RSS

புனித அல்போன்சம்மா! (GO..வா..5)

20 ஜூன்

GO…வா… கோவா! -5

காலை உணவு முடித்து விட்டு அல்போன்சம்மா கல்லறை உள்ள ஆலயத்திற்குச் சென்றோம். அவர் கேரள மாநிலம் கோட்டயம் அருகே குடமாளூர் என்ற சிறிய கிராமத்தில் 1910-ல் பிறந்தவர். அன்னக்குட்டி என்பது அவரது இயற்பெயர். பிறந்த மூன்று மாதத்திலேயே தன் தாயை இழந்ததால், பாட்டி மற்றும் பெரியம்மா கண்காணிப்பில் வளர்ந்தார். இளம் வயதிலேயே துறவு அவரைக் கவர்ந்ததால், திருமணத்தின் மீது நாட்டமில்லை. அதற்கான நிர்பந்தம் வந்தது. அதைத் தவிர்க்க, வீட்டின் பின்புறம் அறுவடைக்குப் பின் எரித்துப் போடும் பதர் குழியில் தன் காலை வைத்து சுட்டுக்கொண்டார். 1927-இல் அருட்சகோதரிகள் சபையில் அல்போன்சாவாகச் சேர்ந்தார். 1936-இல் நித்திய வார்த்தைப் பாட்டைப் பெற்றுக்கொண்டார். 1946-இல் இறைவனடி சேர்ந்தார். 2008 அக்டோபர் 12-இல் போப் 16ஆம் பெனடிக்ட் அவர்களால் அல்போன்சா அவர்களுக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டது.அருட்சகோ.அல்போன்சா அவர்கள், தான் எழுதிய குறிப்பொன்றில், இறைவன் தன் சிலுவையின் ஒரு பகுதியைத் தன்னிடம் கொடுத்துவிட்டதாகக் கூறுகிறார். அந்த அளவிற்கு தன் வாழ்நாள் முழுவதும் துன்பங்களிலேயே பயணித்தவர் அவர். அதனால்தான், ஏழைகளும், துயருறுவோரும் தங்களின் வேதனைகளையும், வலிகளையும் இப்புனிதையாலேயே புரிந்துகொள்ள முடியும் என்று நம்புகிறார்கள்; நாடுகிறார்கள். என் அம்மா இன்னதென்று தெரியாத கடுமையான காய்ச்சலில் மரணத்தின் விளிம்பில் கிடந்த காலத்தில் அல்போன்ஸம்மா முன் மெழுகுவர்த்தி ஏற்றி மனம் உடைந்து அழுதிருக்கிறேன் என்பார் பிரபல எழுத்தாளர் ஜெயமோகன்.இப்படித்தான் தினமும் எண்ணற்றவர்கள் இப்புனிதையின் கல்லறையில் கண்ணீர்விட்டுச் செல்கின்றனர். அந்தக் கல்லறையின் முன் நானும் ஒருசில நிமிடங்கள் மண்டியிட்டு எழுந்தேன். புதுவையில் அரவிந்தர் கல்லறை முன் அமர்ந்து எழுந்த நினைவு வந்தது.அவ்வாலய வளாகத்திற்கு வெளியே சாலையைக் கடந்தவுடன், புனித அல்போன்சம்மாவின் வாழ்வைக் காட்டும் அருங்காட்சியகம் உள்ளது. அதில் அவர்கள் பயன்படுத்திய பொருட்கள், பெற்ற சான்றிதழ்கள், பரிசுப் பொருட்கள், படித்த புத்தகங்கள், … என்று நிறையவே உள்ளன. அவற்றை காட்சிக்கு வைத்து நன்றாகப் பராமரித்து வருகிறார்கள். அங்கு சென்றால் இதையும் தவறாமல் பாருங்கள்.பிற்பகலில் எடத்துவா புனித ஜார்ஜியார் ஆலயம் சென்றோம். தென் தமிழகத்தில் புனித அந்தோணியார், புனித மிக்கேலாண்டவர் ஆகியோருக்கு உள்ள செல்வாக்கு போல இங்கு புனித ஜார்ஜியாருக்கு இருக்கிறது. நாங்கள் போன போது அங்கு திருவிழா நடந்து கொண்டிருந்தது. சாலையின் இருபக்கமும் திருவிழாக் கடைகள். குடும்பம் குடும்பமாய் மக்கள் கூட்டம். இங்கும் புதுவித நேர்ச்சையைக் காண முடிந்தது. அதாவது,செங்கல்களைத் தலையில் சுமந்தபடி ஆலயத்தை வலம் வந்தார்கள். அதைப் பார்த்தவுடன் சுற்றுலா வந்தவர்களும் கற்களைச் சுமந்து சுற்றி மகிழ்ந்தார்கள்.கோவில் முன்புள்ள அழகிய நீரோடையில் தண்ணீர் பரந்து ஓடிக்கொண்டு இருந்தது. இரு கரைகளிலும் பசுமை பொங்கி வழிய, குறுக்கே இருக்கும் பாலத்தின் மீது நின்று அந்த ஓடையின் அழகை ரசித்துக்கொண்டு இருந்தேன். அப்போது, பயணிகளோடு வந்த படகு ஒன்று மெதுவாக அப்பாலத்தின் கீழே கடந்து சென்றது. அது கிழித்துச் செல்லும் நீரில் தோன்றும் அலைகள், கரைகளை நோக்கி விரிந்தன. அவை நடுவே மிதந்து வந்த தூசிகளை கரைகளுக்கு ஒதுக்கின. நீரோடை சுத்தமாகிக் கொண்டே போனது.அது, நம் மனதில் உள்ள அசுத்தங்களை ஒதுக்கிவிட்டால் மனசும் சுத்தமாகிவிடும் என்று நமக்குச் சொன்னது போல இருந்தது. மனதோ, ஓடைக்கு நேரே தெரியும் கோபுரத்தைப் பார்த்து “இறைவா, என் மனதில் நீ படகு செலுத்த வரமாட்டாயா?” என்று விண்ணப்பித்தது.

Advertisements
 

4 responses to “புனித அல்போன்சம்மா! (GO..வா..5)

 1. சட்டநாதன்

  20/06/2012 at 4:05 பிப

  வணக்கம் சார் ,

  உங்களிடம் முன்பே கேட்க வேண்டும் என நினைத்தேன் .

  புனித அந்தோனியார் , புனித சவேரியார் , மிக்கேலாண்டவர் , இவர்கள் யார் ? யேசுவோடு வாழ்ந்த சீடரல்லாத துறவியரா ? அல்லது பின்னால் சர்ச்சால் புனிதர் பட்டம் வழங்கப்பட்டவர்களா ? இவர்களை வழிபடுவது இந்தியாவில் மட்டும் தானா ? அல்லது உலகம் முழுவதும் உள்ள வழக்கமா ? இயேசு அல்லாத பிறருக்கான வழிபாடுகளை கத்தோலிக்க சபை எப்படி எடுத்துக்கொள்கிறது ? மற்ற சபைகள் என்ன சொல்கின்றன ?

  ஏனென்றால் நான் கல்லூரியில் படிக்கும் போது வீடு எடுத்து தங்கி இருந்தேன் அல்லவா ? அந்த ஊரில் அந்தோனியாருக்கு கிடா வெட்டி வழிபட்டார்கள் .

  நேரம் கிடைக்கும் போது பதில் சொல்லுங்கள் , மகிழ்வேன் .

  நன்றி

  அன்புடன்

  மா.சட்டநாதன்

   
  • Asin sir

   22/06/2012 at 7:32 முப

   சட்டம், உன்னுடைய ஐயங்களுக்காக சில குறிப்புகள்:

   புனித அந்தோணியார், புனித சவேரியார் போன்றவர்கள் கத்தோலிக்க சமயத்தில் புனிதர்கள். அதாவது சைவ சமயத்தில் நாயன்மார்களும், வைணவ சமயத்தில் ஆழ்வார்களும் போன்றவர்கள். திருத்தொண்டர்கள், இறையடியார்கள் என்றும் சொல்லிக்கொள்ளலாம். இவர்கள் இறைவனுக்காகத் தன் உயிரையும் கொடுத்தவர்கள்.

