RSS

கலைகள் சிறந்த தமிழ்நாடு?

22 ஏப்

 “கழுகுமலை” அசின் சார்

தப்பாட்டம்             தமிழர்கள் நுண் கலைகளில் சிறந்தவர்கள் என்பதைப் பழந்தமிழ் நூல்களான சங்க இலக்கிய நூல்கள், தொல்காப்பியம், காப்பியநூல்கள் ஆகியவற்றில் அதிகமாகக் காணமுடிகிறது. இயல்,இசை,நாடகம் என்ற முத்தமிழ் மட்டுமின்றி ஆயக்கலைகள் அறுபத்துநான்கு என்று கூறுபவை பற்றிய குறிப்புகளும் உள்ளன.

             சங்ககாலம் முதல், தமிழன் கலைகளுக்குத் தந்த முக்கியத்துவத்தை இவற்றால் அறியலாம். இதற்கான சான்றுகளை இலக்கியங்களில் தேட ஆரம்பித்தால் கிடைப்பவை எண்ணிலடங்கா.

             சிலம்பில் இந்திரவிழாவின் போது மாதவி பதினொரு வகை ஆடல்கள் ஆடியதாக கடல் ஆடு காதையில் இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார். அவற்றில் ஆறு ஆடல்கள் நின்று ஆடுவனவும், ஐந்து ஆடல்கள் வீழ்ந்து ஆடுவனவும் ஆகும். அதே போல், கூத்துக்கள்   பாமரர் முதல் பண்டிதர் வரை யாவராலும் பின்பற்றக்கூடியதாக இருந்திருக்கிறது. சேரமன்னன் அத்தி என்பவன் சிறந்த கூத்துக் கலைஞனாக இருந்திருக்கிறான். இதனாலேயே அவன் ஆட்டனத்தி என்று அழைக்கப்பட்டான்.

             இவை மட்டுமின்றி, இன்றும் நமக்குச் சான்றுகளாய் இருந்து காட்சி இன்பம் தருபவை – கட்டடக்கலையில் சிறந்த ஆலயங்கள், அவற்றிலுள்ள சிற்பங்கள், ஓவியங்கள்!

              தஞ்சைப் பெருவுடையார் கோவில், கங்கைகொண்ட சோழபுர பிரகதீஸ்வரர் ஆலயம், காஞ்சி கைலாசநாதர் கோவில், சித்தன்ன வாசல் போன்ற கோவில்களில் உள்ள கட்டடங்கள், சிற்பங்கள், ஓவியங்கள் இன்றும் காண்போருக்கு வியப்பைத் தருகின்றன.

              தமிழகத்தை ஆண்ட மூவேந்தர்களின் ஆட்சிக் காலத்திலும், அதைத் தொடர்ந்து வந்த விஜயநகரப் பேரரசு, நாயக்கர் காலம், மராட்டியர்கள் போன்ற காலகட்டங்களிலும் கணிசமான கலை வளர்ச்சியைக் கொண்டு இருந்தது தமிழகம்.

              இப்படிப் பண்டுதொட்டுத் தமிழர்களால் வளர்த்த இக்கலைகள்   இன்று தளர்வுற்று அழிந்து வருகின்றன . ஏற்கனவே, பரதம் போன்ற உயர்கலைகள் சர்வாதிகாரத் தன்மை உடையதாக இருந்ததால் அவற்றில் புதிய மாற்றங்களைக் கொண்டு வர முடியவில்லை. மேலும் அதன் வளர்ச்சிக்குத் தடையாக இருந்த முக்கியக் காரணம் – யாரும் அதை எளிதில்  கற்றுக்கொள்ள முடியாத நிலையும்;  பார்வையாளனாக முடியாத நிலையும்தான்!

              அதே போல தமிழகத்தில் மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்த நிகழ்த்துதல் கலைகளும் மிகப்பெரிய அழிவை அடைந்து வருகின்றன. சான்றாக, தோல்பாவைக்கூத்து எனப்படும் பாவைக்கூத்து தமிழகத்தில் எண்பதுகள் வரை பட்டி தொட்டிகளில் செல்வாக்குப் பெற்றிருந்த ஒன்று. இது தஞ்சையை ஆண்ட சரபோஜிமன்னர் காலத்தில் மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து தமிழகத்திற்கு வந்த ராவ் இன மக்களால் தமிழகத்தில் பரவியது. இராமாயணம், மகாபாரதம்,நல்லதங்காள் போன்ற கதைகளை சில வாரங்கள் தொடர்ந்து நடத்துவார்கள். இக்கலை சினிமா,தொலைக்காட்சியின் வரவிற்குப்பின் கொஞ்சம் கொஞ்சமாக நலிந்தது. இக்கூத்தின் வருகைக்குப்  பின்தான் பொய்க்கால்குதிரை,கணியன் கூத்து போன்றவை தோன்றின என்பர்.

              பாளை தூய சவேரியார் கல்லூரி – நாட்டார் வழக்காற்றியல் துறைப் பேராசிரியர் தருமராஜ் அவர்கள் இக்கலைகள் பற்றிக்கூறும் போது, தமிழகத்தில் இருந்த நிகழ்த்துதல் கலைகள் 250. அதில் 150 க்கான பெயர் தெரியும், விபரம் தெரியாது. மீதம் நூறு கலைகளின் தகவல் இருக்கிறது. இதில் அறுபது நடப்பில் ஆடப்பட்டு வருகின்றன. பாவைக்கூத்து போன்ற சமயம் சாரா நாற்பது கலைகள் அழிந்து விட்டன. நடனக்கலைகளில் இருபது சினிமா சார்ந்ததாகத் திரிந்துவிட்டன. உதாரணம் : ஆடலும் பாடலும், நடிகர் போல வேடமிட்டு ஆடுதல் போன்றவை” என்றார். மேலும் இவை குறித்து, சேவியர் கல்லூரியிலிருந்து வெளியிடப்பட்ட “நாட்டுப்புற நிகழ்கலைக் களஞ்சியம்” என்ற நூல் ஆராய்ந்து கூறுவதாகத் தெரிவித்தார்.

              இவை ஒருபுறமிருக்க அறிவியல் முன்னேற்றத்தால் கண்டுபிடிக்கப்பட்ட மின்சாதனங்களாலும் கலைத்திறன் அழியத் தொடங்குகிறது – மறுபுறம்!

             தற்போது கல்வெட்டு, கல் சிற்பம், மரச்சிற்பம் – போன்ற கைவேலைப்பாடுகள் அனைத்திற்கும் எந்திரங்கள் வந்து விட்டன. இதன் போக்கில் கைத்திறன் உடையவர்களின் தேவை குறையும், நாளடைவில் அக்கலைஞர்கள் இல்லாமலே போய் விடுவார்கள். அடுத்த  தலைமுறைக்கு எந்திர வேலை மட்டுமே தெரியும்.             

             பிளக்ஸ் எந்திரம் வந்தபின் ஓவியர்கள் ஒழிந்தது போலவே, சிற்பத்திறனுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும். பிளக்ஸ் தத்ரூப படத்தைக்காட்டும். ஆனால், அதை யாரும் ரசிப்பதில்லை. அதேபோல சிற்பங்களும் இனித் தத்ரூபமாக இருக்கும். ஆனால்,  ரசிக்க மனம் மட்டும் இருக்காது.  

             “கலைப் பெருக்கும் கவிப்பெருக்கும் மேவுமாயின் பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம் விழி பெற்றுப் பதவி கொள்வர்” என்றார் பாரதி. மாறாக, மேலே அறிந்தவாறு கலைகளும், இன்றைய சினிமாக் கவிஞர்களால் கவியும் கணிசமாக அழிவைத் தேடி விரைகிறது. இச்சூழல் சமூகத்தில் உள்ள அடித்தட்டு மக்களின் சிந்தனையை, உழைப்பை மறுபடியும் ஆதிக்கவர்க்கம் சுரண்டுவதற்கே வழி வகுக்கும். 

              கலைகள் பொழுதுபோக்கு அம்சமாக மட்டுமின்றி சமூகத்திலுள்ள அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரமாகவும் இருந்திருக்கிறது. அது எந்திரத்திற்கு உட்படும்போது மேல்தட்டு மக்களுக்கு மட்டுமே உரிய தொழிலாகக் கைமாறுகிறது. அடித்தட்டு மக்களோ கூலிகளாக மாறி கையேந்தி நிற்கும் அவலநிலை உருவாகுகிறது. போகப்போக, கூலிகள் வாக்காளர்களாகவும், தொழிலதிபர்கள் அரசியல்வாதிகளாகவும் உருவெடுக்கிறார்கள். இறுதியில், சமூகத்தின், அரசியலமைப்பின் ஒட்டுமொத்த கட்டுமானத்திலும் ஆண்டான் – அடிமை என்ற நிலையே அவதரிக்கும்!

           எனவே, இந்த உண்மையைப் புரிந்து கொண்டு, காலமாற்றத்தால் தங்கள் வாழ்வாதாரம் பறிபோகும் கலைஞர்களுக்கு, அடித்தட்டு மக்களுக்கு – புதிய வாழ்வாதாரத்தை உருவாக்கி, அவர்களை சமூகத்தில் உயர்நிலைக்குக் கொண்டுவரவேண்டிய மிகப்பெரிய பொறுப்பு ஆளும் அரசுக்கு இருக்கிறது. மேலும், அரசின் சரியான நடவடிக்கையினாலேயே ஒரு நாட்டில் “எல்லோரும் இந்நாட்டு மன்னர்” என்ற ஒருமைச் சிந்தனையை ஏற்படுத்த முடியும். 

Advertisements
 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: