RSS

ராஜ்கிர்

“கழுகுமலை” மா.சட்டநாதன், டெல்லி.

ராஜ்கிர்1

(புதிதாகப் படிப்பவர்கள் “முதல் பதிவில்” இருந்து படிக்கவும்.)

பதிவு : 2

ராஜ்கிர் போய்ச் சேர்ந்த போது மாலை  மணி நான்கு.

ஏற்கனவே முன்பதிவு செய்து வைத்திருந்த விடுதி, பேருந்து நிலையம் அருகிலேயே இருந்தது. இப்போது மழை இல்லை. வரவேற்பறையில் இருந்த இளைஞர் இப்போது போனால் நிறைய இடங்களைப் பார்க்க முடியாது. அவசியம் பார்க்க வேண்டுமானால் அருகில் உள்ள மூன்று கோவில்களுக்குப் போகலாம் என்றார்.

நானும் அறைக்கு வந்து ஒரு தேநீர் அருந்திவிட்டு, புறப்பட்டுச் சென்றேன்.

திடீரென ஒரு யோசனை.

ராஜ்கிர் வரும் போதே ஏராளமான “டோங்கா” எனப்படும் குதிரை வண்டிகளைப் பார்த்தேன். அதில் ஒன்றில் போனால் என்ன? சந்தோஷ் யாதவ் கிடைத்தார். என் கையில் விடுதியில் கொடுத்த பார்க்க வேண்டிய இடங்களின் பட்டியல் இருந்தது. அதில் உள்ள Rope car மூலம் செல்லக்கூடிய விஸ்வசாந்தி ஸ்தூபா மற்றும் ஜராசந்தனின் அகோரா, பிம்பிசாரனின் சிறை போன்ற இடங்கள் தொலைவில் உள்ளவை என்பதால் இப்போது போக முடியாது என்றார்.

ராஜகிருஹம் – புத்தம், சமண மதங்களுக்கு முக்கியமான இடம் ஆகும். இந்து, சீக்கிய வழிபாட்டு இடங்களும் உண்டு. புத்தர், சித்தார்த்தராகத் தனது ஞானம் தேடும் முயற்சியில் அலைந்து கொண்டிருந்த போது, பிம்பிசாரர் ஆட்சி செய்த மகத சாம்ராஜ்யத்தைக் கடந்தார். அப்போது, புத்தரால் கவரப்பட்ட பிம்பிசாரர், அவரை துறவரத்தைத் தவிர்த்துவிட்டுத் தன்னுடன் இருக்கச் சொன்னார். அதை மறுத்த புத்தரிடம், அவ்வாறெனில் அவருக்கு ஞானம் கிடைத்த பின் தனக்கு உபதேசம் செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். புத்தர் ஞானம் பெற்றபின் அப்போதைய மகத சாம்ராஜ்யத்தின் தலைநகரான இந்த ராஜ்கிருக்கு வந்தார். பிம்பிசாரர் அவருக்கு மூங்கில் தோப்பு ஒன்றைப் பரிசாக வழங்க ஆசைப்பட்டார். மிகுந்த யோசனைக்குப் பின்னர், புத்தர் அதை ஏற்றுக் கொண்டார். அந்த வகையில் சங்கத்திற்காகச் சேர்த்த முதல் சொத்து, ராஜகிரிலில் கிடைத்த வேணுவனம்தான்.

அங்குதான், குதிரை வண்டியில் நானும் போனேன். நிசிரேன் புத்த பிரிவைச் சேர்ந்த கோவில் இருந்தது. புத்த மதத்தின் முதல் மாநாடு, மகா காஸ்யபரால் ராஜ்கிரின் சப்தாபர்ணி குகை ஒன்றில் கூட்டப்பட்டது. யுவான்சுவாங் தனது பயணக் கட்டுரைகளில் ராஜ கிருஹம் புதிய நகரம், பழைய நகரம் எனப் பிரிவுபட்டுள்ளதாகக் கூறுகிறார். பழைய நகரம் மலைகளால் சூழப்பட்டுள்ள பள்ளத்தாக்கில் கோட்டைகளுடன் உள்ளது. Cyclopean wall எனப்படும் புராதன கற்சுவர் பழைய நகரைச் சார்ந்தது.

நான் புத்தர்  கோவிலை விட்டு வெளியே வந்தவுடன் பிடித்த மழை விடவேயில்லை .

பொதுவாகச் சொன்னால் ராஜ்கிர் மிகவும் முக்கியமான இடம், குறைந்தது ஒரு நாளாவது வேண்டும். ஆனால், எனது நோக்கம், நாலந்தவைப் பார்ப்பதுதான். இங்கும் நல்ல மழைவேறு பெய்தது, இரவும் ஆகிவிட்டது. ஆனாலும் முக்கிய இடங்கள் சிலவற்றைப் பார்த்தேன். குறிப்பாக வேணு வனத்தைவிட்டு வெளியே வந்தவுடன், குதிரைவண்டி ஒரு தனியார் சமண அருங்காட்சியகம் சென்றது. உள்ளே சென்ற பின்னர்தான் தெரிந்தது, அங்கே புராதனப் பொருட்கள் ஏதுமில்லை என்று. சமண மதத்தைச் சேர்ந்த கதைகளைப் பொம்மைகளாக வைத்திருந்தனர். எனக்கு முதலில் சப்பென்று ஆகிவிட்டது. இதற்காகவா இந்த மழைக்குள் நுழைவுச் சீட்டு வாங்கி வந்தோம் என நினைத்தேன். ஆனால், பார்க்கப் பார்க்க பிரமிப்பாக இருந்தது. சமணர்கள் காசை அள்ளி வீசி இருப்பர் போலும், பிரமாண்ட அரண்மனைகளும் ஆட்களும், காடுகளும் காட்சிகளும் அசத்தி விட்டன.

ராஜ்கிர்2

நிச்சயம் குழந்தைகள் விரும்புவர், பெரியோர்களுக்கும் கண்களுக்கு விருந்து உண்டு. கொஞ்சம் Jainism பற்றிப் படித்து வந்தோம் என்றால் நன்கு புரிந்து ரசிக்கலாம். ஏனென்றால் ராஜ்கிர் சமணர்களும் போற்றும் இடம். இருபத்து நான்காவது தீர்த்தங்கரரான மஹாவீரர் ராஜ்கிர்ரிலும், நாளந்தாவிலும் பதினான்கு மழைக் காலங்களைக் கழித்துள்ளார். இருபதாவது தீர்த்தங்கரரான முனீசுவரதர் பிறந்தது ராஜ்கிரிலில்தான்.

மழையோடு நனைந்து கொண்டே சென்று நவ்லகா மந்திர் (Naulaka Mandir) எனப்படும் அவரது கோவிலுக்கும் சென்றேன். அங்குள்ள வெந்நீர் ஊற்றில் குளிக்க விரும்புகிறீர்களா எனக் கேட்டார் சந்தோஷ். ஏற்கனவே தானேவில் தங்கி இருந்த போது கணேஷ புரியிலும், வஜ்ரேஸ்வரியிலும் வெந்நீர் ஊற்றில் மாதம் ஒரு முறை குளித்தவன் என்பதால் வேண்டாம், வேறு இடங்களைப் பாப்போம் என்றேன். இருட்டி விட்டதால் ஒரு காளி கோவிலையும், பர்மாவைச் சேர்ந்த புத்தர் கோவில் ஒன்றையும் மட்டும் பார்த்து விட்டு விடுதி வந்து சேர்ந்தேன்.

உண்மையில் மழை, பயம் கொடுத்து விட்டது. இப்படி ஒரு தொடர் மழையை எதிர்பார்க்க வில்லை. ரயில் ஓடுமா என்றெல்லாம் யோசிக்க வைத்து விட்டது. அடுத்தநாள் நாளந்தா போக வேண்டும்.

( தொடரும் )

 

நிரஞ்சனா நதி தீரத்தில் – கயா

“கழுகுமலை” மா.சட்டநாதன், டெல்லி.

gaya1டெல்லியிலிருந்து கிளம்பிய மகாபோதி விரைவுவண்டி, என்ஜின் கோளாறு காரணமாக அலகாபாத் நிலையத்திலேயே இரண்டரை மணி நேரம் நின்றது. நல்லதுதான் என்று நினைத்துக் கொண்டேன். ஏனென்றால், வண்டி சரியான நேரத்திற்குச் சென்றால் அதிகாலை மூன்றரை மணிக்குக் கயா(Gaya) சென்றடையும். முக்கியமான நாள், பெரிய ஊர் என்றாலும் அந்த நேரத்தில் போய் நிற்பது ஒரு சள்ளை பிடித்த வேலை. ஆட்டோ ரேட் தாறுமாறாக இருக்கும். தங்கப் போற இடத்தில் ஆட்கள் கதவைத் திறக்க வேண்டும். முந்தைய பல ஊர்களின் பல அனுபவங்கள் கொடுத்த பாடம்!

காலை ஆறு முப்பதிற்கு கயா நிலையத்தை அடைந்தேன். இப்போது இந்தியாவின் முக்கியச் செய்தியாகிவிட்ட பிஹார் வெள்ளமும் மழையும், நான் வருவதற்கு நான்கு நாட்களுக்கு முன்பாகத்தான் ஆரம்பமாம். கயாவில் இறங்கும் போதே மழை!

மஹாளய அமாவாசை அன்று அப்பா, அம்மாவிற்குப் பித்ரு சிராத்தம் செய்வதற்காக வந்திருக்கிறேன். டெல்லியில் இருந்து முன்னரே நகரத்தார் சத்திரத்தில் பேசி விட்டேன். தனியாக வருபவர்களுக்கு அறை தருவது இல்லையே என்ற நிர்வாகியிடம், தங்கும் உத்தேசம் இல்லை, பிண்டதானம் கொடுத்தபின் கிளம்பி விடுவேன் என்றதும் சம்மதித்தார்.

ரயில் நிலையத்திலேயே ஏராளமான தமிழ் மக்கள், பெரும்பாலானோர் சத்திரத்திற்குத்தான் செல்கிறார்கள். ஓர் ஆட்டோவை அமர்த்தி, நாட்கோட்சத்திரம் என்றதும் புரிந்து கொண்டார். தர்ப்பணம் தரும் இடத்திற்கு அருகிலேயே உள்ளது. இடம் தெரியாத ஆட்டோ ஓட்டுனரிடம் சாந்த்சவுரா என்றும் சொல்லலாம், அந்த நாற்சந்தியில் இருந்து நடந்து செல்லும் தூரம்தான்.

gaya7ஆதிநாட்களில் இருந்தே பிண்டதானம் தரும் இடமாக கயா உள்ளது. கயாவில் மிகவும் விரிவான பிண்ட தானம் என்பது, மூன்று இடங்களிலாக ஒன்றன்பின் ஒன்றாகச் செய்யப்படும். முதலில் புத்தரின் காலத்தில் நிரஞ்சனா என அழைக்கப்பட்டு, இப்போது பால்குனி எனப்படும் நதியின் கரை, இரண்டாவதாக நதிக்கரையிலே உள்ள விஷ்ணுபாத கோவில், மூன்றாவதாக அங்கிருந்து சிறிது தொலைவில் உள்ள அக்ஷயவடம் என்றழைக்கப்படும் ஆலமரம் ஒன்றின் அடியில்.

இதற்கு ஒரு புராணக் கதை உண்டு. தசரதனுக்கு பிண்டதானம் செய்ய வேண்டி ராமன், சீதையுடன் கயா வந்தார். அந்த காலத்தில் இறந்தவர்கள் பிண்டதானம் வாங்க நேரில் வருவார்கள் என ஐதீகம். ராமன் குளிக்கச் சென்றபின் இறந்த தசரதன் வந்து விட்டார். மாவும் எள்ளும் கலந்த பிண்டம் தயாராக இல்லாததால் சீதையிடம், பால்குனிக்கரையின் மண்ணில் பிண்டம் தரும்படி கேட்டார். சீதையும் கொடுத்து விட்டாள்.

இதற்கு சாட்சிகளாக, பால்குனி நதி, அக்ஷயவட ஆலமரம், துளசிச் செடி, பசுமாடு மற்றும் கயாவைச் சேர்ந்த ஒரு பிராமணன் ஆகிய ஐவர். குளித்துவிட்டு வந்த ராமன், பிண்டம் தரும் போது அதை வாங்க தசரதன் வரவில்லை. சீதை நடந்ததைக் கூற, ராமனால் தன் தந்தை மண் பிண்டம் வாங்கிச் சென்றார் என்பதை நம்ப முடியவில்லை. சீதை சாட்சிகளை அழைக்கிறாள், அக்ஷயவடம் தவிர மீதம் நால்வரும், ராமனுக்காக மாறி விடுகிறார்கள்.

கோபமடைந்த சீதை சாபமிடுகின்றாள். அதன்படி பால்குனி மணல் நதியாக வற்றும், பசுவின் பின் பக்கமே வழிபாட்டுக்குரியது, கயாவில் துளசி வளராது, கயா பிராமணர்களுக்கு எவ்வளவு கொடுத்தாலும் நிறையாது. அக்ஷ்யவடம் உண்மை சொன்னதால், அதன் அடியிலும் பிண்ட தானம் செய்யக்கூடிய தகுதியை அடையும்.

என்னுடன் ரயிலில் வந்தவர்களும் பிண்டதானம் செய்யத்தான் வருகிறார்கள். என்னுடய பக்கத்து இருக்கைக்காரர், அதிக பட்சம் ஏழாயிரம் ரூபாய்க்குள் முடிந்துவிடும் என மற்றவர்களுக்கு சொல்லிக் கொண்டு வந்தார். அந்தக் காலம் போல, இப்போதும் இறந்தவர்கள் மண்ணில் வந்து பிண்டம் வாங்குவார்கள் என்றால், “ஏழாயிரம் ரூவாயா? எந்திரிச்சி வீட்டுக்குப் போல” என்றிருப்பார் அப்பா.gaya2நான் மேலே சொன்ன மூன்று இடங்களிலும் செய்தால்தான் இவ்வளவு செலவு. நகரத்தார் சத்திரமே பிண்டம் தர பிராமணர்களை ஏற்பாடு செய்துதரும். அவர்கள் சத்திரத்திலேயே 250 ரூபாய் கட்டிவிட வேண்டும். அவர்கள் சொல்லும் இடத்திற்குப் போய்விட வேண்டும். அங்கு போய் பிராமணருக்குத் தர வேண்டிய தட்சணை உங்கள் விருப்பம்.

பிண்ட தானத்திற்குத் தந்தது போக, மதிய உணவிற்கும் மகமைக்கும் சேர்த்து 110 ரூபாய் கட்டிவிட்டு, அவர் அருகிலேயே பையை வைத்துவிட்டு , குளித்து தயாராகிக் கிளம்பினேன். பித்ருபக்ஷஅமாவாசை இந்தியா முழுக்க அனுசரிக்கப்படும் முக்கிய நாள். நம்ம ஊரில் புரட்டாசி அமாவாசை என அனைவரும் அறிவர். கூட்டம் அம்மியது. லக்ஷக்கணக்கில் மக்கள் வந்த வண்ணம் இருந்தார்கள். அரசாங்கம் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தது. போகின்ற வழியிலே விஷ்ணுபாத மந்திர், விஷ்ணுவின் பாதம் பதிந்த பாறை ஒன்றுதான் மூலவர். வடஇந்திய வழக்கப்படி அனைவரும் தொட்டு வணங்கலாம்.gaya4நான் உள்ளே போக முடியாத அளவு கூட்டம் இருக்குமென நினைத்தேன். அப்படி எல்லாம் இல்லை, இரண்டு நிமிடங்களில் தரிசனம் முடித்துவிட்டு வெளியே வந்து விட்டேன். மிகவும் சிறிய கோவில், கோவிலைச் சுற்றி பிண்டம் தருபவர்கள் அமர்ந்திருந்தனர். வெளியே வந்து சத்திரத்தில் சொன்ன இடத்தை நோக்கி நகர ஆரம்பித்தேன். மழை தூறிக் கொண்டே இருந்தது, திடீரென வேகம் பெற்றது. மணல்நதி என்றே அழைக்கப்படும் பால்குனி நதியின், குறிப்பிட்ட தூரத்திற்குமேல் போக வேண்டாம் என காவல் துறையின் அறிவிப்புகள் கேட்ட வண்ணம் இருந்தன.

கடைசியாக இருந்த சிறிய கல் மண்டபம் ஒன்றில் தமிழர்கள் தென்பட்டனர். செட்டியார் சத்திரமா என உடைந்த தமிழில் கேட்ட பண்டாவிடம் ஆமென்றதும், நாராயணன் பண்டிதரிடம் அனுப்பி வைத்தார். சத்திரத்தில் எனக்கு கொடுத்த துண்டு சீட்டில் எழுதப்பட்ட இரண்டு பெயர்களில் நாராயணனும் ஒன்று.

நாராயணன் புரியும் வகையில் தமிழ் பேசினார். இதற்கு முன்பு பிண்டதானம் காசியில் கொடுத்திருக்கிறேன். இங்கு வித்தியாசம் உண்டு. முதலில் கயாவில் பச்சரிசிமாவு – பிண்டம் இல்லை, ஒரு மாதிரி தானியங்களின் மாவை உமியுடன் தையல் இலையில் தருகின்றனர். தையல் இலையிலேயே எள், வாழைப் பழம், சிறிது அரிசி, கொஞ்சம் மஞ்சள் பொடியும் வைப்பர். மஞ்சள் இறந்த சுமங்கலிகளின் பிண்டம் மேல் தூவுவதற்கு. பொதுவாக 21 பிண்ட உருண்டைகள் பிடிப்பதுதான் வழக்கம். கயாவில் 32 பிண்டங்கள் பிடிக்கச் சொன்னார் பண்டிதர்.gaya5தர்ப்பைப் புல்லில் செய்த மோதிரத்தை அணிந்து, விநாயகரில் தொடங்கி, ஏழு நதிகள், ஏழுபுண்ய க்ஷேத்ரங்களையும் வணங்கிய பின் சங்கல்பம். பின்னர் இறந்தவர்களில் – அப்பாவில் தொடங்கி, அம்மா, மாமனார், அவர்களின் ஏழு தலைமுறைகளின் பெயர்களையும் சொல்லி பண்டிதர் சொன்ன மந்திரங்களைப் பின்னாலேயே சொல்ல வேண்டும். உறவுகளில் உயிரோடு இருப்பவர்களைத் தவிர்த்து விட வேண்டும். இறந்தவர்களின் பெயர் தெரியாவிட்டால், ஆணாக இருந்தால் ‘பிரம்மாவிஷ்ணு’ என்றும், பெண்ணாக இருந்தால் ‘லட்சுமிகௌரி’ என்றும் சொல்லச் சொன்னார்.

இந்து பாரம்பரியங்களில் தாத்தா பெயரைப் பேரனுக்கு வைத்த காரணங்களில் ஒன்று – திதி தரும் போது மறந்துவிடக் கூடாது. மூன்று தலைமுறைகளில் பெயர் திரும்ப வந்துவிடும். உறுதியாகத் தெரியாது, ஊரில் பெரியவர்கள் சொல்லிக் கேட்டுள்ளேன்.அப்பா, அம்மா, மாமனார்வழி ஏழு தலைமுறைக்குதான் 21 பிண்டங்கள். ஆனால் கயாவில் இறந்துபோன நண்பர்கள், தூரத்து சொந்தங்கள், ஆசிரியர் , குரு என அனைவருக்கும் பிண்டம் வைக்கச் சொல்வதால்தான் 32 என்ற கணக்கு. இதில் கடைசி 32 வதுபிண்டம், தர்மபிண்டம் எனப்படும். வீட்டில் இறந்து போன பசுமாடு, நாய் , பூனை போன்றவற்றுக்கு 32 ஆவது பிண்டத்தை பிண்டதானம் செய்வதுடன் சிரார்த்தம் நிறைவடையும். பின்னர் பிண்டங்களை பால்குனியில், தர்ப்பை மோதிரத்தோடு விட்டுவிட வேண்டும். எந்த ஊரில் பிண்டங்களைக் கரைத்தாலும், “இதம்பிண்டம் கயார் – பித்தோ அஸ்து” (கயா நதியில் இந்த பிண்டங்களைக் கரைக்கிறேன்) என்று சொல்லி விடுவோர் உளர்.

gaya6பிண்டதானம், தட்சணைக்குப் பின்னர் சத்திரத்திற்கு வந்தேன். கடும் போக்குவரத்து நெரிசல். மதிய உணவிற்கு இன்னும் நேரம் உள்ளது. அதுவரை சத்திரத்தில் உள்ளவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். மதிய உணவிற்குப் பின், கயாவின் மூன்று பேருந்து நிறுத்தங்களில் ஒன்றான மான்பூரில் இருந்து, பண்டைய மகதசாம் ராஜ்யத்தின் தலைநகரமான ராஜகிருகம் எனப்பட்ட, இப்போதைய ராஜ்கிர் செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்தேன்.

பதிவு 2 : ராஜ்கிர்

 

இருள் விலகட்டும்

அசின் சார், கழுகுமலை.

dsc018142-e1534588428234.jpg

“கிர்ர்ர்ரீச்”

துருப்பிடித்த இரும்புக் கதவு

திறக்கப்பட்டது.

 

அந்த மலையின் விலாப் பகுதியில் உள்ள

ஆயிரம் ஆண்டு பழமை சொல்லும்

சமணர் குகை அது.

 

தலை தட்டும் உயரம்தான்.

அண்ணார்ந்து பார்க்க முடியாது.

கண்ணெதிரே காய்த்துத் தொங்குகின்றன

கொத்துக் கொத்தாய் வெளவால்கள்.

அதன் எச்ச நெடியோ மூக்கைத் துளைக்கிறது.

 

சுழன்று பார்த்தால்

சுத்தப்படுத்தாத தரையில்

திட்டுத்திட்டாய் மண்.

படர்ந்து வளரும் பசலைச் செடியாய்

பாறை இடுக்கில் கறையான் புற்று.

 

அங்கிட்டும் இங்கிட்டுமாய்

பழைய வெளக்குமாரும் செருப்பும்.

கூடவே,

குறுக்கும் நெடுக்குமாய்

என்றோ பயன்படுத்திய

இரும்புப் பைப்புகளின் மிச்சம்.

 

இத்தனைக்கும் நடுவே

குகைக்குள் குகை நீள்கிறது.

 

மையிருட்டுப் பாதையில்

குனிந்து தவழ்ந்து சென்றால்

உள்ளே

பாதாளச் சிறை பரிதவிப்பு போல

சின்னஞ்சிறு விளக்கொளியில்

லிங்கமும் நந்தியும்!

 

திறந்து காட்டியவர் சொன்னார்:

“செருப்ப வெளிய கழட்டிடுங்க

சித்தர் வாழ்ந்த இடம்

வேணுங்கிறத மனசுல நெனச்சுக்குங்க

நடக்கும்” என்றார்.

 

விபூதித் தட்டில்

காசு விழும் சத்தம் கேட்டு

வாய் பிளந்தது குகை!

*

 

உணவு : கருவிகள்

புலவர் அ.மரியதாஸ், செட்டிகுறிச்சி.

கல் தொட்டி

(புதிதாகப் படிப்பவர்கள் “முதல் பதிவில்” இருந்து படிக்கவும்.)

முந்தைய பதிவு : மி.மு., மி.பி : உணவு

பதிவு :15

ம் தமிழக மக்கள் மின்சாரத்திற்கு முந்திய காலத்தில் உணவு தயாரிப்பதற்காகப் பயன்படுத்திய கருவிகள் பற்பல. அவை, அவர்கள் வாழிடம் மற்றும் சூழலுக்கேற்ப வெவ்வேறு விதமாகவும் இருந்தன. இருப்பினும், அவற்றில் பொதுத்தன்மையோடு விளங்கிய சிலவற்றை மட்டும் இங்கு குறிப்பிடுகிறேன்.

1. அம்மி:

அம்மி

உணவின் ஓர் அங்கமாக விளங்குவது குழம்பு, கூட்டுக்கறி ஆகியவையாகும். இவற்றைத் தயாரிக்கத் தேவைப்படும் மசால், தேங்காய் போன்றவற்றை அரைக்கப் பன்நெடுங்காலமாகப் பயன்படுவது கல்லில் செதுக்கப்பட்ட அம்மியும் குழவியுமாகும்.

 2. ஆட்டுரல்:

ஆட்டுரல்

அன்றைய நாட்களில் விழாக்கால சிறப்பு உணவாகத் தோசை, இட்லி, வடை, பனியாரம் போன்றவற்றைச் செய்ய ஊறவைத்த தானியம், பருப்பு வகைகளை மாவாக அரைக்க வேண்டியதிருந்தது. இதற்கு கல்லில் செதுக்கப்பட்ட ஆட்டுரலையே பயன்படுத்தினர். மின்சாரம் வந்தபின் நாகரீக வளர்ச்சியில் இவ்வேலைகளைச் செய்ய மிக்ஸி, கிரைண்டர் வாங்கிப் பயன்படுத்தத் தொடங்கினர். தமிழக அரசு இவற்றை இலவசமாகக் கொடுத்ததால் இன்று எல்லா வீடுகளிலும் மிக்ஸி, கிரைண்டர் இருக்கின்றன.

எனவே அம்மி, ஆட்டுரல் இரண்டும் இன்று பயனற்ற பொருட்களாக மாறிவிட்டன. இருப்பினும் நம் கிராமங்களில் மட்டும் இன்றும் ஒரு சிலர் இவற்றைப் பயன்படுத்தி வருவதைக் காண முடிகிறது.

3. குத்துரல்:

குத்துரல்

குத்துரல் என்பது மேலும் கீழும் சமஅளவு வட்ட வடிவமுடையதாகவும், நடுப்பகுதி உடுக்குப்போன்று சிறுத்தும் சுமார் ஒரு முள உயரத்திற்கு கல்லில் செதுக்கப்பட்ட நீள் உருளை வடிவமுடையது. இதன் மேல் வட்டப் பகுதியில் மையத்தில் சுமார் ஒரு சாண் அளவு ஆழத்தில் குழியிருக்கும். இக்குழியின் சுற்றளவு கீழே செல்லச் செல்ல சற்று குறைந்து செல்லும். இந்தக் குழியில்தான் தானியங்களை இட்டு உமிநீக்குதல், நொறுக்குதல், மாவாக்குதல் போன்ற வேலைகளை உலக்கையால் குத்திச் செய்வார்கள். உலக்கை வைத்து இதில் குத்துவதால் இது குத்துரல் என்று காரணப்பெயர் பெற்றது. மக்கள் பெரும்பாலும் உரல் என்றே சொல்வார்கள்.

இது பல அளவுகளில் உண்டு. இன்று எல்லாப் பொருட்களும் கடைகளில் சமைக்கத்தக்க நிலையில் கிடைப்பதால் இது பயனற்ற பொருளாகிவிட்டது. கிராமங்களில் கோவில் கொடை விழா சமயங்களில் மாவிளக்குப் போடுவதற்கு மாவு இடிக்க சிலர் அரிதாகப் பயன்படுத்துகின்றனர். இந்த உரல் பற்றிய செய்தி புறநானூற்றில் பாடல் 333ல் அடி 12ல் “விதைத்தினை உரல் வாய்ப் பெய்து” என வந்துள்ளது.

4. உலக்கை:

உலக்கை

உலக்கை என்பது உரலில் இடப்பட்ட தானியங்களைக் குத்துவதற்குப் பயன்படுவது. இது கனம் மிகுந்த கோங்கு, நாங்கிள், தோதகத்தி (ஈட்டி, Block Wood) போன்ற மரங்களில் கணுக்கள் இல்லாத நேர் கம்புகளின் பட்டையை நீக்கி நன்கு வழுவழுப்பாக இளைத்து செய்யப்படுவது. தேக்குப் போன்ற கனம் குறைந்த மரங்களில் செய்வது சிறப்பாக இருக்காது. இந்த உலக்கையில் ஒரு முனையில் சிறு கிண்ணத்தைக் கவிழ்த்து வைத்தது போன்று இரும்பால் பூண் கட்டியிருப்பார்கள். இப்பகுதியை குப்பிப்பூண் என்றும், குழிப்பூண் என்றும் சொல்வார்கள்.

குப்பிப்பூண் (அ) குழிப்பூண்

இப்பகுதியைக் கொண்டுதான் தானியங்களின் உமியை (மேல்தோடு) குத்தி நீக்குவார்கள். இந்த உலக்கையின் மறுபுறம் அதன் மேல்மட்ட அளவிற்கு மட்டமாக இருப்பதால் பூண் கட்டியிருப்பார்கள். இப்பகுதி மட்டப்பூண் எனப்படும். இப்பகுதியைக் கொண்டுதான் தானியங்களை சமைக்கத் தகுந்த நிலைக்கு மாவும் நொறுங்கலுமாக ஆகும்படி இடிப்பார்கள்.

மட்டப்பூண்

சில உலக்கைகளில் மட்டப்பூண் ஒருபுறம் வைத்து அதன் மறுபுறத்தில் பந்தை பாதி அறுத்து கவிழ்த்து வைத்தது போல் செதுக்கி இரும்பால் வளையல் போன்று பூண் கட்டியிருப்பார்கள். இந்தப் பகுதியைக் கழுத்துப் பகுதி என்பார்கள். மாவு இடிக்க இந்த கழுத்துப் பகுதியைத்தான் பயன்படுத்துவார்கள். உலக்கை சுமார் கைப்பிடி அளவு உருட்டு கொண்டதாகவும், சுமார் 3 அடி முதல் 5 அடிக்கு மிகாமல் பல அளவுகளில் செய்யப்படுவதுண்டு. புறநானூற்றில் 399வது பாடலில் அடி இரண்டில் “தொடிமாண் உலக்கைப் பரூஉக்குற் றரிசி” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதில், தொடிமாண் உலக்கை என்பது பூண்கட்டிய சிறந்த உலக்கை என்று பொருள்படும்.

5. உரைப்பெட்டி:

u8

உரலில் இடப்பட்ட தானியங்களை உலக்கையால் குத்தும்போது, அவை வெளியே சிந்திச் சிதறாமல் இருக்கும்படி பாதுகாப்பைத் தருவது உரைப் பெட்டியாகும். கத்திக்கு உரை பாதுகாப்பைத் தருவதுபோல், இது உரலில் இடப்பட்ட தானியங்களுக்குப் பாதுகாப்பைத் தருவதால் உரைப்பெட்டி என்ற காரணப்பெயர் பெற்றது. இதன் கீழ்ப்பகுதி உரலில் வைக்கும் அளவிற்கும், மேல்பகுதி விரிந்து இருபுறமும் திறப்புள்ளதாக, ஓரளவிற்கு ஒலிப்பெருக்கி குழாய் வடிவில் தகரத்தில் செய்யப்பட்டிருக்கும். இதைக் கல்லில் செதுக்கி வைத்திருப்பதையும் அரிதாகப் பார்த்திருக்கிறேன்.

6. குந்தாணி:

குந்தாணி என்பது மேலே சொன்ன உரைப்பெட்டி போன்று பெரிய அளவில் தகரத்தில் செய்யப்பட்டது. நெல் மணிகளை அரிசியாக்க அதிகமாக இட்டுக் குத்த வேண்டியதிருப்பதால் உரலில் இட்டுக் குத்த முடியாது. ஆகவே, தரையில் சுமார் 1 ½  அடி நீள, அகலத்திற்கு சதுரக் கல் பதித்து, அதில் இக்குந்தாணியை வைத்து நடுவில் நெல் மணிகளைக் கொட்டி, அதைக் குத்தி அரிசி எடுப்பார்கள். நான் சிறுவனாய் இருந்த போது எங்கள் வீட்டுத் தரையில் ஓரிடத்தில் இது போன்ற கல் பதிக்கப்பட்டிருந்தது. இந்தக் கல்லின் மீது குந்தாணியை வைத்து என் தாய் நெல்லைக் குத்தி அரிசி எடுப்பதை நான் அடிக்கடி பார்த்திருக்கிறேன்.

7. சுளவு:

சுளவு

சுளவு என்பது பனையோலை, பனை நார், பனைமட்டை இவற்றைக்கொண்டு செய்யப்படுவது. இதைச் சுளவு என்றும் சொளவு என்றும் முறம் என்றும் சொல்வார்கள். இதில் சுளவு என்பது புறநானூற்றில் பாடல் 249, அடி – 12ல், “நீறாடு சுளிகின் சீறிடம் நீக்கி” என்றும்; பாடல் 321ல் அடி 3ல், “சுளகிடை உணங்கல் செவ்வி கொண்டு” என்றும் சொல்லப்பட்டுள்ளது. முறம் என்பது புறநானூறு பாடல் 339ல் அடி – 13ல், “முறஞ்செவி யானை வேந்தர்” என்று சொல்லப்பட்டுள்ளது. இதில் முறம் என்பது யானையின் செவிக்கு (காதிற்கு) உவமையாகக் கூறப்பட்டுள்ளது.

குத்துரல் & சுளவு

இந்தச் சுளவு என்பதை இருகைகளாலும் பிடித்து அசைக்கும் மாறுபாட்டால், 1.பிடைத்தல், 2. நாவுதல், 3. கொளித்தல், 4.தெள்ளுதல் என்ற நான்கு முக்கியச் செயல்களைச் செய்வார்கள். அதாவது, 1.பிடைத்தல் என்ற செயலினால் தானியங்கள், பயறுகள் எள் போன்றவற்றில் கலந்துள்ள தூசி, தொலி போன்றவற்றை நீக்குவார்கள். 2. நாவுதல் என்ற செயலினால் அவற்றில் கலந்துள்ள கற்களை நீக்குவார்கள். 3.கொளித்தல் என்ற செயலினால் எள் போன்ற சிறு பொருள்களில் கலந்துள்ள குறு (சிறு) மணல்களை நீக்குவார்கள், 4.தெள்ளுதல் என்ற அசைவினால் உரலில் இட்டுக் குத்தி எடுத்த அரிசி போன்றவற்றில் கலந்துள்ள தவிடு என்பதைப் பிரித்து எடுப்பார்கள். இவ்வாறு சுளவு என்ற ஒன்றை வைத்துக் கொண்டு, அதை அசைக்கும் மாறுபாட்டால் பல செயல்களைச் செய்வது அன்றையப் பெண்களுக்கு மிகச் சாதாரணமான செயலாகும். இன்றும் கிராமங்களில் இவற்றைச் செய்யக்கூடியவர்கள் இருக்கின்றார்கள்.

8. திருகல் (திருவை):

திருகல் (திருவை):

திருகு என்றால் முறுக்குதல், சுற்றுதல், சுழற்றுதல் என்று பொருள்படும். ஆகவே சுற்றக்கூடிய அமைப்பில் உள்ள கல் “திருகல்” ஆகும். இந்தத் திருகல்லை, பேச்சு வழக்கில் “திருவை” என்றும்; “திருவல்” என்றும் சொல்வார்கள். இது கீழும் மேலுமாக இருவட்ட வடிவக் கற்களால் ஆனது. கீழேயுள்ள கல்லின் மீது மேலேயுள்ள கல் விலகாமல் சுற்றும்படி நடுவில் முளைக்குச்சி என்பதை அடித்து (பதித்து) வைத்திருப்பார்கள். மேலேயுள்ள கல்லின் நடுவில் இம்முளைக்குச்சி சென்று சுலபமாகச் சுற்றும்படி துளை இருக்கும். இந்தத் துளையின் மேல்பகுதியில் தானியங்கள், பயறுகள் போன்றவற்றைப் போடுவதற்காகச் சற்று அகலமாக இருக்கும். இந்த மேல்கல்லின் வெளிவட்டப் பகுதியின் ஓர் இடத்தில் சிறு புடைப்பாக அரைவட்ட வளைவு செய்து அதில் ஓர் குச்சி அடித்து வைத்திருப்பார்கள். இக்குச்சியைப் பிடித்துத்தான் திருகல்லை இழுத்து சுற்ற வேண்டும். இதில் மாவாகத் திரிக்க வேண்டிய தானியத்தைப் போட்டு சுற்ற அத்தானியம்  மாவாகக் கிடைக்கும். எங்கள் வீட்டில் கருங்கல்லில் செய்யப்பட்ட பெரிய திருகல் இருந்தது.

என் அம்மா கீழே துணி விரித்து அதில் அத்திருகல்லை வைத்து கேப்பை (கேழ்வரகு)யை போட்டு திரிக்கும் போது சுற்றி விழும் கேப்பைமாவை ஓர் ஓலையால் அள்ளித் அள்ளித் தின்றது இப்போதும் நினைவில் இருக்கிறது. இத்திருகல்லில் இரண்டுவகை உண்டு. அதாவது கனம் அதிகமாகவும், பெரிய அளவிலும் உள்ளது மாவு திரிக்கப் பயன்படும். மற்றொன்று உளுந்து, பாசிப்பயறு, தட்டாம்பயறு போன்ற பயறு வகைகளை இரண்டாக உடைத்து, பருப்பு எடுக்கக் கனம் குறைந்த சிறிய அளவிலான திருகல்லும் உண்டு. மாவாகத் திரிக்கும் பெரிய திருகல் இன்று முற்றிலும் பழக்கத்தில் இல்லை. சிறிய திருகல்லைக் கிராமங்களில் பயறு வகைகளை உடைக்க ஒருசிலர் இன்றும் பயன்படுத்துகின்றனர்.

9. துடுப்பு:

துடுப்பு

இன்று கிரிக்கட் விளையாடப் பயன்படுத்தும் மட்டை போன்று சிறிய அளவில் பனைமட்டையால் செதுக்கப்பட்டது “துடுப்பு” என்பதாகும். அன்றைய உணவுகளைத் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட பொருள்களில் இதுவும் ஒன்றாகும். எவ்வாறெனில் கம்மஞ்சோறு, சோளச்சோறு, கேப்பைக்கழி போன்ற உணவுகள் சமைக்கப்படும் போது அவற்றை மீண்டும் மீண்டும் கிண்டி விட்டு வேகவைக்க வேண்டும். அவ்வாறு கிண்டி விடுவதற்கு இத்துடுப்பே பயன்பட்டது. புறநானூற்றில் பாடல் 328 ல் அடி 10, 11ல், “அரிசியொடு நெய்பெய்து அட்டுத் துடுப்பொடு சிவனிய களிக்கொள் வெண்சோறு” என்றும்; பாடல் 372ல் அடி 7ல், “:வன்னியர் துடுப்பின்” என்றும் துடுப்பு என்பது காணப்படுகிறது. இன்றும் தைப்பொங்கல் சமயங்களில் வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல் இடும்போது பலர் துடுப்பு வைத்தே கிண்டி பொங்கல் தயாரிக்கின்றனர்.

10. கவைக்கம்பு:

கவைக்கம்பு

இரண்டாகக் பிரிந்து (பிளவுபட்டு) இருப்பதை “கவை” எனச் சொல்வார்கள். பொதுவாக எல்லா முட்களும் இரண்டிரண்டாக மாட்டின் இரு கொம்புகள், போன்று பிரிந்தே இருக்கும். ஆகவேதான், புறநானூற்றில் பாடல் 322ல் அடி 2 ல், “கவைமுள் கள்ளில் பொரி அரைப் பொருந்திய” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு இரண்டாகப் பிரிந்து ஆங்கில எழுத்து Y போன்றுள்ள கம்பை கவைக்கம்பு என்பார்கள். மூதுரை என்ற நூலில் பாடல் 13ல், “கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்” என வந்துள்ளது. இவ்வாறுள்ள கவைக்கம்பு அன்று கேப்பைக் கழியைத் துடுப்பு வைத்துக் கிண்டும்போது பானை சுற்றாமலும் அசையாமலும் இருக்கும்படி பானையைப் பிடித்துக் கொள்ள இக்கவைக் கம்பு பயன்படுத்தப்பட்டது.

11. புளித்த தண்ணீர்:

புளித்த தண்ணீர் என்பது அன்றை மக்கள் தங்களின் உணவுகளைத் தயாரிக்கப் பயன்படுத்திய நீர். இது புளிப்புத் தன்மை கொண்டது. வடித்த சோற்று நீருடன் (வடிநீர்) தண்ணீரும் உப்பும் சேர்ந்து வைத்தாலோ; அல்லது வீட்டிலுள்ள ஏதாவது சோறு சிறிது எடுத்து அத்துடன் தண்ணீரும் உப்பும் சேர்த்து வைத்தாலோ மறுநாளில் புளிப்புத் தண்ணீராக மாறி நமக்குக் கிடைக்கும். இதைப் புளித்த தண்ணீர், புளிச்ச தண்ணீ, புளிச்சாணி, நீராகாரம், நீஸ்தண்ணி, காடித்தண்ணி (காடி என்றால் புளிப்பு என்று பொருள்) என்று பல பெயர்களில் சொல்வார்கள். அன்று எல்லோர் வீடுகளிலும் இத்தண்ணீர் ஒரு பெரிய பானை நிறைய எப்போதும் இருக்கும். இதன் புளிப்புத்தன்மை அதிகமாகி விட்டால் பானையிலிருந்து சிறிது எடுத்துவிட்டு பச்சைத் தண்ணீர் ஊற்றி புளிப்பைக் குறைப்பார்கள். இல்லையேல், முற்றிலும் மாற்றி புதிதாகத் தயாரித்துக் கொள்வார்கள்.

புளித்த நீர் பானை

சோறு சமைக்க உலை வைக்கும் போது சோறின் வகையைப் பொருத்து இத்தண்ணீரைச் சேர்ந்து உலை வைப்பார்கள். இதை உலை நீர் என்பார்கள். இந்த புளித்தநீர் என்ற காடிநீர் பற்றி புறநானூற்றுப் பாடல் 399ல் அடி 3ல், “காடி வெள்ளுலைக் கொளீஇ” என்று வந்துள்ளது. இன்று காலையில் எழுந்ததும் சிறுவர் முதல் பெரியவர் வரை காப்பி, டீ, குடிக்கும் பழக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர். ஆனால், காப்பி, டீ என்றால் என்னவென்று தெரியாமலும் பழக்கத்திற்கு வராமலும் இருந்த அக்காலத்தில் வாழ்ந்த மக்கள் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் இந்தப் புளித்த தண்ணீரை உடல் நலத்திற்கு நல்லது என்று சொல்லிக் குடித்து வந்தனர். இன்று அன்றைய உணவுகளுமில்லை; புளித்த தண்ணீர்ப் பானையும் இல்லை. “கஞ்சி போயி காப்பி வந்த காலமடி காலம்” என்ற திரைப் பாடலின் காலமாக இன்று மாறிவிட்டது.

12. பாத்திரங்கள்:

பொதுவாகப் பாத்திரங்களை இரு வகையாகப் பகுக்கலாம். ஒன்று, சமையல் செய்யத் தேவையான பாத்திரங்கள். மற்றொன்று தண்ணீர் எடுத்துவர, எடுத்து வந்த தண்ணீரை சேமித்து வைக்கத் தேவைப்படும் பாத்திரங்கள். இதில் தண்ணீர் எடுத்து வரவும்; அதை சேமித்து வைக்கவும் இன்றுள்ள மக்கள் பிளாஸ்டிக் குடம், பிளாஸ்டிக் பேரல் ஆகியவற்றை பயன்படுத்துகின்றனர். அடுப்பில் வைத்து சமைக்க அலுமினியம், எவர்சில்வர் இவற்றாலான பாத்திரங்களைப் பயன்படுத்துகின்றனர். நான் சிறுவனாயிருந்த அக்காலத்தில் அலுமினியம், எவர்சில்வர், பிளாஸ்டிக் என்று எதுவும் வராத காலம். அன்று சாதாரண மக்களின் வீடுகளில் தண்ணீர் எடுத்துவர மண் குடங்களையே பயன்படுத்தினர். எடுத்து வந்த தண்ணீரை சேமித்து வைக்கப் பானை, தொட்டி என்று அனைத்தும் மண்ணால் செய்யப்பட்டதாகவே இருந்தன. சிலர் கல்தொட்டிகளையும் பயன்படுத்தினர். இதுபோக சமைக்கப் பயன்படும் பானைசட்டி, தோசை சுட தோசைக்கல், குழிப்பனியாரம் சுட பனியாரச்சட்டி, காட்டிற்கு கஞ்சி கொண்டு சென்று சாப்பிட கஞ்சிக்கலயம் என்று அனைத்தும் மண்ணால் செய்யப்பட்டவையாகவே இருந்தன. சோறு, குழம்பு இவற்றை எடுக்கத் தேங்காய் சிரட்டையில் செய்த அகப்பைகளே பயன்படுத்தப்பட்டன.

பாத்திரங்கள்

பொருளாதார வசதி உள்ள வீடுகளில் மட்டும் சில உலோகப் பாத்திரங்கள் உபயோகத்தில் இருந்தன. குறிப்பாகப் பித்தளையில் செய்த குடம், பானை, குத்துச்சட்டி, அண்டா (கொப்பரை), சிறுசட்டி, செம்பு போன்ற பாத்திரங்களும், வெங்கலத்தால் செய்த பானை, கும்பா, வட்டில் போன்றவற்றையும், செம்புப் பானையும் (Copper pot) பயன்படுத்தப்பட்டன. பித்தளைப் பாத்திரங்களில் புளித்த உணவுப் பொருள்களை வைத்தால் அவை காய்த்துப் போய்விடும். அதாவது, உண்ணத்தகாததாக மாறிவிடும் என்பதால் அப்பாத்திரங்களின் உட்புறம் ஈயம் பூசிப் பயன்படுத்தினர். ஆகவே, அன்று ஊர் ஊராகச் சென்று பித்தளைப் பாத்திரங்களுக்கு ஈயம் பூசித் தருதல் என்ற தொழிலைச் செய்து பிழைப்பவர்களும் இருந்தனர். இன்று இப்பாத்திரங்கள் அன்று போல் உபயோகத்தில் இல்லை. ஆகவே, ஈயம் பூசுதல் என்ற தொழிலைச் செய்து பிழைப்போரும் இல்லை. காலம் செல்லச் செல்ல முதலில் அலுமினியப் பாத்திரங்களும், அதன்பின் எவர்சில்வர் பாத்திரங்களும், கடைசியாக பிளாஸ்டிக் பாத்திரங்களும் வந்தன. இன்று பித்தளை, வெங்கலம், செம்பு இவற்றாலான பாத்திரங்களை சிலர் கௌரவத்திற்காக வீட்டில் வைத்துள்ளனர். மேலும், பெண்களின் திருமணத்தின்போது இப்பாத்திரங்களை சீதனப் பொருளாகக் கொடுப்பது இன்றும் வழக்கத்தில் இருக்கிறது.

மி.மு.,மி.பி.,வளரும் …

 

மி.மு., மி.பி : உணவு

புலவர் அ.மரியதாஸ், செட்டிகுறிச்சி.

உணவு

(புதிதாகப் படிப்பவர்கள் “முதல் பதிவில்” இருந்து படிக்கவும்.)

முந்தைய பதிவு : நோயும் மருந்தும் – 5 ( பேய்கள்)

பதிவு :14

லகிலுள்ள உயிரினங்கள் அனைத்தும் உணவை உண்டே உயிர் வாழ்கின்றன. அவ்வுணவைத் தம் தேவைக்குத் தாமே தயாரித்தும், பிற உயிர்கள் வாழ உணவாகவும் ஆகுப மரம், செடி, கொடி போன்ற தாவரங்கள். இடம் விட்டு இடம் நகரும் உயிரினங்கள் இத்தாவரங்களை நேரிடையாக உண்டோ, அல்லது இத்தாவரங்களை உணவாகக் கொண்டு வாழும் உயிரினங்களை உண்டோ உயிர் வாழ்கின்றன.

இந்த உணவு முறையானது ஒவ்வோர் உயிரினத்திற்கும் மாறுபட்டு இருப்பதால்தான் எல்லா உயிரினங்களும் உணவு பெற்று வாழ்கின்றன. இவ்வாறு வாழும் உயிரினங்களில் மனிதனும் ஒருவன் ஆவான். மனிதனின் உடல், உணவு இவற்றிற்கும் உலகப் பொருள் நிலைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. எவ்வாறெனில், உலகப் பொருள்கள் எல்லாம் திட, திரவ, காற்று என்ற மூன்று நிலைகளிலே உள்ளன. இம்மூன்றும் சேர்ந்தால்தான் உயிர்கள் தோன்றி வாழ முடியும். அதன்படி நமது சூரிய குடும்பத்தில் இம்மூன்றுமுள்ள பூமியில் மட்டுமே உயிர்கள் இருக்கிறன. இவை போல மனிதனும் இம்மூன்றின் சேர்க்கையாலான பொருளாகவே இருக்கிறான்.

இம்மூன்று பொருள்களும் எந்த அளவில் (விகிதத்தில்) பூமியில் உள்ளதோ ஏறக்குறைய அதே அளவில் தான் (விகிதத்தில் தான்) மனிதனின் உடலும் உணவும் அமைந்துள்ளன. எவ்வாறெனில் காற்று பூமியைச் சூழ்ந்து பலகிலோ மீட்டர் அளவில் மிக அதிகம் உள்ளது. மனிதனும் ஒரு நாளில் காற்றையே அதிகம் எடுத்துக் கொள்கிறான். அதாவது, சராசரி மனிதன் ஒரு நாளில் சுமார் 21,6௦௦ தடவை காற்றை உள்ளே இழுத்து வெளியே விடுகிறான் என்று கூறப்படுகிறது.

காற்றுக்கு அடுத்தாற்போல் பூமியின் மேற்பரப்பில் சுமார் 3/4  பங்கு 70.8% நீர் இருக்கிறது. இதுபோல் மனிதனின் உடலிலும் நீர், இரத்தம் தசையில் கலந்துள்ள நீர் என்று அவனது மொத்த எடையில் சுமார் 3/4  பங்கு நீர் தான் உள்ளது. அவனது உணவிலும் நீர் என்று பார்த்தால் குடிநீராகக் குடிப்பது மற்றும் குடிபானங்கள், காய் கனிகளில் கலந்துள்ள நீர், உணவில் கலந்துள்ள நீர் என்று பலவழிகளில் நீர் அதிகமாக (சுமார் 3/4  பங்கு) எடுத்துக் கொள்ளப்படுகிறது. காற்று, நீர் இவற்றிற்கு அடுத்தாற்போல் பூமியின் மேற்பரப்பில் நிலம் சுமார் 1/4  பங்கு 29.2%  உள்ளது. மனிதனின் உடலிலும் நன்கு உலர்ந்த (காய்ந்த) தசை எலும்பு என்று பார்த்தால் அதுவும் அவனது எடையில் சுமார் 1/4  பங்கு தான் இருக்கிறது. இது போன்று மனிதர் உண்ணும் திட உணவில் நீர்த்தன்மையை முற்றிலும் நீக்கிவிட்டுப் பார்த்தால் அதுவும் சுமார் 1/4  பங்கு தான் இருக்கும். இவ்வாறு, உலக முப்பொருள் நிலையும், மனிதரின் உடல், உணவு இவற்றின் முப்பொருள் நிலையும் ஏறக்குறைய ஒன்று போல் அமைந்திருப்பது இயற்கையின் விந்தையாகும்.

உயிர் வாழ அவசியமாகத் தேவைப்படுவதையெல்லாம் உணவு என்று சொல்லலாம். அதன்படி உயிர் வாழத் தேவைப்படும் காற்று, நீர், திட உணவு என்ற மூன்றுமே உணவாகும். இதில் காற்றை நாம் எம் முயற்சியும் சிந்தனையுமின்றி நம்மையறியாமலேயே பிறப்பு முதல் இறப்பு வரை இரவு பகலென எந்நேரமும் தொடர்ந்து எடுத்துக் கொள்வதால் காற்றை ஓர் உணவு என எண்ணுவதில்லை. ஆனால் இக்காற்று இல்லாமல் நம்மால் ஒரு நிமிடம் கூட உயிர் வாழ முடியாது. ஆகவேதான், விரதம் இருப்பவர்கள் கூட சாப்பிடாமல் இருக்கும் விரதம், நீர் அருந்தாமல் இருக்கும் விரதம் என்று இருக்கிறார்களேயொழிய காற்றை சுவாசிக்காமல் இருக்கும் விரதம் என்று யாருமே இருப்பதில்லை. அதனாலன்றோ “காயமே இது பொய்யடா வெறும் காற்றடைத்த பையடா” என்று கூறியுள்ளனர். மேலும் காற்றுக்கு என்று மட்டும் நம் உடம்பில் மூக்கு என்ற உறுப்பு அமைந்திருப்பது இதன் சிறப்பாகும்.

காற்று

காற்றுக்கு அடுத்தாற்போல் பூமியில் தாவரங்கள் உட்பட சகல உயிரினங்களுக்கும் அவசியமானவற்றுள் ஒன்றாக இருப்பது நீர். ஆகவே இதுவும் உணவு ஆகும். அதனால்தான் திருவள்ளுவரும் “நீரின்றி அமையாது உலகு” என்று கூறியுள்ளார். இதில் உலகு என்பது உலகிலுள்ள உயிரினங்களையே குறிக்கும். மனிதர்கள் காற்றை எம்முயற்சியுமின்றி எளிதில் பெறுவது போன்று நீரைப் பெறுவதில்லை. இதை சிறு முயற்சியாலேயே பெறுகின்றனர்.

காற்றுணவு, நீருணவு இவற்றையடுத்து திட உணவு என்பது முக்கியமானதாகும். இதை மனிதன் முயற்சியாலும் உழைப்பாலுமே பெறுகின்றான். மேலும், இதை உண்ணத்தக்க நிலைக்கு மாற்ற “சமைத்தல்” என்பதையும் செய்ய வேண்டியதுள்ளது. இத்திட உணவு வகைகளில் இயற்கையாகக் கிடைக்கும் நிலையில் அப்படியே உண்ணக் கூடிய காய்கனிகள், கிழங்குகள் போன்றவற்றிலும்; சமைத்து உண்ணும் உணவுகளிலும் பல சுவைகள் இருப்பதால் இதை மக்கள் மகிழ்ந்து உண்கின்றனர். சிறப்பு விருந்துகளிலும் சுவைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.

மனிதர்களுக்கு இத்திட உணவு ஒன்றே உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் தந்து உடலை வளர்த்து வேலை செய்ய சக்தியையும் தருகிறது. ஆகவே, மனிதர்கள் இத்திட உணவு ஒன்றையே உணவு என்று அழைக்கின்றனர். அதனால், நாமும் இங்கே “திட உணவு” என்பதை இனி “உணவு” என்று சொல்லிலேயே தொடருவோம். இந்த உணவுகளிலெல்லாம் பெரும்பாலும் நீர் கலந்துள்ளதால் நம் உடம்பில் நீர் அருந்துவதற்கும், உணவு உண்பதற்கும் ‘வாய்’ என்ற ஓர் உறுப்பு இரண்டிற்கும் பொதுவாய் அமைந்துள்ளது இயற்கையமைப்பின் நுட்பத்தை உணர்த்துவதாகும்.

உணவு என்பது உயிர்த்தன்மையுடைய பொருளாக இருக்க வேண்டும். அதாவது, ஓர் உயிருள்ள பொருள் ஒன்றுதான் மற்றோர் உயிர்க்கு உணவாக முடியும் என்பது இயற்கை விதி. அதன்படி உணவு என்பது ஓர் உயிருள்ள பொருளாகவோ, அதன் உறுப்பாகவோ, அல்லது அது உயிர் நீங்கி உலர்ந்த (காய்ந்த) நிலையிலுள்ள பொருளாகவோ இருக்க வேண்டும். இப்படியுள்ள பொருளையே மனிதகுலம் என்றும் உணவாக உட்கொண்டு உயிர் வாழ்ந்து வருகிறது.

கால ஓட்டத்தில் எல்லாவற்றிலும் மாற்றங்களைக் கண்டு வரும் மனிதகுலம் உணவிலும் மாற்றங்களைக் கண்டுள்ளது. அம்மாற்றத்தின் படி தற்போது நம் தமிழ் நாட்டு மக்கள் தங்களின் முக்கிய உணவாக இட்லி, தோசை தொடங்கி பலவகை சாதங்கள் கொண்ட சித்ரானங்கள், பாஸ்ட்ஃபுட் வகையறாக்கள், மேல் நாட்டு உணவு பதார்த்தங்கள் என்று பற்பல உணவுகளை உண்டு வருகின்றனர். அதனால், உணவு என்றால் இன்றுள்ள இவைதாம் உணவு என்று இன்றுள்ள இளம் தலைமுறையினர் நினைக்க வாய்ப்பிருக்கிறது.

ஆனால் ஒருவர் வாழும் நிலப்பகுதியில் விளையும் தாவரங்களே அவர்களுக்கு உணவாக அமைவது அவரது உடலுக்கு ஏற்றதாகவும், நோயின்றி நலம் பயப்பதாகவும் அமையும். அதன்படி நம் முன்னோர்கள் நம் பகுதியில் விளையக்கூடியவைகளுள் உண்ணத்தக்க தானியங்கள் எனக் கண்டவைகள் ஒன்பதாகும். இவற்றை நவதானியம் என்பார்கள். இந்த ஒன்பது தானியங்களை எளிதில் நினைவிற் கொள்ள நான் எழுதிய பாடல் ஒன்று உண்டு. அதானது,

                      “கம்பு நெல்லு காடைக்கண்ணி

                       வரகு திணை குதிரைவல்லி

                       சோளம் ராகி சாமி என்று

                       சோறு பொங்கிச் சாப்பிட்டு

                       சுகம் பட நாம் வாழ்ந்திட

                      சொன்ன தானியம் ஒன்பது”

என்பதாகும். இதனிற் கூறப்படும் ஒன்பது தானியங்களில் கம்பு என்பதை கம்மம்புல் என்றும், ராகி என்பதை கேப்பை அல்லது கேழ்வரகு என்றும், சாமி என்பதை சாமை என்றும் சொல்வார்கள்.

உணவு

உணவு என்னும் போது அதைத் “தயாரித்தல்” என்பது அதோடு தொடர்புடையதாக இருக்கிறது. இன்று உணவு தயாரித்தலுக்குத் தேவைப்படும் அரிசி, பருப்பு வகைகள், மாவுவகைகள், மசால் பொடி வகைகள் என்று எல்லாமே ரெடிமேடாக கடைகளில் கிடைக்கின்றன. பணம் இருந்தால் போதும்! எதையும் உடனடியாக வாங்கி சமைத்துக் கொள்ளலாம். மேலும், இன்று உணவு சமைக்க மிக்ஸி, கிரைண்டர், கேஸ்அடுப்பு, மின் அடுப்பு, மைக்ரோவேவ் ஓவன், பிரஷர்குக்கர் என்று எத்தனையோ நவீன கருவிகள் வந்து உணவு சமைத்தல் என்பதை மிகமிக எளிதாக்கி விட்டன. இவை போன்ற வசதிகள் எதுவும் வராத காலத்தில் வாழ்ந்த மக்கள், தங்கள் உணவிற்குத் தேவைப்படும் பொருள்களை, சமைக்கத் தகுந்த நிலைக்கு மாற்ற அதாவது உமி நீக்குதல், நொறுக்குதல், மாவாக்குதல் போன்றவற்றிற்கும்; பயறு வகைகளை இரண்டாக உடைத்து பருப்பு எடுப்பதற்கும் பல பொருட்களை (கருவிகளைப்) பயன்படுத்தினர். அவற்றுள் முக்கியமானவை. 1. அம்மி, 2. ஆட்டுரல், 3. குத்துரல், 4. உலக்கை, 5. உரைப்பெட்டி, 6. குந்தாணி, 7. சுளவு, 8. திருகல் (திருவை), 9. துடுப்பு, 10. கவைக்கம்பு, 11.புளித்ததண்ணீர், 12. பாத்திரங்கள் ஆகும்.

இவை பற்றிய குறிப்புகள் பழந்தமிழ் நூல்களான தொகை நூல்களில் காணப்படுவதால், இப்பொருட்களை உணவு தயாரித்தலில் நம்நாட்டு மக்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே பயன்படுத்தி வந்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது.

அடுத்த பதிவு 15 : உணவு : கருவிகள்

 

பேய்கள்

புலவர் அ.மரியதாஸ், செட்டிகுறிச்சி.

பேய்கள்

மி.மு.,மி.பி : நோயும் மருந்தும் – 5

“இது மருத்துவ முறையை அறிந்து கொள்வதற்காக அன்று; மின்சாரத்திற்கு முந்தைய காலத்தில் உள்ள மக்களின் நிலையைத் தெரிந்து கொள்வதற்காக மட்டுமே.”

(புதிதாகப் படிப்பவர்கள் “முதல் பதிவில்” இருந்து படிக்கவும்.)

முந்தைய பதிவு : நோயும் மருந்தும் – 4

பதிவு :13                                                                                              

மனிதர்களின் கண்களுக்குப் புலப்படாமல் அரூப நிலையில் உலகில் உலாவி வருவதாகக் கூறப்படுபவை “பேய்கள்” என்பவையாகும். இவற்றைப் பேய்கள், பிசாசுகள், முனிகள், பூதங்கள், வேதாளங்கள், சாத்தான்கள் எனப் பல வகைகளில் கூறுகிறார்கள். இவை பற்றிய செய்திகள் பழங்காலந்தொட்டு மதங்கள், புராணங்கள், இலக்கிய இதிகாசக் கதைகள், செவிவழிக் கதைகள் போன்றவை மூலமாக இச்சமுதாயத்திற்குத் தொடர்ந்து தரப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவை போக மின்சார காலமாகிய இக்காலத்தில் தொலைக்காட்சி மூலமாகவும், திரைப்படங்கள் மூலமாகவும் இக்கருத்து சிறப்பாகத் தரப்படுகின்றது. மேலும், “புகை புகமுடியா இடத்திலும் பேய் புகும்” என்றும், “பெண் என்றால் பேயும் இறங்கும்” என்றும், “வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறியது போல” என்றும், “புதையலைப் பூதம் காத்தது போல்” என்றும், “முடவனை மூர்க்கன் கொன்றால் மூர்க்கனை முனி தான் கொல்லும்” என்றும் (இப்பழமொழி விவேகசிந்தாமணியில் 59வது பாடலில் பயன்படுத்தப்பட்டுள்ளது) பலவிதமான பழமொழிகள் நம் மொழியில் பேச்சு வழக்காகப் பன்நெடுங் காலந்தொட்டு வழக்கத்தில் உள்ளன. இவை மூலம் பேய் பற்றிய கருத்துக்கள் எந்த அளவிற்கு நம் மக்களிடையே கலந்துள்ளன என்பவற்றைக் காண முடிகிறது.

பொதுவாக மனிதர்களுக்குப் பேய் என்றாலே பயம் உண்டாகும். ஆனால் அதே பேய் – கதைகளிலும், திரைப்படங்களிலும் வரும் போது அது சிறந்த பொழுது போக்காக மக்களுக்கு அமைகிறது. உண்மையில் மக்களுக்கு பயத்தைத் தரும் பேய் எது என்றால், அது உள்ளூர்ப் பேய்கள் ஆகும். உள்ளுர்ப் பேய்கள் என்பவை அவ்வூர்ப் பகுதியில் நீரில் மூழ்கியோ, தற்கொலை செய்தோ அல்லது கொலை செய்யப்பட்டோ இறந்தவர்களின் ஆவி அங்கு உலவுவதாக அல்லது இருப்பதாக எண்ணும் நம்பிக்கை. இந்த நம்பிக்கையையே பேய் என்கின்றனர். தனி மனித அச்சத்திற்குரிய இடங்களான குளம், கிணறு, மரம், அடர்காடு, பாழடைந்த வீடு, இருள் சூழ்ந்த இடம் போன்ற இடங்களில் எல்லாம் இவை தங்கி இருப்பதாக நம்புகிறார்கள். எனவே தான் பாரதியாரும் தான் எழுதிய “நெஞ்சு பொறுக்குதில்லையே” என்ற பாடலில்,

                    “அஞ்சி யஞ்சிச் சாவார் – இவர்

                     அஞ்சாத பொருளில்லை அவனியிலே

                     வஞ்சனைப் பேய்கள் என்பார் – இந்த

                     மரத்தில் என்பார் அந்தக் குளத்தில் என்பார்

                     துஞ்சுது முகட்டில் என்பார் – மிகத்

                     துயர்ப்படுவார் எண்ணிப் பயப்படுவார்”

என்று பாடியுள்ளார். (இப்பாடல் “பராசக்தி” என்ற திரைப்படத்தில் பயன் படுத்தப்பட்டுள்ளது). இதே கருத்தில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமும்,

                   “வேப்பமர உச்சியில் நின்னு பேயொன்னு ஆடுதுன்னு

                    விளையாடப் போகும் போது சொல்லி வைப்பாங்க – உந்தன்

                    வீரத்தைக் கொழுந்திலேயே கிள்ளி வைப்பாங்க

                    வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை

                    வேடிக்கையாகக் கூட நம்பி விடாதே – நீ

                    வீட்டுக்குள்ளே பயந்து கிடந்து வெம்பி விடாதே”

என்று “அரசிளங்குமரி” திரைப்படத்திற்குப் பாடல் எழுதியுள்ளார். இத்தகைய பாடல்கள் எழுவதற்குக் காரணம், பேய் பற்றிய நம்பிக்கை அன்றைய மக்களிடையே வழிவழியாகத் தொடர்ந்து இருந்து வந்ததாலேயே ஆகும்.

மேலும், ஓர் ஊரில் உள்ளவர்களுக்கு அவ்வூரிலுள்ள பேய்கள் பற்றிய பயம் இருக்கும். ஆனால், அயலூரிலிருந்து புதிதாக அவ்வூருக்கு வருபவர்களுக்கு அவ்வூரிலுள்ள பேய்கள் பற்றிய விபரம் தெரியாததால் அவர்கள் அங்குள்ள பேய்களுக்குப் பயப்படாமல் இருத்தலும், அதேநேரம் அவ்வூரிலுள்ள நீர் நிலைகளின் ஆழமும், அதில் வாழும் உயிரினங்கள் பற்றிய விபரமும் தெரியாததால் அவர்கள் நீர் நிலைகளுக்குப் பயப்படுவதும் இயற்கையாகவே இருந்தது. ஆகவே தான், “உள்ளூர்க்காரனுக்குப் பேய்க்குப் பயம், அயலூர்க்காரனுக்குத் தண்ணீருக்குப் பயம்” என்ற பழமொழி ஏற்பட்டது.

பேய்கள்

இந்தப் பேய்கள் தமக்கு விருப்பமானவர்களின் உடலுக்குள் புகுந்து, அவர்களை சரியாக உணவு உண்ண முடியாமலும், உறங்க முடியாமலும் செய்வதோடு அவர்களைத் தம் விருப்பப்படிச் செயல்படச் செய்கிறது என்றும் பேய் மீது நம்பிக்கையுடையவர்கள் கூறுவர். மேலும், இப்பேய்கள் பெரிதும் பெண்களையே பிடிக்கிறது என்றும்; இவற்றின் ஆதிக்கம் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் அதிகம் இருக்கும் என்றும்; இவர்களைக் குணமாக்க நாட்டில் எந்த மருந்தும் கிடையாது என்றும், பேய் விரட்டும் கோடாங்கி என்பவரை அழைத்து வந்து உடுக்கடித்துப் பேய் விரட்டினால்தான் சரியாகும் என்றும் அவர்கள் நம்பினர். நான் கழுகுமலையில் சிறுவனாய் இருந்த காலத்தில் எங்கள் பக்கத்து வீடு, பக்கத்துத் தெரு ஆகிய இடங்களில் இரவில் உடுக்கடித்துப் பேய் விரட்டுவதைப் பலமுறை பார்த்திருக்கிறேன். அன்றைய நிகழ்வை இப்போது நினைக்கும்போது “ரங்கோன்ராதா” என்னும் திரைப்படத்தில் உடல்நிலை, மனநிலை சரியாக இருக்கும் பானுமதிக்குப் பேய் பிடித்திருக்கிறது என்று மீண்டும் மீண்டும் சொல்லி, பேய் பிடித்திருக்கிறது என்ற கருத்தை மற்றவர்களிடமும் உருவாக்கி விடுவர். அதற்குப் பேயோட்டும் கோடாங்கியாக கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் வந்து உடுக்கடித்து பேய் விரட்டும் காட்சியும் அதன் கருத்தும் என் நினைவிற்கு வருகிறது. அன்று அவ்விதமாக உடுக்கடித்துப் பேய் விரட்டப்பட்டவர்களுக்கு, மீண்டும் அதே பேய் வந்து விட்டதாகவும் கூறக் கேட்டிருக்கிறேன். மொத்தத்தில் பாதிக்கப்பட்டவரது உடலின் உண்மைநிலை என்னவென்று தெரியாமல் உடுக்கடித்துப் பேய் விரட்டுதல் அல்லது அவர்களைக் கோவில்களுக்கு அழைத்துச் சென்று சில நாட்கள் தங்கவைத்தல் போன்ற செயல்களையே அன்று மக்கள் செய்தனர்.

ஒரு கருத்துக்கு இரு கருத்துக்கள் எழுவது இயல்பு. அதுபோல் பேய்கள் உண்டு என்று சொல்பவர்கள் மத்தியில், பேயாவது பிசாசாவது? அப்படி எதுவும் கிடையாது என்று சொல்பவர்களும் அன்றும் இருந்தனர், இன்றும் இருக்கின்றனர். இவர்கள் பேய் என்று சொல்வதெல்லாம் வெறும் மனப்பயம்தான். “அரண்டவன் (பயந்தவன்) கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்” என்று பழமொழியையும் சொல்லிக் காட்டுவார்கள். மேலும், இதை விளக்க ஒரு பாடலையும் அதன் விளக்கத்தையும் கூறுவார்கள். அப்பாடல் யாதெனில்,

                     “கண்டது கயிறு

                      கடித்தது மாங்கொட்டை

                      அடித்தது பாம்பு

                      பிடித்தது நோய்”

என்பதாகும். அதாவது ஒருவன் வெளிச்சமில்லாத இருளில் தெருவழியே நடந்து சென்று கொண்டிருக்கிறான். அப்போது காலடியில் கிடந்த கயிற்றை பாம்பென நினைத்துத் தாண்டுகிறான். அவ்வாறு தாண்டி காலை தரையில் ஊன்றும் போது அவ்விடத்தில் நன்கு காய்ந்து பாதி அளவு வாய் திறந்தது போன்று கிடந்த மாங்கொட்டையில் அவனது கால் பெருவிரல் பட்டு கவ்விக் கொள்கிறது. அவன் தன் கால் பெருவிரலை பாம்புதான் கவ்விக் கடிக்கிறது என்று நினைத்து, “பாம்பு பாம்பு” என்று சொல்லி வேகமாகக் காலை உதறுகிறான். உதறிய வேகத்தில் பெருவிரலில் கவ்வி இருந்த மாங்கொட்டையின் விளிம்பு பெருவிரலில் சிறு காயத்தை ஏற்படுத்தி இருளில் எங்கோ சென்று விழுகிறது. அவனது குரல் கேட்டு தெருவிலுள்ள பலர் கையில் கம்பு எடுத்துக் கொண்டு, “எங்கே பாம்பு?” என்று கேட்டுக் கொண்டே ஓடி வருகிறார்கள். அந்த நேரம் தற்செயலாக அந்த இடத்தில் பாம்பு ஒன்று வர அவர்கள் அந்தப் பாம்பை அடித்துக் கொன்றனர். மாங்கொட்டை கவ்வியிருந்த பெருவிரலில் சிறு சிராய்ப்பு ஏற்பட்டதனால், அவ்விடத்தில் சிறிது இரத்தம் கசிந்தது. இதைப் பார்த்த எல்லோரும் பாம்பு கடித்து விட்டதென உறுதி செய்கின்றனர். இவனும் தன்னைப் பாம்பு கடித்துவிட்டது என்ற அசைக்க முடியா நம்பிக்கையில் கவலை கொண்டு உணவு உண்ணாமலும், உறங்காமலும் இருந்து நோய் வாய்ப்படுகிறான். இது போன்றது தான் பேய். எனவே, மனிதன் கொண்ட பயம்தான் பேயாகிறது. அந்தப் பேயே நோயாகிறது என்று விளக்கம் சொல்வார்கள்.

பேய்கள்

பேய்கள் பற்றிய நம்பிக்கை அன்று மிக அதிகமாக இருந்ததால் இயல்பாய் ஏற்படும் நோய்களுள் சிலவற்றையும் பேய் எனக் கருதி நோய்க்குத் தேவையான மருத்துவத்தைச் செய்யாது அறியாமையால் பேய் விரட்டுதல் போன்றவற்றைச் செய்தனர். இதன் காரணமாக அன்று இறந்தவர்கள் பலர். இன்று கல்வி வளர்ச்சியும் விழிப்புணர்வும் மக்களிடையே அதிகம் ஏற்பட்டுள்ளது. இது போக வீட்டிலும், தெரு போன்ற வெளியிடங்களிலும் அதிக ஒளி தரும் மின் விளக்குகள் இருப்பதால் இன்று இருள் பற்றிய பயமில்லை, அதனால் பேய் பிடித்தவர்களையோ அதை விரட்ட உடுக்கு அடித்தலையோ காண முடியவில்லை. இருந்தாலும் சில பாமர மக்களிடையே ஏதாவது நோய் வந்தால், எங்கோ பயந்து இந்த நோய் வந்துள்ளது என்று நினைத்து மந்திரித்து, திருநீறு போடும் வழக்கம் இன்றும் அரிதாக இருந்து வருகிறது.

இது போன்று அறியாமையில் செய்த மற்றொன்று “செய்வினை”” என்பதாகும். அதாவது ஒருவர்க்கு ஏதாவது பெரிய நோய் வந்தால், அது தற்செயலாகத் தனக்கு ஏற்பட்டிருக்கிறது என்று நினையாமல், தனக்கு வேண்டாதவர் மந்திரவாதியிடம் சென்று மாந்தரீகம் செய்து தனக்கு நோய் வரும்படி ஏவி விட்டிருக்கிறார் என்று நினைப்பதாகும். இவ்வாறு நினைப்பதால் நோய் வந்த இவரும் நோய்க்கு மருத்துவம் செய்யாது ஏதாவது ஒரு மந்திரவாதியிடம் சென்று அவர் கேட்கும் அதிகப் பணத்தைப் கொடுத்து அவர் தரும் “மை, திருநீறு” ஆகியவற்றை வாங்கி வந்து உடலில் பூசிக்கொண்டு இருந்து விடுவார்கள். இவ்வாறு செய்தனால் நோய் அதிகமாகி இதனாலும் பலர் இறந்தனர். இன்றும் இந்நம்பிக்கை சிலரிடையே இருக்கிறது.

அக்காலத்தில் அறியாமையும் மூடப் பழக்க வழக்கங்களும் மக்களிடையே மலிந்து காணப்பட்டன. நோய் வந்தபோது மருந்துவரிடம் செல்வதைவிட மந்திரவாதி, பூசாரி, ஜோதிடர் என்று இவர்களைத் தேடிச் செல்வதும், கோவிலுக்கு நேர்ச்சை செய்து, ஆடு அல்லது சேவல் வெட்டி மொட்டையடித்துக் கொள்வதும் செய்தனர். இதன் காரணமாக அன்று இறந்தவர்கள் பலர். ஆகவேதான், இச்செயலைக் கண்டித்து பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் “கல்யாணிக்குக் கல்யாணம்” என்ற திரைப்படத்தில் “குட்டுகளைச் சொல்லணுமா” என்ற பாடலில்,

            “இங்கே தலைவலியும் நோயும் வந்தா

             சாமிகளைச் சுத்துவீங்க

             இன்னும் ஜாதகத்தைப் பார்த்து விட்டு

             ஆடு கோழி வெட்டுவீங்க

             பலவித வைத்தியமும்

             படிச்சிருக்கும் டாக்டரிடம்

             உடல் நிலையைச் சொல்ல மாட்டீங்க

             மூச்சு நின்னு போனா கத்துவீங்க”

என்று எழுதியுள்ளார். இப்பாடல் கூறும் கருத்துப் போன்று எவ்வளவோ கற்று வளர்ச்சியடைந்துள்ள இக்காலத்திலும் இப்பழக்கம் சற்று மாறுபாடுடன், “நோயுக்கும் பார், பேய்க்கு பார், சாமிக்கும் பார்” என்ற நிலையில் நடைபெறுகிறது. அதாவது நோய் வந்த போது மருத்துவமனை சென்று சிறப்பான மருத்துவம் செய்து குணமாக்கிக் கொண்டு அதன்பின் கோவிலுக்குச் சென்று நேர்ச்சை நிறைவேற்றுதல் என்ற முறையில் நடைபெறுகிறது.

மின்சாரம் இல்லாத அக்காலத்தில் வாழ்ந்த மக்கள் தங்களுக்கும் தங்கள் பிள்ளைகளுக்கும் நோய் வந்தபோது அறியாமையாலும் மூடப் பழக்க வழக்கத்தாலும் என்னென்ன செய்தனர் என்பதில் சிலவற்றைக் கண்டோம்.

இன்று மருத்துவம் அதி உன்னத வளர்ச்சியடைந்துள்ளது. அதன் காரணமாக இன்றுள்ளோர்க்கு நோய் ஏற்படும் போது சரியான மருத்துவம் செய்து குணமாக்கிக் கொள்ள முடியும் என்பது மகிழ்ச்சி தருவதாகும். இக்காலத்தில்,

                      “நோய்நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும்

                       வாய்நாடி வாய்ப்பச் செயல்” (குறள்:948)

என்பதற்கேற்ப நோய் ஏற்பட்டால் அந்நோயின் தன்மையைப் பல சோதனைக் கருவிகள் மூலம் அறிந்து; அதன் பின், அதை எதனால் எவ்விதம் நீக்கலாம் என முடிவு செய்து, அந்நோய்க்குத் தக்க மருத்துவம் செய்து விரைவில் நன்கு குணமாக்குகின்றனர். அதிலும் குறிப்பாக உடல் உள் உறுப்புகளில் ஏற்படும் நோய்களை அறுவை சிகிச்சை மூலம் குணமாக்கி உயிர் பிழைக்க வைக்கின்றனர். இது மனித குலத்திற்குக் கிடைத்த மாபெரும் கொடையாகும்.

இவ்விதமுள்ள பழைய புதிய மருத்துவத்தின் சிறப்புகளை ஒப்பிட்டு 1959ம் வருடம் வெளிவந்த “பாஞ்சாலி” என்ற திரைப்படத்திலுள்ள ஒரு பாடல் நன்கு விளக்குகிறது.

              புலியண்ணன்:

              “நம்நாட்டு வைத்தியத்தை லேசா எண்ணாதே

               நன்மையெல்லாம் புரிஞ்சுக்காமெ அலட்சியம் பண்ணாதே

               சும்மா கெடக்கும் காட்டுவேரும் மூலிகையும் கொண்டு

               சுக்கு மிளகு திப்பிலிக்காயம் சீனாக்கற்கண்டு சேர்த்து

               செம்மையாக பக்குவம் செய்த லேகியம் இதையுண்டு- பல

               சீக்கையும் குணமாக்கலாம்.

               பொம்மண்ணன்:

               இங்கிலீசு வைத்தியத்தை எளிசாய் எண்ணாதே

               சங்கதியெல்லாம் தெரிஞ்சுக்காமெ அலட்சியம் பண்ணாதே

               அங்கத்தைப் பிளந்து நோயைக் களைந்து

                அப்புறப் படுத்திப் போடுறார்.

                அரை நொடியில் உறுப்பைப் பிரித்து

                தையல் போட்டு மூடுறார்

                விஞ்ஞானக் கலை வளர்ச்சியினால்

                விளைந்த தெனக் கொண்டாடுறார்”

                                   (பாடல்: கு.சா.கிருஷ்ணமூர்த்தி)

இவ்விதம் மின்சாரம் இல்லாத காலத்திலிருந்த மருத்துவத்தோடு இன்றைய நவீன மருத்துவத்தை ஒப்பிடும் போது இன்றைய மருத்துவம் அதிஉன்னத வளர்ச்சியை அடைந்துள்ளது நன்கு புரியும். இன்று மக்களில் பலரும் கல்வி கற்றுத் தேர்ந்தவர்களாக உள்ளனர். அவர்கள் நவீன மருத்துவத்தையே பயன்படுத்துகின்றனர். ஆனாலும், “மழை விட்டும் தூவானம் விடவில்லை” என்பது போல், இன்றும் மருந்தின்றி குணமாகிவிடும் என்ற நம்பிக்கையில் மந்திரித்தல், கோவிலுக்கு நேர்ச்சை செய்தல், தாயத்து கயிறு போன்றவை கட்டுதல், கண் திருஷ்டி, பார்வை பார்த்தல், சுகமளிக்கும் ஜெபக் கூட்டங்களுக்குச் செல்லுதல் போன்றவை அவரவர் நம்பிக்கைக்கு ஏற்ப இருக்கத்தான் செய்கிறது. இதில் கற்றவர், கல்லாதவர் என்ற பாகுபாடு இல்லை.

எவ்வளவு தான் மருத்துவம் முன்னேற்றத்தைக் கண்டிருந்த போதும், நம்மை விட்டு நோய்கள் நீங்கிய பாடில்லை. நாகரீக வளர்ச்சியால் உணவுப்பொருள் உற்பத்தி செய்வதில் ஏற்பட்டுள்ள மாற்றம், உண்ணும் உணவில் ஏற்பட்டுள்ள மாற்றம், வாழ்க்கை நடைமுறையில் ஏற்பட்டுள்ள மாற்றம் என்று நாம் அதிக அளவில் இயற்கையை விட்டு விலகி வாழ்வதால் இன்று நோய்களும் மருந்துகளும் அதிகமாகியுள்ளன. ஆகவே, “மூக்குள்ள மட்டும் சளி” என்றாற்போல் மனிதகுலம் உள்ளவரை, “நோயும் மருந்தும்” என்பது இருந்து கொண்டேதான் இருக்கும்.

அடுத்த பதிவு 14 : மி.மு., மி.பி : உணவு

 

கலை செய்யும் கலகம்

அசின் சார், கழுகுமலை.