   புனிதர் பட்டம் வழங்குவது கத்தோலிக்கத் திருச்சபை. அதாவது போப்பின் கீழ் உள்ள குழு, இதற்காக அவர்கள் அமைத்துள்ள நீதிமன்றத்தில் வாதாடி, இறுதியில் முக்திப்பேறு பட்டம் கொடுப்பார்கள். குறிப்பிட்ட கால இடைவெளி தந்து, அதில் அவரின் புதுமை வளர்ச்சியை அறிந்து, பின்புதான் புனிதர் பட்டம் கொடுக்கப்படுகிறது. இவ்வாறுதான் அன்னைத் தெரசாவிற்கு முக்திப்பேறு பட்டமும், அல்போன்சம்மாவிற்கு புனிதர் பட்டமும் வழங்கப்பட்டது.

   புனிதர்கள் வழிபடப்படுவதில்லை. திருச்சபையின்படி, வணக்கம் மட்டுமே செலுத்தப்படுகிறது. புகழ்ச்சி,ஆராதனை,தொழுகை அவர்களுக்குக் கிடையாது. இருப்பினும் நம் நாட்டில் மக்கள் தம் இந்துத்துவப்படி தங்களது பக்தியை வெளிப்படுத்துகிறார்கள்.(அடிப்படையில் இங்கு அனைவரும் இந்துக்கள் தானே!) அதைத் திருச்சபையும் கண்டு கொள்வதில்லை. ஆனால் பிற சபைகள் இப்படிக் கிடையாது. புனிதர்களுக்கு வணக்கம் மட்டும்தான் என்பதில் கறாராக இருக்கின்றன.

   புனிதர்களுக்கு வணக்கம் செலுத்தும் மரியாதை கத்தோலிக்கத் திருச்சபை அங்கீகாரத்துடன் உலகம் முழுவதும் உள்ளது.

   புனித மிக்கேலாண்டவர் என்பவர் ஆண்டவர் கிடையாது. அதாவது தொல்காப்பியம் காப்பியம் கிடையாது மாதிரி! மக்கள் பேச்சு வழக்கில் மிக்கேலாண்டவர் என்று கூறுவதால் நானும் அப்படியே எழுதி விட்டேன். உண்மையில் அவர் கடவுள் அனுப்பிய தூதர்களில் ஒருவர். மண்ணுலகைச் சார்ந்தவர் அல்லர். கடவுளைப் போலவே கட்புலனாகாதவர். சுருக்கமாகச் சொன்னால் கத்தோலிக்கத்தின் பலமான நம்பிக்கைகளில் இதுவும் ஒன்று. இவரை ‘புனித மிக்கேல் அதிதூதர்’ என்று அழைப்பர். குறிப்பாக சாத்தானை வீழ்த்துவதற்காகக் கடவுளால் அனுப்பப்பட்டவர். தீமைகளில் இருந்து நம்மைக் காப்பதில் இவரே தலைமை அதிபர். அதனால்தான் இவருக்கு ‘அதிதூதர்’ பட்டம். இவரைப் பற்றி விவிலியத்தில் திருவெளிப்பாடு-12:7 லிலும்(புதிய ஏற்பாடு); தானியேல்-10:13 லிலும்(பழைய ஏற்பாடு) குறிப்புகளைக் காணலாம்.

   ஆண்டுதோறும் அக்டோபர்-2 ம் தேதி காவல் தூதர்களுக்கு வணக்கம் செலுத்தப்படுகிறது. அதேபோல நவம்பர்-1 ம் தேதி அனைத்துப் புனிதர்கள் தினமும், நவம்பர்-2 ம் தேதி அனைத்து ஆத்மாக்கள் தினமும்(கல்லறைத் திருநாள்) கத்தோலிக்க சபையால் கொண்டாடப்படுகிறது.

    
   • சட்டநாதன்

    23/06/2012 at 6:03 முப

    உங்களுடைய விரிவான பதிலுக்கு நன்றி சார். இப்போது தான் மதங்கள் மற்றும் பண்பாடு பற்றி படிக்க ஆரம்பித்திருக்கிறேன் . இதற்கு முன்னால் சைவம் பற்றி அறியும் போது கூட , எழுதிவைத்த அனைத்தும் உண்மையில் நடந்தவை என்றே நம்பினேன் . இப்போதைய வாசிப்பு கொஞ்சம் தள்ளி நின்று , எதையும் பார்க்க வைக்கிறது .

    உங்களிடம் இது பற்றி பேசியதில்லை . நான் பார்த்து ஆத்திகர்களான நாத்திகர்கள் , மரணம் பற்றிய கேள்விக்கு நாத்திகத்தில் பதில் இல்லை , அதனால் நம்மை மீறிய சக்தி உண்டு என நம்ப ஆரம்பித்தேன் என்கிறார்கள் . உண்மையில் தீவிர கடவுள் நம்பிக்கை கொண்ட நான் , என் அம்மாவின் , நீதி மாணிக்கம் சாரின் மரணத்திற்கு பின்னர் கடவுள் இல்லை என நம்ப ஆரம்பித்தேன் .

    இதில் கடவுள் மீது வெறுப்பு , கோபம் என்றெல்லாம் எதுவும் இல்லை . இந்த பிரபஞ்ச விதிகள் நம்மால் புரிந்து கொள்ள முடியாதவை. இதில் மரணமும் ஒன்று , அவ்வளவுதான். இனிமேலும் நான் பிறப்பு , இறப்புகளை பார்க்கத்தான் போகிறேன் , ஆனால் அவை இயல்பானவை தான் என்றே நினைப்பேன் .

    நம்முடைய அன்றாட வாழ்கையை வேறு சோளி இல்லாமல் ஒருவர் உட்கார்ந்து காண்கிறார் / அதை வைத்து சொர்க்கம் , நரகம் , இந்து மதம் கூறும் நல்ல மறுபிறப்பு அல்லது கஷ்டப்படும் மறுபிறப்பு இவையெல்லாம் முடிவு செய்யபடுகின்றன என்றெல்லாம் நம்ப முடியவில்லை .

    பிறருக்கு இடைஞ்சல் இல்லாமல் இருக்க மதங்கள் மூலம் மனிதர்கள் இவ்வாறு கட்டுப்படுத்தப்படுகிறார்கள் , அவ்வகையில் மதங்கள் , கடவுள் எல்லாம் தேவையே .

    நன்றி

    அன்புடன்

    மா.சட்டநாதன்

     
 2. vidhaanam

  25/06/2012 at 5:07 முப

  என் பங்குக்கு கொஞ்சம் சட்டநாதன்,

  சைவ நாயன்மார்கள், வைணவ ஆழ்வார்கள் போல கத்தோலிக்க கிறித்தவத்தில் இந்த புனிதர்கள்.

  இந்து மதத்தில் அடியார்களின் இடம் எதுவோ, அதுவே கிறித்தவத்தில் புனிதர்களின் இடமும். ஒரு வகையில் இவர்கள் அனைவருமே தாங்கள் சார்ந்துள்ள நிறுவனமயமாக்கப்பட்ட சமயத்தின் கட்டுப்பாடுகளினின்று தங்களை விடுவித்துக்கொண்டு, தங்கள் வசதிக்கேற்ப, இயல்பிற்கேற்ப தங்கள் பக்தியை அமைத்துக்கொண்டவர்கள்.

  எல்லாம் இறையின் துண்டுகள் ஆன பின், யாரைக் கும்பிட்டாலென்ன, தேங்காய்-பழம் படைத்தாலென்ன, கடா வெட்டினாலென்ன. அதை இறைவன் ஏற்றுக்கொண்ட பின் சபைகளோ, சமயங்களோ, பிற யாருமோ ஏற்றுக்கொண்டாலென்ன புறக்கணித்தாலென்ன? இங்கு இறைநம்பிக்கையைத்தான் இறைவன் என்கிறேன்.

  ஒரு முறை பூசலார் கட்டிய கோயிலுக்கு சென்று வந்தால் இந்த உண்மை கட்டாயம் புரியும்.

  -ரஞ்சித்.

   

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: