின், ஓவியங்களின் விலையுயர்ந்த
  மதிப்பு பற்றிய அறிவை ஏற்படுத்துதல் எனப் பல தளங்களில் நாம் செயல்பட்டாக வேண்டும். மாணவர்களில் இருந்து அதை ஆரம்பிப்பது சாலச்சிறந்தது.

  அந்த வகையில் தமிழாசிரியர் அவர்களின் பணி பாராட்டுதலுக்குரியது.

   

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: