RSS

Monthly Archives: ஜூன் 2012

கதைகளைப் பேசும் கல்லறைகள்!

தூத்துக்குடி மாவட்டம் – ஓட்டப்பிடாரம் அருகில் நாற்பதுக்கும் மேற்பட்ட ஆங்கிலேயர்களை அடக்கம் செய்யப்பட்ட இரு கல்லறைகள் உள்ளன. அதைப் பார்க்க வேண்டுமென ரொம்ப நாளாக ஆசை. கடந்த 23.03.2012 அன்று மாலை 3 மணிக்கு நானும் ரஞ்சித்தும் டூவீலரில் கிளம்பினோம். கோவில்பட்டி, பசுவந்தனை, வழியாக ஓட்டப்பிடாரம் சென்றோம்.அதிக போக்குவரத்து இல்லாத சாலை. பல இடங்கள் விவசாயமற்ற தரிசு நிலங்களாகவே காட்சியளித்தன.

ஓட்டப்பிடாரத்திலிருந்து பாஞ்சாலங்குறிச்சி சாலை திரும்பியவுடன் வலப்புறம் ஒரு சுடுகாடு இருந்தது. அருகில் வண்டியை நிறுத்திவிட்டு ,அவ்வழியே வந்த ஒருவரிடம் ஆங்கிலேயர்களைப் புதைத்த கல்லறை எங்கே இருக்கிறது? என்று கேட்டோம். சுடுகாட்டுக்கு அந்தப்புறம் என்றார். செல்வதற்கு சரியான பாதை இல்லை. அதெற்கென இருந்த பாதையை பக்கத்து நிலத்துக்காரர் ஆக்கிரமித்துக் கொண்டதாக ஒருவர் வேதனைப் பட்டார்.அருகில் அறுவடை செய்த நிலையில் இருந்த வயல்வெளி வழியாக உள்ளே சென்றோம். அங்கு ஆங்கில லெப்டினன்டுகள் ஐவரின் கல்லறைகள் ஒரு பழைய காம்பௌண்டுக்குள் இருந்தன. இது கி. பி. 1799 -ஆம் ஆண்டு பாஞ்சாலங்குறிச்சியில் வீரபாண்டியக் கட்டபொம்மன் படையினருக்கும், ஆங்கிலக் கிழக்கிந்தியப் படையினருக்கும் இடையே நடந்த போரில் பலியான லெப்டினன்டுகள் டக்லஸ், டார்மியக்ஸ், கொல்லின், பிளேக் மற்றும் பின்னி ஆகியோரைப் புதைக்கப்பட்ட கல்லறை.தற்போது தமிழ்நாடு தொல்லியல் துறை பாதுகாப்பின் கீழ் இருந்தாலும் பாதுகாப்பும் பராமரிப்பும் இல்லாமல் இருக்கிறது. தொல்லியலார் வைத்துள்ள கல்வெட்டும் உடைந்த நிலையிலேயே கிடக்கிறது. சாலையில் இருந்து எந்த வகையிலும் இவ்விடத்திற்கு வந்து சேர முறையான பாதை இல்லை.இதைப் பார்த்து விட்டு நாற்பது பேர் கல்லறை உள்ள இடத்திற்குச் செல்ல நினைத்தோம். பக்கத்து தோட்டத்தில் நின்று கொண்டிருந்த ஒரு பெரியவரிடம் கேட்டோம். அவரோ அருகில் உள்ள சுடுகாட்டுக் கல்லறைகளைத் தவிர வேறொன்றும் இருப்பதாகத் தெரியவில்லையே என்றார். வியப்பாய் இருந்தது! ஒரு யோசனை தோன்ற, நேராக பாஞ்சையில் உள்ள கட்டபொம்மன் வாரிசுகள் உள்ள காலனிக்குச் சென்றோம். அங்கு இருந்த ஒருவரிடம் கேட்க, சரியாக வழி காட்டினார். கிளம்பினோம்.

ஓட்டப்பிடார சாலையில் வலப்புறம் திரும்பி சென்றோம். அதில் இடப்புறம் செம்மண் சாலை, சவுக்குத் தோப்பு,வண்டிப்பாதை, மாந்தோப்பு – கடந்து சென்றவுடன் மிகப்பெரிய கல்லறைக் காம்பவுன்டு தென்பட்டது. உண்மையிலேயே இது ஒரு அட்வஞ்சர் ட்ரிப் போலவே இருந்தது.சூரிய அஸ்தமனத்திற்கு இன்னும் இருபது நிமிடங்கள் இருக்கிறன. உள்ளே சென்றோம். இரு வரிசைகளில் 44 கல்லறைகள். தமிழகத் தொல்லியலார் சார்பில் அண்மையில் வைக்கப்பட்டு இருந்த கல்வெட்டும் இருந்தது. கி.பி. 1807 ம் ஆண்டு மார்ச் மாதம் 21 மற்றும் மே 24 ஆகிய தேதிகளில் ஊமைதுரைக்கும் ஆங்கிலேயருக்கும் நடைபெற்ற போரில் மாண்டுபோன 44 ஆங்கில வீரர்களின் கல்லறைகள் இவை.இக்கல்லறைகளைப்போய்ப் பார்க்க என்ன இருக்கிறது? தாஜ்மகால் போல அழகுணர்ச்சி இல்லையே என்று நினைக்கலாம். உண்மைதான். ஆனால் ஆதிக்க சக்தியை எதிர்த்து வென்ற அடிமை வர்க்கத்தின் உண்மை வீரம் இருக்கிறது.

பாஞ்சையில் தமிழக அரசு எழுப்பியுள்ள கட்டபொம்மன் கோட்டையை (உண்மையில் கவெர்மென்ட் கோட்டை) தினமும் எண்ணற்றவர்கள் வந்து பார்த்துவிட்டுச் செல்கின்றனர். ஆனால், நம்மவர்களின் வீரத்திற்குச் சான்றுகளாய் இருக்கும் இக்கல்லறைகளை யாரும் பார்ப்பதில்லை. எறத்தாழ 200 ஆண்டுகள் பழமையான இக்கல்லறைகளைத் தமிழகத் தொல்லியல் துறை கூட அண்மையில்தான் தன் கட்டுப்பாட்டுக்குக் கீழ் கொண்டு வந்துள்ளது.அரசியல்வாதிகள் தன் ஓட்டு வங்கி அடிப்படையிலேயே வரலாற்றையும், தொல்பொருட்களையும், நினைவுச் சின்னங்களையும் பார்க்கிறார்கள், பராமரிக்கிறார்கள். அதற்கு அப்பாற்பட்டவைகளை தேவையற்றவை என்றே ஒதுக்கிவிடுகிறார்கள். இந்த உண்மையை நாமும் புரிந்து கொள்வது இல்லை. இதனாலேயே நம் இனத்தின், மொழியின், மண்ணின் எண்ணற்ற நினைவுச் சின்னங்களை, சரியான வரலாற்றை இழந்து விடுகிறோம், இழந்து வருகிறோம்.ஆட்சியாளர்கள் எப்போதும் தம் சுயத்தின் அடிப்படையிலேயே வரலாற்றைப் பதிவு செய்கிறார்கள். இது முடிமக்கள் ஆட்சி முதல் இன்று வரை இப்படித்தான் இருந்து வருகிறது.ஆங்கில ஆட்சியாளர்கள் பாஞ்சைப் போரில் இறந்த ஆங்கில வீரர்களுக்குத் தந்த முக்கியத்துவம், நம் படையில் இறந்த வீரர்களுக்குத் துளியும் தரவில்லை. ஏனெனில், அவர்களைப் பொறுத்தவரையில் அவர்கள் வீரர்கள் தேசப்பற்றாளர்களாகவும், நம் வீரர்களை விரோதிகளாகவும் பார்த்தனர். இதே பார்வையை நம்மவர்கள் பக்கம் பொருத்தினால், இந்த மதிப்பீடு அப்படியே திரும்பும்.

இவ்விரு வேறுபட்ட படைவீரர்களின் மனநிலை, குடும்பச் சுழல், வெற்றி, தோல்வி – இவற்றை சமூக, அரசியல், பொருளாதார அடிப்படையில் நோக்கினால், ஒவ்வொரு கல்லறைக்குள்ளும் எண்ணற்ற கதைகளும், இரத்த சோகங்களும் உறங்கிக்கொண்டு இருப்பது தெரியும். அதே நேரத்தில், கல்லறை கட்டப்படாத, இறந்த நம் வீரர்களின் எண்ணிக்கையும், அவர்களின் தேச, சமூக, குடும்பம் சார்ந்த உணர்வுகளும் மண்ணுக்குள் மறைந்ததும் யாருக்கும் தெரியாது!பாஞ்சை பூமியில் புதைந்து கிடக்கும் அத்தனை வீரர்களும் ஒட்டு மொத்தமாய் நம் மனதைத் தட்டிக் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் காண முடியாமல் இருள் சூழ்ந்த வேளையில் புறப்பட்டோம். மீண்டும் ட்ரிப் மீட்டரை சரிசெய்து கொண்டு வண்டியைக் கிளப்பினோம்.

கழுகுமலையை நாங்கள் வந்து சேரும் போது சரியாக நாற்பது கிலோ மீட்டரைக் கடந்திருந்தாலும், ஏதோ,கட்டபொம்மன் காலத்திலிருந்து கடந்து வந்ததைப் போன்ற உணர்வு ஏற்பட்டது!

– அசின் சார், கழுகுமலை.

 

புனித அல்போன்சம்மா! (GO..வா..5)

GO…வா… கோவா! -5

காலை உணவு முடித்து விட்டு அல்போன்சம்மா கல்லறை உள்ள ஆலயத்திற்குச் சென்றோம். அவர் கேரள மாநிலம் கோட்டயம் அருகே குடமாளூர் என்ற சிறிய கிராமத்தில் 1910-ல் பிறந்தவர். அன்னக்குட்டி என்பது அவரது இயற்பெயர். பிறந்த மூன்று மாதத்திலேயே தன் தாயை இழந்ததால், பாட்டி மற்றும் பெரியம்மா கண்காணிப்பில் வளர்ந்தார். இளம் வயதிலேயே துறவு அவரைக் கவர்ந்ததால், திருமணத்தின் மீது நாட்டமில்லை. அதற்கான நிர்பந்தம் வந்தது. அதைத் தவிர்க்க, வீட்டின் பின்புறம் அறுவடைக்குப் பின் எரித்துப் போடும் பதர் குழியில் தன் காலை வைத்து சுட்டுக்கொண்டார். 1927-இல் அருட்சகோதரிகள் சபையில் அல்போன்சாவாகச் சேர்ந்தார். 1936-இல் நித்திய வார்த்தைப் பாட்டைப் பெற்றுக்கொண்டார். 1946-இல் இறைவனடி சேர்ந்தார். 2008 அக்டோபர் 12-இல் போப் 16ஆம் பெனடிக்ட் அவர்களால் அல்போன்சா அவர்களுக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டது.அருட்சகோ.அல்போன்சா அவர்கள், தான் எழுதிய குறிப்பொன்றில், இறைவன் தன் சிலுவையின் ஒரு பகுதியைத் தன்னிடம் கொடுத்துவிட்டதாகக் கூறுகிறார். அந்த அளவிற்கு தன் வாழ்நாள் முழுவதும் துன்பங்களிலேயே பயணித்தவர் அவர். அதனால்தான், ஏழைகளும், துயருறுவோரும் தங்களின் வேதனைகளையும், வலிகளையும் இப்புனிதையாலேயே புரிந்துகொள்ள முடியும் என்று நம்புகிறார்கள்; நாடுகிறார்கள். என் அம்மா இன்னதென்று தெரியாத கடுமையான காய்ச்சலில் மரணத்தின் விளிம்பில் கிடந்த காலத்தில் அல்போன்ஸம்மா முன் மெழுகுவர்த்தி ஏற்றி மனம் உடைந்து அழுதிருக்கிறேன் என்பார் பிரபல எழுத்தாளர் ஜெயமோகன்.இப்படித்தான் தினமும் எண்ணற்றவர்கள் இப்புனிதையின் கல்லறையில் கண்ணீர்விட்டுச் செல்கின்றனர். அந்தக் கல்லறையின் முன் நானும் ஒருசில நிமிடங்கள் மண்டியிட்டு எழுந்தேன். புதுவையில் அரவிந்தர் கல்லறை முன் அமர்ந்து எழுந்த நினைவு வந்தது.அவ்வாலய வளாகத்திற்கு வெளியே சாலையைக் கடந்தவுடன், புனித அல்போன்சம்மாவின் வாழ்வைக் காட்டும் அருங்காட்சியகம் உள்ளது. அதில் அவர்கள் பயன்படுத்திய பொருட்கள், பெற்ற சான்றிதழ்கள், பரிசுப் பொருட்கள், படித்த புத்தகங்கள், … என்று நிறையவே உள்ளன. அவற்றை காட்சிக்கு வைத்து நன்றாகப் பராமரித்து வருகிறார்கள். அங்கு சென்றால் இதையும் தவறாமல் பாருங்கள்.பிற்பகலில் எடத்துவா புனித ஜார்ஜியார் ஆலயம் சென்றோம். தென் தமிழகத்தில் புனித அந்தோணியார், புனித மிக்கேலாண்டவர் ஆகியோருக்கு உள்ள செல்வாக்கு போல இங்கு புனித ஜார்ஜியாருக்கு இருக்கிறது. நாங்கள் போன போது அங்கு திருவிழா நடந்து கொண்டிருந்தது. சாலையின் இருபக்கமும் திருவிழாக் கடைகள். குடும்பம் குடும்பமாய் மக்கள் கூட்டம். இங்கும் புதுவித நேர்ச்சையைக் காண முடிந்தது. அதாவது,செங்கல்களைத் தலையில் சுமந்தபடி ஆலயத்தை வலம் வந்தார்கள். அதைப் பார்த்தவுடன் சுற்றுலா வந்தவர்களும் கற்களைச் சுமந்து சுற்றி மகிழ்ந்தார்கள்.கோவில் முன்புள்ள அழகிய நீரோடையில் தண்ணீர் பரந்து ஓடிக்கொண்டு இருந்தது. இரு கரைகளிலும் பசுமை பொங்கி வழிய, குறுக்கே இருக்கும் பாலத்தின் மீது நின்று அந்த ஓடையின் அழகை ரசித்துக்கொண்டு இருந்தேன். அப்போது, பயணிகளோடு வந்த படகு ஒன்று மெதுவாக அப்பாலத்தின் கீழே கடந்து சென்றது. அது கிழித்துச் செல்லும் நீரில் தோன்றும் அலைகள், கரைகளை நோக்கி விரிந்தன. அவை நடுவே மிதந்து வந்த தூசிகளை கரைகளுக்கு ஒதுக்கின. நீரோடை சுத்தமாகிக் கொண்டே போனது.அது, நம் மனதில் உள்ள அசுத்தங்களை ஒதுக்கிவிட்டால் மனசும் சுத்தமாகிவிடும் என்று நமக்குச் சொன்னது போல இருந்தது. மனதோ, ஓடைக்கு நேரே தெரியும் கோபுரத்தைப் பார்த்து “இறைவா, என் மனதில் நீ படகு செலுத்த வரமாட்டாயா?” என்று விண்ணப்பித்தது.

 

வந்தோம் கேரளா!(GO..வா..4)

GO…வா… கோவா! -4

மட்கான் ரயில் நிலையத்திலிருந்து இரவு பதினொரு மணிக்குக் கிளம்பிய நாங்கள், அடுத்த நாள் காலை எர்ணாக்குளம் வந்து சேர்ந்தோம். ரயில் நிலையத்திலிருந்து வல்லார்படம் அவர் லேடி ஆப் மேன்சம் சர்ச் சென்றோம். கடல் நீரில் தொலைந்த குழந்தை, மூன்று நாட்களுக்குப் பின் இங்குள்ள அன்னையின் அருளால் கிடைத்ததாகக் கூறினார்கள்.

இந்த நம்பிக்கைதான் சமயவேறுபாடின்றி அங்கு அதிகமானோர் வரக் காரணமாய் இருக்கிறது. இதைக் காட்டும் விதமாக சுரூபம் செய்து வைத்திருக்கிறார்கள். மேலும், ஆலய முன்புற முற்றத்தில் ஒருபுறம் ஸ்டேண்டில் நிறைய விலக்குமார் வைத்திருந்தார்கள். அங்கு வரும் பக்தர்கள் அதிலொன்றை எடுத்து அவ்வளாகத்தை சுத்தம் செய்கிறார்கள். அவ்வாறு செய்வதால் தங்கள் வேண்டுதல் நிறைவேறுமென்ற நம்பிக்கை. இது நமக்குப் புதிதாய் இருந்தது. ஆலயத்தைச் சுற்றி கண்ணுக்கு எட்டும் தூரம் வரை பசுமையும், கடல் நீரும் சூழ்ந்து நின்று, நமக்குக் காட்சி விருந்து அளிக்கின்றன.அழகாய் சிரிக்கும் அழகை ஆலயத்தின் கோபுர உச்சியிலிருந்து பார்க்க வியூபாயிண்ட் அமைத்திருக்கிறார்கள். அதற்கு ரூ.10/- கட்டணம் செலுத்தி லிப்ட்டில் சென்றும் போய்ப் பார்க்கலாம். ஆலய வளாகத்தில் இயேசுவின் பாடுகளை சித்தரித்து வைத்திருக்கும் மரம் போன்ற அமைப்பு, அங்கு வரும் யாவரையும் கவர்கிறது.மதிய உணவிற்குப் பின், எர்ணாக்குளத்திலுள்ள படகுத் துறைக்குச் சென்றோம். படகில் ஏறி கடலுக்குள் சென்றபின், அங்கிருந்து ஊரைப் பார்ப்பது, உள்ளே உள்ள குட்டி குட்டித் தீவுகளைப் பார்ப்பது, மிதந்து கொண்டிருக்கும் கப்பல்களைப் பார்ப்பது…… என்று எழுதும் எல்லாவற்றையும் – ஒரு முறை நீங்கள் நேரில் அனுபவித்தால்தான் தெரியும்! அந்த மகிழ்ச்சியின் ஆழம் எவ்வளவென்று!திடீரென்று நல்ல மழை பிடித்துக் கொண்டது. வெளியே வேடிக்கை பார்க்க முடியவில்லை. மழை நம்மை நனைக்கத் தொடங்கியதால், அனைவரும் அப்படகின் அடித்தளத்திற்கு வந்தோம். ஸ்பீக்கரில் ஆடத் தூண்டும் பாடல்கள் ஒலிக்க, அமர்ந்திருந்தவர்கள் ஆடத்தொடங்கினர். பாடலோசையை விஞ்சி அனைவரின் கரவோசை எழும்பியது.உடன் வந்த அருட்தந்தையை அவர்கள் அழைக்க, அவரும் உற்சாகத்துடன் ஆடி அனைவரையும் மகிழ்ச்சியில் நனையவைத்தார்.அன்று இரவு பரணஞானத்தில் தங்க வேண்டும். கிளம்பினோம். போகும் வழியில் இரவு உணவுக்காக திரிபுனித்ரா தூய மரியன்னை ஆலய வளாகத்தில் வண்டி நிறுத்தப்பட்டது. அவ்விடம் ஊர் நடுவே என்பதால் தரமான சைவ அசைவ ஹோட்டல்கள் இருந்தன. சாப்பிட்டுவிட்டு ஆலயத்திற்கு வந்தோம். அங்குள்ள மாதாவின் முகத்தில் தேன் வடிவதாக அங்கிருந்தவர்கள் கூறியதால், வந்திருந்த அனைவரும் ஆச்சரியத்துடன் வணங்கிக் கொண்டிருந்தார்கள்.

அப்போது அங்கு வந்த ஒருவர் மாதா தனக்குக் காட்சியளித்து ஜெபமாலை தந்ததாகக் கூறி, ஒரு ஜெபமாலையைக் காட்ட, விழி பிதுங்க அனைவரும் அதைத் தங்கள் கைகளில் வாங்கிப் பார்த்தனர். ஆசையாக அவரவர் கழுத்தில் அணிந்துகொண்டு போட்டோ எடுத்துக் கொண்டார்கள். இரவு 10 மணிக்கு பரணஞானம் சென்றடைந்தோம்.

பயணம் தொடரும்…

 

புரிந்தால் மகிழ்ச்சி!

னதிற்குள் சஞ்சலம்!

தரையைப் பார்த்தவாறு

மெ…ல்…ல… நடந்தேன்!

  • புகைத்த துண்டுப் பீடி
  • கரை படிந்த ஐஸ் குச்சி
  • பயணம் செய்த டிக்கெட்
  • பயன்படுத்திய ரீ சார்ஜ் கார்டு
  • நசுங்கிய வெற்றுத் தண்ணீர் பாட்டில்
  • நாள் காட்டியின் நேற்றைய தாள்
  • மை தீர்ந்து போன பால்பாயின்ட் பேனா
  • ஸ்ட்ராவோடு அமுங்கிக் கிடக்கும் புரூட்டி பாக்கெட்
  • காய்ந்து போன வாழைப்பழத் தோல்
  • செடிகளுக்கிடையே காற்றிலாடும் கேரிபேக்!

ப்படி இன்னும் எத்தனையோ …

பயன் தருகிறவரைதான் பூமிமேல்!

நான் ஏன் இன்னும் …?

மனதிற்குள் மகிழ்ச்சி!

                                                                   – அசின் சார், கழுகுமலை.

 

GO…வா…கோவா! – 3

புனித சவேரியார் ஆலயத்திற்கு நேர்எதிரே சற்று தொலைவில் 16 ஆம் நூற்றாண்டின் புனித அகஸ்டஸ் காம்ப்ளெக்ஸ் உள்ளது. 1572 இல் கட்டப்பட்டு, தாழ்வாரங்கள், தூண்கள், காட்சியகங்கள், பல அறைகள், அலுவலகம், துறவி மடம், உணவு கூடம், விருந்தினர் விடுதி, மற்றும் மருத்துவமனை கொண்ட மண்டபங்கள் என்று விரிவடைந்திருக்கின்றன. இதை 1835 இல் இடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 1846 இல் இந்த தேவாலயத்தின் முக்கியப் பகுதி சரிந்தது. பலவாறும் சிதைந்து போய், இன்று வெறும் கட்டமண் சுவர்களாக நிற்பதைத்தான், தற்போது இந்தியத் தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனம் பராமரித்து வருகிறது. பழமையை, வரலாற்றை அறிய ஆசைப்படும் மனங்களுக்கு எத்தனையோ செய்திகளைச் சொல்லக் காத்திருக்கிறது இவ்வளாகம்.

அங்கிருந்து அகுடாகோட்டைக்குச் சென்றோம். அகுடாகோட்டை டச்சு மற்றும் மராட்டியர்களின் படையெடுப்புகளுக்கு எதிராக பாதுகாப்பு கருதி 1612இல் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கோட்டையின் சுவர்கள் 5 மீட்டர் உயரமும் 1.3 மீட்டர் அகலமும் கொண்டது.

“அகுடா” என்றால் பெறப்பட்ட, தண்ணீர் என்று பொருள். கோட்டைக்குள் இருக்கும் நன்னீர் வசந்த காலத்தில் நிறுத்தப்படும் கப்பல்களுக்கு விநியோகிக்கப்படும். கோட்டையின் இன்னொரு சிறப்பம்சம் உள்ளே 13 மீட்டர் உயர கலங்கரை விளக்கம் உள்ளது. 1864 இல் கட்டப்பட்ட இந்தக் கலங்கரை விளக்கத்தில் ஆரம்பத்தில் ஓர் எண்ணெய் விளக்கு மட்டுமே பயன்படுத்தப் பட்டதாம். அதன் பின்னர் 1976 இல் புதுப்பிக்கப்பட்டுள்ளது. மேலும்,  பழைய கோவாவில் உள்ள புனித அகஸ்டஸ் காம்ப்ளெக்ஸ் இடிபாடுகளிருந்து பெறப்பட்ட மிகப் பெரிய மணி இங்குதான் இருந்திருக்கிறது. அது 1871 இல் பனாஜி தி இம்மாகுலேட் கன்செப்ஷன் தேவாலயத்தில் பொருத்தப்பட்டிருக்கிறது.

ஹாலங்குட் கடற்கரைக்குச் சென்றோம். பிற்பகல் வெயிலில், அகன்ற மணல்பரப்பைத் தாண்டி இருந்த கடற்கரையில் அதிகமான மக்கள் அலை. பாரா சூட்டில் பறப்பது,கடலில் மோட்டார் பைக்கில் செல்வது போன்ற விளையாட்டுக்கள் சுவரஸ்யமானவை. இவை வெளிநாட்டவரை மிக எளிமையாகக் கவர்கிறன. பாராசூட்டிற்காக ஆள்பிடிக்கும் புரோக்கர்களும் அக்கடற்கரையில் அலைகின்றனர். ஒரு ட்ரிப்புக்கு ரூ.500/- வாங்குகிறார்கள். பாராசூட்டில் பறப்பவர்களை கடல் நீரில் தோய்த்து மீண்டும் பறக்க வைப்பது நம்மைப் போன்ற பார்வையாளருக்கே மயிர்கூச்செரிவதாக உள்ளது. அருகில் சென்று பார்த்தால், பாராசூட் சாதாரண நைலான் கயிறுகளாலேயே கட்டப்பட்டிருக்கிறது. மோட்டார் படகை இணைப்பதும் இதே கயிறுதான். இது அவ்வளவு பாதுகாப்பானதாக இருக்குமென்று நமக்குத் தோணவில்லை.

தமிழகக் கடற்கரைகளில் குறிப்பாக, கன்னியாகுமரி, திருச்செந்தூர், வேளாங்கண்ணி போன்ற ஊர்களில் உள்ள கடற்கரைகளில் சொரசொரப்பான பாறைகள், ஆழமான பகுதிகள், பெரிய அலைகள் இருக்கின்றன. இங்கு அந்தப் பயம்வேண்டாம். ஏனெனில், சிறு சிறு தீவுகளும் சுற்றிக் கடலுமாக இருப்பதால் – ஆழமற்றதும், பெரும் அலைகளற்றதுமாகவே உள்ளன. அங்கு வெளிநாட்டவர் சூரியக்குளியல் எடுப்பதற்காக சாய்வான மரப்படுக்கைகள் உள்ளன. நமக்கு வெயிலில் வியர்வை சொட்டுகிறது. ஆனால் அவர்களோ சுகமாகப் படுத்திருக்கிறார்கள். அதன் அருகிலேயே மதுபான வசதியுடன் கூடிய ஹோட்டல் இருக்கிறது.(இது எல்லா பீச்சிலும்,சாலையிலும்தான்!). அங்கு அமர்ந்திருந்த ஆங்கிலேய ஜோடியில், அவன் மதுப்பாட்டிலை ஓப்பன் செய்து கிண்ணத்தில் ஊற்றித்தர, அவளோ ஒரு கையில் மதுக்கிண்ணமும், மறுகையின் விரலிடுக்கில் சிகரெட்டைத் தாங்கியவளாய், ஸ்டைலாக புகையை மேல் நோக்கி ஊதிக் கொண்டே பேசிக்கொண்டிருந்தாள்; அவனோ மதுவைக் குடித்துக்கொண்டே மாதுவின் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்தான்.

ங்கிருந்து வெளியே வந்த போது, நடைபாதை வண்டியில், செங்குத்து ஸ்டீல் வலைக்குள் அதி வேகமாக நெருப்பைக் கக்கிக் கொண்டிருக்கும் அடுப்பில், நேரே நின்று சுழலும் கம்பியில் சொருகி வைக்கப்பட்ட சிக்கன் சதைகள் வெந்து கொண்டிருந்தன. அவற்றைக் கீறி, சிறு சிறு துண்டுகளாக்கி தக்காளி மற்றும் கேரட் போன்ற துண்டுகளைக் கலந்து, பிரெட் அல்லது சப்பாத்தியுடன் தருகிறார்கள். அங்கு கூட்டம் மொய்க்கிறது. அது உடலுக்கு எந்த வகையிலும் ஆரோக்கியமானதாகத் தெரியவில்லை.

ஐஸ் வண்டி, தொப்பிக் கடை, டிசர்ட் கடை,… பார்த்துக்கொண்டே போகையில், வரிசையாக நிறுத்தியிருந்த விதவிதமான டூவீலர்கள் ஏராளம். சுற்றுலா வருபவர்கள் வாடகைக்கு எடுத்துச் செல்கிறார்கள். நாள் வாடகை ரூ.200/- முதல் ரூ.400/- வரை. ஆக்டிவாவுக்கு ரூ.200/- பஜாஜ் அவென்ஜருக்கு ரூ.400/-, அதாவது வாடகை – வண்டியைப் பொருத்து. நம் அடையாள அட்டையைக் காண்பித்து, விரும்பிய வண்டியைத் தேர்வு செய்து கொள்ளலாம்.

பயணம் தொடரும் …

 

GO…வா…கோவா! – 2

கோவா இந்தியாவின் மிகச் சிறிய மாநிலம். இது வடக்கில் தெரகோல் ஆறு(கோவாவை மகராஷ்டிரத்திலிருந்து பிரிப்பது), தெற்கில் கர்நாடகம், கிழக்கில் மேற்குத் தொடர்ச்சி மலை, மேற்கில் அரபி கடல் ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது. கோவாவின் மொத்தப் பரப்பளவு 3,702 ச.கி.மீ. இங்கு பேசப்படும் மொழிகள் கொங்கணி, மராத்தி. கோவாவின் மொத்த மக்கள்தொகை 14,57,723. இதில் 65%இந்துக்களும், 26%கிறிஸ்தவர்களும், 6%இஸ்லாமியர்களும், மற்றவர்கள் 3% ம் உள்ளனர்.போர்த்துக்கீசியத்தைச் சேர்ந்த வாஸ்கோடகாமா என்பவர் 1498ல் இந்தியாவுக்கு கடல் வழிப் பாதையைக் கண்டறிந்து கேரளா(கோழிக்கோடு அருகிலுள்ள காப்பக்கடவு)வந்து சேர்ந்தார். அவரைத் தொடர்ந்து போர்த்துக்கீசியர்களும் வந்தனர். 1510இல் அல்போன்சா டி அல்புக்கிர்க் என்னும் போர்த்துக்கீசியர் விஜய நகர அரசு உதவியுடன் கோவாவைக் கைப்பற்றினார். கோவாவில் இருந்து கடல்வழி வர்த்தகம் தொடங்கியது.

அதே போல் போர்த்துக்கீசியத்தில் இருந்து 1542ல் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த சேசு சபைத் துறவி பிரான்சிஸ் சவேரியாரின் வருகைக்கு பின் கிறிஸ்தவம் பரவியுள்ளது.இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகும், கோவா போர்த்துக்கீசியர் வசமே இருந்துள்ளது. 1961இல் ஆபரேசன் விஜய் என்னும் ராணுவ நடவடிக்கை மூலம் போர்த்துக்கீசியரிடமிருந்து கோவா மீட்கப்பட்டு இந்தியாவுடன் இணைக்கப்பட்டுள்ளது. கோவாவில் வாஸ்கோடகாமா பெயரில் ஓர் ஊர் ஒன்றும் இன்று உள்ளது. இனி கோவாவில் பார்த்த சர்ச்சுகள் மற்றும் இடங்கள் பற்றிக் கூறுகிறேன்.பழைய கோவா ‘கிழக்கின் ரோமாபுரி’ என்று ஒருகாலத்தில் அழைக்கப்பட்டிருக்கிறது. சுற்றுலாப்பயணிகள் தவிர மற்றவர்கள் கண்ணில் அதிகம் படாத கடற்கரையில் இருக்கிறது காஜேட்டான் தேவாலயம் (Church of St. Cajatan). தியேட்ரின் குருமரபைச் சேர்ந்த முதல் குருவான புனித காஜேட்டான் அவர்களின் நினைவாக, 1661ல் இத்தாலியச் சிற்பிகளால் ரோமிலுள்ள புனித பீட்டர்ஸ் தேவாலய வடிவில் கட்டப்பட்டுள்ள புனித உபகாரஅன்னையின் தேவாலயம் இது. ரோம் புனித பீட்டர்ஸ் தேவாலயம் இதைவிட ஆறுமடங்கு பெரியது என்கிறார்கள். ஆனால், காஜேட்டான் ஆலயமே உள்ளே நுழையும் போது நம்மைப் பிரமிக்க வைக்கிறது.கத்தீட்ரல் தேவாலயம் (St. Catherine’s’ Cathedral)மிகப் பெரிய ஒன்று. 35.56 மீட்டர் உயரமும், 76.2 மீட்டர் நீளமும், 55.16மீட்டர் அகலமும் உடையது. போர்த்துக்கீசியர்களின் அடையாளமாக விளங்க வேண்டும் என்பதற்காக போர்த்துக்கீசிய அரசர் டாம் செபஸ்டியோ 1562 ஆம் ஆண்டில்மிகப்பெரிய தேவாலயம் கட்ட ஆணை பிறப்பித்திருக்கிறார். அவரைத் தொடர்ந்து வந்து கோவாவை ஆட்சி செய்த வைசிராய்களால் ஆலயம் கொஞ்சம்கொஞ்சமாக எழுப்பப்பட்டு ஏறத்தாழ 90 ஆண்டுகளுக்குப் பிறகு கட்டி முடிக்கப்பட்டுள்ளது. ஆலயத்தின் உட்புறங்களில் கலை வேலைப்பாடுகள் நம் கண்களை வியக்க வைக்கின்றன.இதன் பின்புறம் உள்ள தொல்பொருளார் கட்டுப்பாட்டில் உள்ள ஆலயத்தின் பல்வேறு கலை நுட்பமும் நாம் அவசியம் காண வேண்டியதே!கத்தீட்ரல் தேவாலயத்தின் இடப்புறத்தில் சுமார் நூறு மீட்டர் தூரத்தில் குழந்தை இயேசு ஆலயம் அமைந்துள்ளது. புனித பிரான்சிஸ் சவேரியார் 1552ஆம் ஆண்டு இறையடி சேர்ந்த பின்பு, அவரது பதப்படுத்தப்பட்ட உடல் இவ்வாலயத்தில்தான் பாதுகாக்கப்பட்டு வருகிறது. எனவே, இவ்வாலயம் இன்று புனித சவேரியார் தேவாலயம் என்றே அறியப்பட்டு வருகிறது. இங்குள்ள அதிகமான ஆலயங்களில் ஆல்டரின் இரு பக்கங்களிலும் சித்தரிக்கப்பட்டுள்ள பழைய ஓவியங்கள் நம்மை வெகுவாக ஈர்க்கின்றன. பல சர்ச்சுகளின் அருகிலேயே  தொல்பொருளாரின் ஆர்ட் காலரி, அருங்காட்சியகம் இருக்கின்றன, தவறாமல் பார்க்க வேண்டும்.

ந்த ஆலயங்கள் மட்டுமல்லாது கோவா மாநிலம் முழுதும் பழமையான பல தேவலாயங்கள் உள்ளன.

பயணம் தொடரும் …

 

GO…வா…கோவா!

தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை ஆர். சி. சர்ச் பங்குத்தந்தை லாரன்ஸ் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த கோவா சுற்றுலாவிற்குக் கடந்த மே மாதம் சென்றிருந்தேன். அந்தப் பயண அனுபவங்கள் உங்களுக்கும் ஏதாவது ஒரு வகையில் பயனுள்ளதாய் இருக்கும் என்று நினைத்து எழுதுகிறேன்.

கோவா பயணம் நெல்லையிலிருந்து கிளம்பும் ஹாப்பா எக்ஸ்பிரஸில் காலை 5.55 மணிக்குத் தொடங்கியது. கொங்கன் ரயில்வேயில் பகலில் செல்லும் பயணம் மிக அருமையாக இருந்தது. மலைகளும்,குகைகளும்,மரங்களும்,நீரோட்டங்களும் அப்பப்பா….! ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்க்கையில் ஒரு முறையாவது இப்பாதையில் பயணிக்க வேண்டும். அப்போதுதான் நம் நாட்டின் இயற்கை வளமும்,செழிப்பும் குறித்து பெருமிதம் கொள்ள முடியும்.கேரளாவிற்குச் செங்கோட்டை, போடி மெட்டு, கம்பம் மெட்டு, வால்ப்பாறை போன்ற வழிகளில் செல்லும் போது தேயிலைத் தோட்டமும், தொழிலாளர்கள் வீடுமாகத்தான் தெரியும்.அதிக ஏற்றத்தாழ்வுள்ள சமூக அமைப்பு கொண்ட மாநிலம் போலத் தோன்றும்.

ஆனால், திருவனந்தபுரம் வழியாக இத்தடத்தில் பயணம் செய்யும் போது, கொல்லம் முதல் கோழிக்கோடு தாண்டியும் – கேரளா இயற்கைச் செழிப்பும், மக்கள் வாழ்க்கை செழிப்பும் கொண்டதாகவே இருக்கிறது.

ஒவ்வொரு ஊர்களிலும் அலங்கரிக்கப்பட்ட அங்காடிகள் அதிகமாக இருப்பது, அவர்களின் மிகுதியான நுகர்வுக் கலாச்சாரத்தைக் காட்டுகிறது. ஆலப்புழா, கொச்சின், எர்ணாக்குளம் போன்ற ஊர்களைத் தனி ட்ரிப்பாக வந்து பார்க்கவேண்டும் என்ற அவா பிறக்கிறது. போகும் வழியெல்லாம் எண்ணற்ற ஆறுகள் குறுக்கே செல்கின்றன.

                                           

அனைத்துஆறுகளும் மேற்குத் தொடர்ச்சி மலையில் தோன்றி அரபி கடலில் கலப்பதற்கு மேற்கு நோக்கியே பாய்கின்றன. தமிழகத் தளப்பகுதி போல வறண்ட பகுதி கொஞ்சமேனும் எங்கும் காண முடியவில்லை. கண்ணில் படுவதெல்லாம் தென்னை,தென்னை,தென்னை! மீதம் பலா,வாழை,கமுகு! ஒவ்வொரு வீடும் இன்ப வனமாகக் காட்சியளிக்கிறது.

கண்ணனூர், காசாரக்காடு தாண்டியவுடன் இருட்டத்தொடங்கியது. தொலைதூர வண்டிகளில் உள்ளது போன்ற பான்ரிக்கார் இந்த ஹாப்பா எக்ஸ்பிரஸில் இல்லை(எதிர்காலத்தில் இணைக்கப்படலாம்). எனவே நினைத்தபோது குழந்தைகளுக்கோ, முதியவர்களுக்கோ ஏதும் வாங்க முடிவதில்லை. வாடிக்கையாக வருபவர்கள் உணவு,ஸ்நாக்ஸ் எல்லாம் தயாராக கையில் எடுத்து வந்து விடுகிறார்கள். ஆனால்,நம்மைப் போன்றவர்களுக்கு சில நேரங்களில் தண்ணீர்,டிபன் வாங்குவதுகூட சிரமமாகிவிடுகிறது. அடுத்த நாள் அதிகாலை 3.30 மணிக்கு மட்கான் ரயில் நிலையத்தைச் சென்றடைந்தது வண்டி. இரண்டு மணிநேரம் தாமதம் என்றார்கள்.

அங்கிருந்து பழைய கோவாவிலுள்ள சவேரியார் ஆலயத்தோடு இணைந்துள்ள கெஸ்ட்ஹவுசில் தங்கினோம். காலையில் சவேரியார் ஆலயத்தில் தமிழ்த் திருப்பலியை நம் தந்தை ஆற்றியபின், கோவாவைச் சுற்றிப் பார்க்கக் கிளம்பினோம். போகும்முன் கோவாவைப் பற்றி கொஞ்சம் அறிந்து கொள்ளது நன்று. அதற்காக நான் எடுத்து வைத்திருந்த சில குறிப்புகளை அடுத்த அஞ்சலில் தருகிறேன்.

பயணம் தொடரும் …