கலை செய்யும் கலகம்

ள்ளிக்கூட நாட்களில் எனக்குச் சொல்லிக் கொடுத்த வாத்தியார் ஒருவர் சொன்ன நிகழ்வொன்றை இப்போதும் நினைத்துப் பார்க்கிறேன்.

“உலக வரைபடத்தில் குட்டி நாடாக இருக்கும் ஜப்பான், உழைப்பில் முன்னோடியாக இருக்கிறது. ஏனென்றால், அங்குள்ள மக்கள் ஏதாவது போராட்டம் செய்தால் கூட, தங்களின் உழைப்பை முடக்கிப் போராடுவதில்லை. மாறாக, தங்கள் கோரிக்கைகளை, கண்டனத்தைத் தெரிவிக்கக் கருப்பு நிற பேட்ஜ் ஒன்றினைத் தம் சட்டையில் அணிந்து கொண்டு, தங்களுக்குரிய அன்றாட வேலைகளைத் தொய்வின்றி செய்வார்கள். இதனால் அவர்களின் உழைப்பும், தொழிற்சாலையின் உற்பத்தியும் வீணாவதில்லை.

இன்னோர் விதமாகவும் அவர்கள் தங்கள் போராட்டத்தைக் கையில் எடுப்பார்கள். உதாரணத்திற்கு, ஒரு ஷூ தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை பார்க்கும் தொழிலாளிகள் என்று வைத்துக் கொள்வோம். அவர்கள் தங்கள் கோரிக்கையை முன்னிறுத்திப் போராடும் போது, ஏதாவது ஒரு காலுக்குரிய ஷூவை மட்டும் தயாரித்து உற்பத்தியைப் பெருக்கி, விற்பனையை முடக்கி விடுவார்கள். இப்படியாக உழைப்பு, உற்பத்தி இரண்டும் தடைபடாமல், காலத்தை வீணடிக்காமல், தங்களுக்குரிய போராட்டக் குணத்தை வெளிப்படுத்தும் மக்கள் – ஜப்பானிய மக்கள்! இதனாலேயே ஜப்பான் உழைப்பில் உயர்ந்ததாக இருக்கிறது” என்று கூறினார்.

கலை செய்யும் கலகம்

அந்த நாட்களில், அவ்வப்போது நம் நாட்டிற்குள் எழுந்த பற்பல மோதல்களால், எதற்கெடுத்தாலும் கோஷம், கடையடைப்பு, கல்வீச்சு, கையடி வாயடியால் விளையும் கலகலப்பு, கண்ணீர்ப்புகை, 144 தடை! இதனால், பதறிப் பதறி கூண்டுக்குள் அடைபட்ட புள்ளினம் போல மக்கள் தங்களைத் தாங்களே சொந்த வீட்டிற்குள் சிறைப்படுத்திக் கொள்ளும் அவலம். இப்படிப் பார்த்துப் பழகிய அந்த வயதில் ஆசிரியர் சொன்னது புதுமையாகத் தெரிந்தது.

இதே போல, ஒரு கோரிக்கையை நிறைவேற்ற முடியாத மேலாளர் ஒருவர், அதை எப்படி கோரிக்கையாளரின் மனம் நோகாதவாறு சொல்வது என்பதற்கு ஒரு சான்று.

தமிழக முதல்வராக கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் இருந்த சமயம். சட்டமன்றக் கூட்டத்தின் போது, சட்டமன்ற உறுப்பினர் ஒருவர், தம் தொகுதியிலுள்ள ஓர் ஊருக்குத் தீயணைப்பு நிலையம் வேண்டுமென்று கோரினார். அதற்குப் பதிலளித்த முதல்வர், “தீயணைப்பு நிலையம் அமைப்பதாக இருந்தால், அங்கு குறிப்பிட்ட அளவு ஜனத்தொகை இருக்க வேண்டும். தாங்கள் குறிப்பிட்ட ஊரில் அந்த அளவு ஜனத்தொகை இல்லை. எனவே, உடனடியாக அந்த ஊரில் ஜனத்தொகையைப் பெருக்க ஏற்பாடு செய்யுங்கள். உங்கள் கோரிக்கையை நிறைவேற்ற நான் ஏற்பாடு செய்கிறேன்” என்று சுவைபடக் கூறினார். இது அந்நாட்களில் செய்தித் தாளில் படித்த ஞாபகம்.

கலை செய்யும் கலகம்

உழைப்பு கெடாமல் போராடுவதும், கோரிக்கையை நிறைவேற்றுவதில் உள்ள தன்மைகளைப் பக்குவமாகக் கூறி விளங்க வைப்பதும் ஒரு நிர்வாகத்தின் அழகியல். இத்தன்மையே ஒரு நிர்வாகத்திற்குள் ஆரோக்கியமான நல்லுறவுப் பாதையை அமைத்துத் தரும். இதையே மேலுள்ள நிகழ்வுகள் நமக்குக் காட்டுகின்றன.

ஒரு குழந்தையைக் கண்டிக்கும் தந்தை எப்போதும் தன் முகத்தை விகாரமாக்கிக் கொண்டு, கோபமாகப் பேசி, வன்மையுடன் நடந்து கொள்வதில்லை. அது செய்யும் சேட்டைக்கு ஏற்ப செயல்படுவார். சில நேரம் வன்மையுடன் கடிந்து, சிலநேரம் பொய்யான குட்டு குட்டி, சிலநேரம் செல்லமாகக் காதைத் திருகி, சிலநேரம் மெதுவாகக் கன்னத்தைக் கிள்ளி, சிலநேரம் தோளோடு தோளாக அணைத்துக் கொண்டு திருத்த முயல்வார். வள்ளுவர்கூட, “கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம் நீங்காமை வேண்டு பவர்” என்ற குறளில், தவறிழைத்த ஒருவரைக் தண்டிக்கும் போது கடுமையோடு மென்மையாக நடந்து கொள்கிறவர்களின் செல்வாக்குதான் தொய்வின்றி நீண்ட நாள் நீடிக்கும் என்று கூறுகிறார்.

கலை செய்யும் கலகம்

நாடு தழுவிய மிகப் பெரிய போராட்டங்கள் கடுமையாக நிகழ்ந்த போது கூட, கலைத்திறன் வழியாகத் தங்கள் போர்குணத்தைத் வெளிப்படுத்தியவர்களும் உண்டு. நம் தேச சுதந்திரப் போராட்டத்தின் போது பலதரப்பட்ட கலைஞர்களும் சும்மா இருக்கவில்லை. கவிதை, ஓவியம், கூத்து, மேடை நாடகம் என்று பற்பல நிலைகளிலும் தங்கள் போர்க்குணத்தை வெளிப்படுத்தி, ஆங்கில அரசால் தடை உத்திரவு பெற்றவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். அந்தளவுக்குக் கலைஇலக்கியம் ஆட்சியாளர்களுக்கு மிகப் பெரிய இடைஞ்சலைத் தந்திருக்கிறது.

தெ.கிருட்டினசாமிப் பாவலர், 1922-க்குப் பின்னர் கதரின் வெற்றி, தேசியக் கொடி, பதிபக்தி, கவர்னர்ஸ் கப், பம்பாய் மெயில் போன்ற நாடகங்களை நாட்டு விடுதலை, சமுதாய சீர்திருத்தம், தனிமனித ஒழுக்க மேம்பாடு, மது விலக்கு, தீண்டாமை ஒழிப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு எழுதினார். அக்காலத்தில், கதரின் வெற்றி, தேசபக்தி நாடகங்கள் ஆங்கில அரசால் தடை செய்யப்பட்டவை. இவைபோன்றே, பாரதி, நாமக்கல் கவிஞர் போன்றோரும் இப்படிப்பட்ட தொல்லைகளுக்கு ஆட்படவர்கள்தாம்.

கலை செய்யும் கலகம்

உலகம் தோன்றிய காலத்திலிருந்து இன்றுவரை படைப்பாளிகள் தாங்கள் பார்த்த, அனுபவித்த சிரமங்களைத் தங்களின் படைப்புகள் மூலமாகப் பேசியே வந்திருக்கிறார்கள். இதிலுள்ள சிறப்பு என்னவென்றால், ஒரு சிறந்த படைப்பு அது எழுந்த காலத்தையும் தாண்டி, தொடர்ந்து போராடிக் கொண்டே இருப்பதுதான். சான்றாக, பிக்காஸோ வரைந்த ஓவியமான “குவர்னிகா” (1937), சார்லி சாப்ளினின் “மார்டன் டைம்ஸ்” (1936) போன்ற படைப்புகள் இன்றும் ஆதிக்க சக்திகளை வெளிச்சம் போட்டு நம்மை எச்சரித்த வண்ணமே இருக்கின்றன. இச்சான்றுகள், கடல் நீரில் ஓரிரு துளிகள் போல.

இதனின்று, அழகியலோடு கூடிய மென்குணப் படைப்புகளும், வன்குணத் தன்மையை வெளிபடுத்தி இருப்பதைக் காண்கிறோம். இந்த வகையில் சமீபகாலமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர் நகரில் நடந்த நிகழ்வுகள் பற்றிய செய்திகள் குறிப்பிடத்தக்கன.

கலை செய்யும் கலகம்

அதாவது, நகரிலுள்ள பிரதான சாலைகளில் ஏற்பட்டுள்ள பள்ளங்கள்; தேங்கிக் கிடக்கும் சாக்கடை நீர்; திறந்து கிடக்கும் பாதாள சாக்கடை வாயில்கள்; நடைபாதையில் சிதறிக் கிடக்கும் கான்கிரீட் பொருட்கள் என்று பல்வேறு விபத்துக் காரணிகள், பாதசாரிகளையும் வாகனப் பயணிகளையும் அச்சுறுத்திய வண்ணம் இருந்திருக்கின்றன. இதைக் கண்ட சமூக ஆர்வலர்கள் இவற்றை மக்களுக்கு எச்சரிக்கவும், அதிகாரிகளின் பார்வைக்குக் கொண்டு செல்லவும் வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டனர். அதாவது, சாலையில் தேங்கி நிற்கும் நீரில் முதலை, பாதாளச் சாக்கடை வாயில்களில் மூழ்கும் மனிதர், சாலையோர நீர்த் தேக்கத்தில் தாமரைக் குளம், சாலையோரப் பள்ளங்களில் மனிதரை விழுங்கும் அனகோண்டா இப்படிப் பல விதமாகக் கற்பனைக்கெட்டிய தூரம் வரை முருகியற் பார்வையுடன் சித்தரித்திருந்தனர்.

கலை செய்யும் கலகம்

பெங்களூர் சென்றபின் ரஞ்சித் என்னுடன் பகிர்ந்து கொண்ட பல செய்திகள் “கலைஇலக்கியம்” சார்ந்தவை. அந்நகரில் அதற்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை வியந்து கூறி இருக்கிறான். அடிக்கடி நிகழும் ஓவியக் கண்காட்சி, சுடுமண் பயிற்சி, மேஜிக் பயிற்சி, நவீன மற்றும் பாரம்பரிய நடனங்கள் மற்றும் நாடகங்கள் குறிப்பிடத்தக்கன. இளம் வயது முதலே இவற்றைப் பார்த்து வளரும் குழந்தைகள் எந்த ஒரு பிரச்சினையையும் கலைக் கண்ணோடு அணுகுவதாகவே நினைக்கிறேன். அதனால்தான், அவர்களுக்கு இப்படியொரு யோசனை வந்துள்ளதாகத் தோன்றுகிறது.

கலை, கண்டவனையும் கொண்டவனையும் கலகம் செய்ய வல்லது. அதனால்தான், “வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைபெருக்கும் கவிப்பெருக்கும் மேவுமாயின் பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம் விழிபெற்றுப் பதவி கொள்வார்” என்று பாரதியார் உசிதமாகப் பாடியுள்ளார். உண்மைதானே!

* * *