RSS

அம்மன்கள் நம் அடையாளச் சின்னங்கள்!

21 ஏப்

“கழுகுமலை” அசின் சார்

amman

*    டை முடி தலையுடன் நெஞ்சுக்கு அருகில் அக்னிச் சட்டியை ஏந்திக்கொண்டு ஆடி வரும்சாமி!  

*    க்கள் பயபக்தியுடன் குடம்குடமாக நீரை ஊற்றி அந்தச் சாமியிடம்அருள்வாக்குக் கேட்கும் பணிவு!

*    வேசமாய் அருள்வாக்குச் சொல்லி விபூதி பூசும் அந்தச் சாமி!

           யாரோ ஒருவரின் தோளில்அமர்ந்து கொண்டு அச்சத்துடன் பார்த்த அந்தக் குழந்தைப் பருவ நிகழ்வுகள் எல்லாம், இப்போதும் மேள முழக்கத்தின் மத்தியில் பசுமையாய் என் மனதில் படர்ந்து கொண்டிருக்கிறது.

        அன்று பயத்தைத் தவிர வேறு படிப்பினையைத் தராத அந்த நிகழ்வுகள், இன்று படிக்க வேண்டிய பாடங்களாகப் படுகிறது. ஏனெனில், அந்த நிகழ்வுகளுக்குப் பின் தமிழ் மண் சார்ந்த மக்களின் நம்பிக்கை இருக்கிறது. அந்த நம்பிக்கைக்குரிய தெய்வங்களின் கதைகள் இருக்கின்றன. வரலாற்று நிகழ்வுகளும், சமூகத்தைப் புரட்டிய சம்பவங்களும் இருக்கின்றன.

          பக்தி முயற்சியைப்  பகுத்தறிவோடு ஒப்பிட்டு விலகி நிற்கத் தெரிந்தாலும், சமூக வரலாற்றில் அம்மக்கள் தெய்வங்களை நாம் ஒவ்வொருவரும் அறிந்து கொள்வது அவசியம். அந்த வகையில் நம் பகுதியிலுள்ள எத்தனையோ அம்மன்களில் மூன்று அம்மன்களின் வரலாற்றுச் செய்திகளை மட்டும் இங்கு பகிர்ந்து கொள்ளப்படுகிறது. 

1 . வெட்டுடையார் அம்மன் :

             சிவகங்கையிலிருந்து 12 கி.மீ.தூரத்தில் கொல்லன்குடிக்கு அருகில் உள்ள காளியம்மன் கோவில் இது. முந்நூறு ஆண்டுகளுக்கு முன், சிவகங்கைச் சீமை மன்னர் முத்து வடுகநாத பெரிய உடையார் ஆண்டு வந்தார். 1772 – ஜூன் 25 ஆம் நாள் அவரை ஆங்கிலேயப் படைத் தளபதி கர்னல் ஜோசப் ஸ்மித் சுட்டுக் கொன்றார். பெரிய உடையாரின் மனைவி வேலு நாச்சியாரையும் பிடிப்பதற்காக ஆங்கிலேயப்படை துரத்தியது. நாச்சியார் தனது பரிவாரங்களுடன் காட்டிற்குள் விரைந்தார். பின்தொடர்ந்து வந்த ஆங்கிலேயப் படை காட்டிற்குள் நுழைந்த போது, ஆடு மேய்த்துக்கொண்டு இருந்த இளம் பெண் ஒருத்தியிடம், வேலு நாச்சியார் போன திசையைக் கேட்டது. 

           “தெரியும், ஆனா சொல்ல முடியாது” என மறுத்துரைத்த அவளின் தலையை வாளால் துண்டாக்கிவிட்டு விரைந்தது ஆங்கிலேயப் படை! “உடையாள்” என்கிற அந்தப்பெண் வெட்டுப்பட்டதும் வெட்டுடையாள் ஆகி “அம்மன்” ஆனாள். இன்று வெட்டுடையார் காளியம்மனாக வணங்கப்படுகிறாள்.

நீதியை நிலைநாட்டும் தெய்வீக அடையாளமாக இருக்கும் வெட்டுடையாள், எப்படியாவது நீதி வழங்குவாள் என்ற நம்பிக்கை  மக்கள் மத்தியில் நிலவுகிறது. மதப் பாகுபாடில்லாமல் மக்கள் வந்து செல்லும் இக்கோவில் 1940 – லிருந்தே அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

2 . போத்தியம்மன் :

              தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் ஜமீனில் ஒரு சமயம் ராஜா தனது குழுவினருடன் வேட்டைக்குச் சென்றார். போகும் வழியில் போத்தி என்ற பதிமூன்று வயது பெண்ணின் அழகு அவருடைய கவனத்தையும், சபலத்தையும் ஈர்த்தது. இல்லம் திரும்பிய பின்பும் அவரது மனம் தீயாய்ப் பற்ற, அந்தப் பெண்ணை அரண்மனைக்கு வரச்சொல்லி ஆள் அனுப்பினார்.

              ஜமீன் அழைப்பைக் கேட்டதும் கதிகலங்கிப் போனார்கள் பெற்றோர்கள். “தன்  குழந்தை அழகாக இருப்பதனால் இப்பேர்ப்பட்ட தண்டனையா?” குமுறினார். ஜமீன் உத்தரவுக்குக் கட்டுப்பட்டு அனுப்பினால் குழந்தையும், குடும்ப மானமும் பாழ்படும். மீறினால் ஜமீனை எதிர்த்து வாழ முடியாது. மனம் உடைந்து அழுதவர்கள் ஒரு முடிவு எடுத்தனர்.

             எட்டயபுரம் கீழத்தெருவில் அவர்கள் இருந்த வீட்டுக்கு வெளியே ஆழமான குழி தோண்டினர். பாசத்துடன் அணைத்துக் கொஞ்சியழுத பெற்றோர்கள் தன்  ஆசைக் குழந்தையைக் குழியில் தள்ளி மண்ணால் மூடினர். இரவோடு இரவாகக் குடும்பத்துடன் கீழக்கரைக்குப் போய்விட்டனர்.

             கால ஓட்டத்தால் குற்ற உணர்வு தாங்காமல் திரும்பவும் அதே வீட்டிற்கு வந்த அந்தக் குடும்பத்தினர், போத்திக்கு மண்டபம் அமைத்து வணங்கினர். தற்போது கற்சிலை பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது.

             எங்கள் பெண்ணுக்கு நேர்ந்த கதிக்காக அந்தப் பெண்ணையே அம்மனாக வணங்குகிறோம் என்கிறார்கள் அங்குள்ளவர்கள். பெண்கள் இங்கு வந்து நேர்ந்து கொண்டால் பலிக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.

             இந்த ஊரைச் சார்ந்த மக்கள் தொழில் காரணமாக வெளி மாவட்டங்களுக்கும் சென்றிருப்பதால் தூத்துக்குடி மாவட்டம் மட்டுமின்றி, நெல்லை,ராமநாதபுரம், திருச்சி மாவட்டங்களிலும் போத்தியம்மன் கோவில்களைக் காணமுடிகிறது.

3 . வெயிலாட்சியம்மன் :

            நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பல தலைமுறைகளாக வெயிலாட்சி பெயர் கொண்ட பிள்ளைகளை அதிகமாகக் காணலாம். ஊருக்கு வெளியே விவசாய நிலத்திற்கு மத்தியிலுள்ள இந்த வெயிலாட்சியம்மன் பெயர் நமக்குப்  பல செய்திகளைக் கூறுகிறது.

            வெயில்,வறட்சி அதிகரிக்கும் போது கிராமத்து வயல்களும்,குளங்களும் நீரில்லாமல் வறண்டு போகும். விவசாயத்தை நம்பியிருப்பவர்களுக்கு வேலை இல்லாததால், பிழைப்பு தேடி வேறு ஊர்களுக்குச் செல்ல வேண்டிய அவலம். இந்த இன்னலை ஏற்படுத்தும் வெயிலையே அம்மனாக வழிபட்டால் அதன் சூடு தணியும் என்கிற கிராம மக்களின் நம்பிக்கை வடிவம்தான் வெயிலாட்சியம்மன்!

             விவசாயத்தை நம்பி வாழும் கிராமத்து ஏழை மக்கள் வறட்சியைத் தாங்கவும், வெயில் தாக்கத்தால் ஏற்படும் நோய்களில் இருந்து மீளவும், சொந்த ஊரிலேயே நிலைத்து வாழவும், வெயிலை சக்தி மிக்க அம்மனாக வழிபடுகின்றனர். 

               த்தகைய அம்மன் வரலாறுகள் நம் கடந்தகாலச் சுவடுகளை மட்டுமல்ல இயற்கையும், பிறந்த மண்ணும் தனக்குச் சாதகமாக இல்லாதபோது அதைத் தெய்வமாக நேசிக்கும் உயர்ந்த பண்பையும் காட்டுகின்றன. இந்த வரிசையில் இசக்கியம்மன், பகவதியம்மன்,பேச்சியம்மன் என்று இன்னும் எத்தனையோ அம்மன்கள் நம் தமிழகத்தில் வழிபடப்படுகின்றனர். 

ஏக்கங்களும் எதிர்பார்ப்புகளும் :

              ஆதிக்க சக்தியை எதிர்க்கத் துணிந்த பெண்களும், அடக்குமுறைக்கு ஆட்படாமல் உயிரை மாய்த்துக் கொண்ட பெண்களும், ஆதிக்கவாதிகளால் எழுதப்பட்ட வரலாற்றில் இடம்பெறவில்லை. சைவ சமயத்தில் நாயன்மார்களுக்கும், வைணவ சமயத்தில் ஆழ்வார்களுக்கும் உள்ள அங்கீகாரம் இந்த அம்மன்களுக்கு இல்லாமல் போனது நம்மில்  ஏக்கங்களாகவே நிற்கின்றன. அடக்குமுறைக்கு உட்பட்ட ஏழைச் சமுதாய மக்களால் மட்டுமே வணங்கப்படும் அம்மனின் வரலாறு, தமிழக அடித்தட்டு மக்களின் சமூக வரலாறு. இதுதான் பெரும்பான்மைத் தமிழக மக்களின் பின்புலம், கடந்துவந்த பாதை! அம்மன்கள் நாம் நிற்கின்ற உச்சத்திற்கு ஏற்றிவிட்ட படிக்கட்டுகள் என்பதையெல்லாம் நினைவுகூரும்போது மனம் வணக்கம் செலுத்தி மகிழ்ச்சி கொள்கிறது.

               இருப்பினும் கடந்த இருநூறு முந்நூறு ஆண்டுகளுக்குள், தமிழக அடித்தட்டு மக்களின் எழுச்சிக்காக உயர்ச்சிக்காக, உடலாலும் உள்ளத்தாலும் போராடி உயிரிழந்த இத்தகைய எத்தனையோ பெண்கள் வழிபாட்டிற்குரிய அம்மனாக மட்டுமே இருக்கிறார்கள். அவர்களின் அர்ப்பண வாழ்வு சில கல் தொலைவைக்கூட எட்டாமல் வெறிச்சோடி நிற்கிறது. இந்த நிலை இப்படியே தொடர்வது நல்லதல்ல!

              நம் மண்ணின் மாண்பை, மக்களின் மானத்தை, வீரத்தை, தியாகத்தை, இயற்கை நேசிப்பை வெளிப்படுத்துகிற அடையாளச் சின்னங்களான இவர்களைத் தலைமுறைகடந்து உலகிற்கு எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியம் இப்போது நம் அனைவருக்கும் இருக்கிறது என்பதை இவ்வேளையிலாவது உணர்ந்து கொள்வோம்!

* * *

Advertisements
 
1 பின்னூட்டம்

Posted by மேல் 21/04/2012 in சமயம்

 

One response to “அம்மன்கள் நம் அடையாளச் சின்னங்கள்!

  1. A.M.கிருஷ்ணன்

    27/09/2012 at 10:22 பிப

    அம்மன்கள் அருள்தரும் பொக்கிஷங்களாக மட்டுமல்லாது தமிழ் வளர்க்கும் பொக்கிஷங்களாகவும் உள்ளனர் என்பது சொல் புதிது மூலம் நிருபணம் ஆகியுள்ளது.

     

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: